Published : 12 May 2023 07:49 AM
Last Updated : 12 May 2023 07:49 AM
எம்எஸ் தோனி, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கடந்த 2019-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்த அவர், 2007-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையையும், அதன் பின்னர் அடுத்த 4 ஆண்டுகளில் 50 ஓவர் உலகக் கோப்பையையும் இந்திய அணிக்கு வென்று கொடுத்தார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெற்று கிட்டத்தட்ட 4 வருடங்கள் ஆகிறது. ஆனாலும் 41 வயதான அவர், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக எழுச்சியுடன் விளையாடி வருகிறார். இந்த சீசனில் தன்னை தானே புதுப்பித்துக்கொண்டு பின்வரிசை பேட்ஸ்மேனாக களமிறங்கி கடைசி 3 ஓவர்களை மட்டும் குறிவைத்து எதிரணியின் பந்து வீச்சை வெளுத்து வாங்குகிறார்.
ஆடுகளத்தில் சமயோஜிதமாக செயல்படுவதில் அசத்தும் தோனி, பேட்டிங் வரிசையில் 8-வது வீரராக களமிறங்கி அணிக்கு பயன்படக்கூடிய வகையில் சில பங்களிப்புகளை வழங்கி வருகிறார். பின் வரிசையில் அவர், வெளிப்படுத்தி வரும் செயல்திறனால், இந்த சீசனில் சிஎஸ்கே பிளே ஆஃப் சுற்றை நெருங்கி உள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று முன்தினம் டெல்லி அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் தோனி 9 பந்துகளை சந்தித்து 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு 20 ரன்கள் சேர்த்தார்.
இறுதிக்கட்டத்தில் அவரது மட்டை வீச்சின் காரணமாகவே சிஎஸ்கே அணியால் 167 ரன்கள் வரை சேர்த்து போராடக்கூடிய அளவிலான இலக்கை கொடுக்க முடிந்தது. இதன் பின்னர் பந்து வீச்சின் போது மைதானத்தின் தன்மையை சரியாக பயன்படுத்திக் கொண்ட சிஎஸ்கே 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இந்த சீசனில் தோனியின் பேட்டிங் சிஎஸ்கேவுக்கு புதிய பரிமாணத்தை சேர்த்துள்ளது.
அவரது பேட்டிங் சராசரி 48 ஆக உள்ளது. சிஎஸ்கேவில் உள்ள பேட்ஸ்மேன்களில் அதிக சராசரியை கொண்ட 2-வது பேட்ஸ்மேனாக தோனி திகழ்கிறார். மேலும் அவரது ஸ்டிரைக் ரேட் 204.25 ஆகவும் இருக்கிறது. இது சக பேட்ஸ்மேன்களை விட அதிகமாக உள்ளது. பேட்டிங்கில் 8-வது வீரராக களமிறங்குவது குறித்து டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு பின்னர் தோனி கூறும்போது, “இதுதான் என் வேலை, இதைத்தான் நான் செய்யவேண்டும். என்னை நிறைய ஓட வைக்காதீர்கள், என்று சக அணி வீரர்களிடம் கூறினேன். அது வேலை செய்கிறது.நான் செய்ய வேண்டியது இதுதான். எதிர்கொள்ளும் பந்துகளில் சிறந்த பங்களிப்பை வழங்குவது மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.
இதற்கு முந்தைய சீசன்களில் தோனி பெரும்பாலும் 4 முதல் 6-வது இடங்களில்தான் பேட்டிங்கில் களமிறங்குவார். முதலில் நிதானமாகவே விளையாடும் பழக்கம் கொண்ட தோனி ஆட்டத்தின் இறுதிப்பகுதியில்தான் மட்டையை வேகமாக சுழற்றுவார். ஆனால் இந்த சீசனில் 8-வது வீரராக களமிறங்கி கடைசி 3 ஓவர்களை மட்டும் குறித்து வைத்து செயல்படுகிறார்.
இதற்கு அவருக்கு காலில் ஏற்பட்டுள்ள காயம் கூட காரணமாக இருக்கலாம். எனினும் காயத்தை சரியான முறையில் நிர்வகித்துக் கொண்டு பேட்டிங்கில் சில கேமியோக்களை விளையாடி சென்னை ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.
சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறும்போது, “தோனிக்கு தான் நீண்ட நேரம் பேட்டிங் செய்யப் போவது இல்லை என்பது தெரியும். ஏனெனில் எங்கள் அணியில் பேட்டிங் வரிசை நீளமாக உள்ளது. இதனால் தோனி கடைசி 3 ஓவர்களில்தான் கவனம் செலுத்துகிறார். குறிப்பிட்ட வழியில் பயிற்சியின் போது பந்துகளை வலுவாக அடிக்கிறார். அதற்கான பலனையே தற்போது போட்டிகளில் காண முடிகிறது” என்றார்.
நடப்பு சீசனில் தோனி இதுவரை..
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT