Published : 12 May 2023 10:24 AM
Last Updated : 12 May 2023 10:24 AM

இந்திய அணியில் எனக்கான முதல் வாய்ப்புக்காக இறைவனை வேண்டுவேன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால்

யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சாம்சன்

கொல்கத்தா: நடப்பு ஐபிஎல் சீசனின் 56-வது லீக் போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இந்தப் போட்டியில் 150 ரன்கள் என்ற இலக்கை ராஜஸ்தான் வெற்றிகரமாக எட்டியது. அதில் 98 ரன்கள் இளம் பேட்ஸ்மேன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது பங்களிப்பாக வழங்கி இருந்தார்.

47 பந்துகளில் இந்த ரன்களை அவர் எடுத்திருந்தார். 13 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் இதில் அடங்கும். அவரது ஸ்ட்ரைக் ரேட் 208.51. 21 வயதான அவர் நடப்பு சீசனில் 12 போட்டிகளில் விளையாடி மொத்தம் 575 ரன்களை அவர் எடுத்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 52.27. கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஆட்ட நாயகன் விருதையும் அவர் வென்றிருந்தார்.

“நான் எனது ஆட்டத்தில் மட்டுமே இப்போது கவனம் செலுத்தி வருகிறேன். எனது கள செயல்பாட்டில் எனது கவனம் உள்ளது. ஆண்டவன் எனக்காக வகுத்து வைத்துள்ள திட்டம் நிச்சயம் நடக்கும் என நம்புகிறேன். என்னால் கட்டுப்படுத்த முடிவதை நான் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். நான் கிரிக்கெட் விளையாட தொடங்கிய ஆரம்ப நாட்களில் இருந்தே இந்த எண்ணம் எனக்குள் உள்ளது.

என்றாவது ஒருநாள் இந்திய அணியின் ஜெர்சியை அணிந்து விளையாட வேண்டும் என்பதுதான் அது. அந்த வாய்ப்புக்காக நிச்சயம் நான் பொறுமை காப்பேன். அந்த வாய்ப்பு வரும் வரை நான் தொடர்ந்து முயற்சி செய்வேன். நான் செய்ய வேண்டியதை செய்து கொண்டே இருப்பேன். எனக்கான முதல் வாய்ப்புக்காக இறைவனை வேண்டுவேன்” என ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். கடந்த 2020-ல் நடைபெற்ற இளையோர் உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேனாக ஜெய்ஸ்வால் ஜொலித்தார். மொத்தம் 400 ரன்களை அந்த தொடரில் அவர் எடுத்திருந்தார். அதோடு தொடர் நாயகன் விருதையும் அவர் வென்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x