ஐபிஎல் 2023 தொடர் ஆரம்பிக்கும் முன்னரே பெரிய அணி என்று பலராலும் விதந்தோதப்பட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அந்த வார்த்தைகளுக்கு ஏற்ப முதல் 5 போட்டிகளில் 4-ல் அதிரடி வெற்றி கண்டு அசத்தியது. ஆனால், நேற்று 214 ரன்களை தடுத்தாட்கொண்டு வெற்றி பெற முடியாமல் சோக்கர்ஸ் ஆகி கடைசி பந்தில் சன் ரைசர்ஸிடம் தோல்வி கண்டதோடு, கடைசி 6 போட்டிகளில் ஒன்றில்தான் வென்றுள்ளது.
அப்து சமத், கிளாசன் இருவரும் 14 பந்துகளில் 5 சிக்சர்களுடன் 42 ரன்களை விளாசியதில் ஆட்டமே மாறிப்போனது. அதுவும் அந்த கடைசிப் பந்து விக்கெட் நோ-பாலால் முறிவடைய, அடுத்த பந்து சிக்சருக்குப் பறந்தது, சன் ரைசர்ஸ் வெற்றி பெற்றது. பெரிய வலியான தோல்வியாகும். கடைசி ஓவரில் 17 ரன்கள் ஹைதராபாத் அணிக்குத் தேவை. அப்துல் சமத் முதல் 4 பந்துகளில் ஒரு சிக்சருடன் 11 ரன்களை எடுத்தார். யான்சென் 5வது பந்தை சிங்கிள்தான் எடுக்க முடிந்தது. கடைசி பந்தில் 4 எடுத்தால் டை, சூப்பர் ஓவர், 5 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை. சமத், கடைசிப் பந்தை சுழற்றி அடிக்க லாங் ஆஃபில் கேட்ச் ஆனது, கொண்டாட்டங்கள் தொய்வடைந்தது, காரணம் நோ-பால் சைரன் ஒலித்ததே. அடுத்த பந்து யார்க்கர் முயற்சி இரண்டு இன்ச்சில் தோல்வி அடைய சமத் சிக்சருக்குத் தூக்கிவிட்டார். சன் ரைசர்ஸ் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் சில தவறுகளைச் செய்தார். அவை:
- இம்பாக்ட் பிளேயராக பவுலர் ஆபெட் மெக்காயை 17-வது ஓவரில் கொண்டு வந்தார் சஞ்சு சாம்சன். நன்றாக வீசினார், ஆனாலும் 2 பந்துகள் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி என்று பறந்தது. இவர் விக்கெட் வீழ்த்தும் வாய்ப்பையும் உருவாக்கினார். ஆனால், சஞ்சு சாம்சன் கேட்சை விட்டார். அதே நேரத்தில் நன்றாக வீசிய மெக்காயை அந்த ஓவருக்குப் பிறகு கொண்டு வரவில்லை. இது புரியாத புதிர் கேப்டன்சி. 2022-ல் ராயல்ஸ் அணிக்காக சில நல்ல டெத் ஓவர்களை வீசியுள்ளார் மெக்காய். இது சாம்சனின் மிகப்பெரிய தவறு.
- 18வது ஓவர் முடிவில் சன் ரைசர்ஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்கள் என்று இருந்தது. 2 ஓவர்களில் 41 ரன்கள் தேவை என்ற சூழலில் தோல்வியை எதிர்நோக்கியிருந்தது. அப்போது போய் அனுபவமற்ற இடது கை மீடியம் ஃபாஸ்ட் பவுலர் குல்திப் யாதவ்விடம் பவுலிங்கைக் கொடுத்தார் சாம்சன். நியூஸிலாந்தின் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்டர் கிளென் பிலிப்ஸ் வெளுத்துக் கட்டி விட்டார். லோ ஃபுல் டாஸ் லாங் ஆஃபில் சிக்ஸ். அடுத்த பந்து சற்றே ஹை ஃபுல்டாஸ் மீண்டும் லாங் ஆஃபில் சிக்ஸ். அடுத்து ஸ்லோ பந்து மிட்விக்கெட் மேல் சிக்ஸ். பிலிப்ஸ் விக்கெட்டை இவர் எடுத்தாலும் அந்த ஓவரில் 24 ரன்கள் வந்தது. ஏன் குல்திப் யாதவ்விடம் கொடுத்தார் சஞ்சு சாம்சன். உஷ் கண்டுக்காதீங்க! மாறாக இந்த ஓவரை மெக்காயிடம் கொடுத்திருந்தால் நிச்சயம் 24 ரன்கள் கொடுத்திருக்க வாய்ப்பே இல்லை. இவர் வீசிய முதல் ஓவர் போல் 13 ரன்களைக் கொடுத்தாலும் கடைசி ஓவரில் 27 ரன்கள் தேவை என்று ஆகியிருக்கும் சன் ரைசர்ஸ் தோற்றிருக்கும்.
- அபிஷேக் சர்மா நேற்று நல்ல ஒரு அதிரடி இன்னிங்ஸை ஆடி சன் ரைசர்ஸ் சேசிங்கை வடிவமைத்தார். ஆனால் அவரை சுலபமாக ரன் அவுட் செய்ய வேண்டிய வாய்ப்பை சஞ்சு சாம்சன் தவற விட்டார். பந்து கைக்கு வருவதற்கு முன்பே ஸ்டம்பை தட்டி விட்டார் சஞ்சு. அப்போதும் ஒரு பைல் இருந்ததால் வாய்ப்பு இருந்தது. ஆனால் பந்தை சரியாக சேகரிக்கத் தவறினார் சஞ்சு சாம்சன்.
WRITE A COMMENT