Published : 11 May 2023 12:12 PM
Last Updated : 11 May 2023 12:12 PM
சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் தோனி நீண்ட நேரம் பேட் செய்வதில்லை. ஆனாலும் அதிரடியாக ஆட்டத்தை அணுகி அமர்க்களப்படுத்தி வருகிறார். அவர் பேட்டிங் ஆர்டரில் சற்றே முன்னதாக களம் காண வேண்டும் என ரசிகர்கள் விரும்புகின்றனர்.
நேற்று டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 9 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து அசத்தினார். இந்த சூழலில் நடப்பு சீசனில் தோனி தனக்கு ஏற்ற வகையில் குறிப்பிட்ட பயிற்சியை மட்டுமே மேற்கொண்டு வருவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங் தெரிவித்துள்ளார். டெல்லி அணி உடனான வெற்றிக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை பகிர்ந்துள்ளார்.
முன்னதாக கடந்த மாதம் தோனி முழங்கால் காயத்திற்கு சிகிச்சை பெற்று வருவதாக ஃபிளெமிங் தெரிவித்திருந்தார். “தோனி குறிப்பிட்ட பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். களத்தில் நீண்ட நேரம் அவர் பேட் செய்யப் போவதில்லை என்பதை அவர் அறிவார். அவருக்கு முன்னதாக களம் காணும் பேட்ஸ்மேன்களின் எண்ணிக்கை அதிகம். அதனால் அவர் கடைசி மூன்று ஓவரில் மட்டுமே முழு கவனம் செலுத்தி வருகிறார். பந்தை வலுவாக அடித்து ஆடும் பவர் ஹிட்டிங்கில் கவனம் செலுத்தி வருகிறார். அவரது ஹிட்டிங் திறன் குறித்து நாம் அனைவரும் அறிவோம். அவரது கேமியோ ஆட்டம் 20 ஓவர்கள் கொண்ட இன்னிங்ஸில் விலை மதிக்கத்தக்க ஒன்று” என ஃபிளெமிங் தெரிவித்துள்ளார். நடப்பு சீசனில் இதுவரை மொத்தமாக 47 பந்துகளை எதிர்கொண்டுள்ள அவர் 96 ரன்கள் எடுத்துள்ளார். இந்த சீசனில் சுமார் 40 பந்துகளை எதிர்கொண்ட வீரர்களில் சிறந்த ஸ்ட்ரைக் ரேட் கொண்டுள்ள வீரராக தோனி திகழ்கிறார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 204.25.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT