Published : 09 May 2023 06:46 AM
Last Updated : 09 May 2023 06:46 AM

கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவையாக இருந்ததால் சந்தீப் சர்மா மீது நம்பிக்கை வைத்திருந்தேன்: ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் வருத்தம்

சஞ்சு சாம்சன் | படம்: ஐபிஎல்

ஜெய்ப்பூர்: சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி ஓவரில் 17 ரன்களை பாதுகாக்க வேண்டியது இருந்ததால் சந்தீப் சர்மா மீது நம்பிக்கை வைத்திருந்ததாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்தார்.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. இந்த ஆட்டத்தில் 215 ரன்கள் இலக்கை துரத்திய ஹைதராபாத் அணிக்கு கடைசி ஓவரில் வெற்றிக்கு 17 ரன்கள் தேவையாக இருந்தன. இந்த ஓவரை ராஜஸ்தான் அணியின் மிதவேகப் பந்து வீச்சாளர் சந்தீப் சர்மா வீசினார். கடைசி பந்தில் வெற்றிக்கு 5 ரன்கள் தேவையாக இருந்தது.

வைடு யார்க்கராக சந்தீப் சர்மா வீசிய இந்த பந்தை ஹைதராபாத் அணியின் அப்துல் சமத் லாங் ஆஃப் திசையை நோக்கி விளாசினார். ஆனால் அது எல்லைக்கோட்டுக்கு அருகே ஜாஸ் பட்லரிடம் கேட்ச் ஆனது. இதனால் வானத்தை நோக்கி கையை காட்டியவாறு சந்தீப் சர்மா வெற்றியை கொண்டாடினார். எல்லைக்கோட்டுக்கு வெளியே ஹைதராபாத் அணியினர் தலையில் கையை வைத்து சோகமானார்கள். ஆனால் நொடிப்பொழுதில் இவை அனைத்தும் மாறின.

சந்தீப் சர்மாவின் சந்தோஷமும், ராஜஸ்தான் அணியின் கொண்டாட்டமும் கலைந்தது. காரணம் நடுவர் அந்த பந்தை நோ-பால் என அறிவித்தார். சந்தீப் சர்மா கிரீஸ் எல்லையை தாண்டி பந்து வீசியது தெரியவந்தது. இதனால் ராஜஸ்தான் அணியினர் அதிர்ச்சியில் உறைந்தனர். அதேவேளையில் ஹைதராபாத் அணியினர் வெற்றி பெறுவதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்ததை அறிந்து உற்சாகமானார்கள்.

நோ-பாலுக்கு மாற்றாக வீசப்பட்ட பந்தை அப்துல் சமத், சந்தீப் சர்மாவின் தலைக்கு மேலாக விளாச அது சிக்ஸரை நோக்கி பறந்தது. இதனால் அந்த அணியினர் மகிழ்ச்சியில் திளைத்தனர். மறுபுறம் கையில் இருந்த வெற்றியை தூக்கி எறிந்தது போன்ற உணர்வை சந்தித்த ராஜஸ்தான் அணி வீரர்கள் சோகத்தில் மூழ்கினர். ராஜஸ்தான் அணிக்கு இது 6-வது தோல்வியாக அமைந்தது.

ஹைதராபாத் அணிக்கு எதிரான தோல்விக்கு பின்னர் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறியதாவது:

ஐபிஎல் தொடர் இதைத்தான் உங்களுக்கு வழங்குகிறது, இது போன்ற போட்டிகள் ஐபிஎல் தொடரில் சிறப்பு வாய்ந்தவை. நீங்கள் விளையாட்டை வென்றதாக ஒருபோதும் உணர முடியாது. எந்த எதிரணியும் ஆட்டத்தை வெல்ல முடியும் என்று எனக்குத் தெரியும். ஹைதராபாத் அணியினரும் நன்றாக பேட்டிங் செய்தார்கள், ஆனால் கடைசி ஓவரில் சந்தீப் சர்மா மீது நம்பிக்கையுடன் இருந்தேன்.

இதேபோன்று ஒரு ஆட்ட சூழ்நிலையில் சிஎஸ்கேவுக்கு எதிராக சந்தீப் சர்மா எங்களுக்காக போட்டியை வென்று கொடுத்திருந்தார். ஹைதராபாத் அணிக்கு எதிராகவும் அவர், அதை செய்தார். ஆனால் நோ-பால் ஆட்டத்தின் முடிவை பாழாக்கியது. கடைசிபந்து நோ-பாலாக வீசப் பட்டுவிட்டது. அதற்கு மாற்றாக மீண்டும் பந்து வீச வேண்டும். அது அவ்வளவுதான், அதை பற்றி அதிகம் சிந்திக்கக்கூடாது.

முயற்சி செய்வோம்

சந்தீப் சர்மாவுக்கு என்ன செய்வது என்று தெரியும். வேலை முடிந்துவிட்டதாக நீங்கள் நினைக்கும் போது சில நொடிகள் மனநிலையில் சிறிய மாற்றம் இருக்கலாம். இது விளையாட்டின் இயல்பு.நேர்மையாகக் கூற வேண்டுமெனில் டி 20 வடிவிலான கிரிக்கெட்டை விளையாடுவது வாழ்க்கையில் எளிதான விஷயம்இல்லை. அதிலும் முக்கியமாக ஐபிஎல் தொடரில். ஒவ்வொரு ஆட்டத்திலும் தரமான கிரிக்கெட்டைவிளையாட வேண்டும். நாங்கள் திரும்பி வந்து அதை மீண்டும் செய்ய முயற்சிப்போம்.

இவ்வாறு சஞ்சு சாம்சன் கூறினார்.

‘வெற்றிக்கோட்டை கடந்ததில் மகிழ்ச்சி’

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் கூறும்போது, “உணர்ச்சிகள் விரைவாக மாறின. வெற்றி கோட்டை கடந்ததில் மகிழ்ச்சி. 215 ரன்கள் இலக்கை துரத்துவது எளிதானது இல்லை. பெரிய அளவிலான இலக்கை அடைவதற்கு வீரர்கள் சிறந்த பங்களிப்பை வழங்கினர். ஜெய்ப்பூர் ஆடுகளத்தின் அவுட்-பீல்டு விரைவானது. இதனால் எதிர்பார்த்ததைவிட அதிக ரன்களை பெறுவோம் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம்.

அபிஷேக் சர்மா சிறப்பான தொடக்கம் கொடுத்தார். அதன் பின்னர் அவருக்கு ராகுல் திரிபாதி உறுதுணையாக விளையாடினார். இவர்களைத் தொடர்ந்து கிளென் பிலிப்ஸ், ஹெய்ன்ரிச் கிளாசென் ஆகியோரும் சிறப்பாக விளையாடினார்கள். இறுதியில் அப்துல் சமத் ஆட்டத்தை அற்புதமாக முடித்துவைத்தார். இந்த திறன் அவருக்கு பயிற்சியின் வாயிலாக கிடைக்கிறது. இவ்வாறு எய்டன் மார்க்ரம் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x