Published : 07 May 2023 07:41 PM
Last Updated : 07 May 2023 07:41 PM
அகமதபாத்: ஐபிஎல் போட்டியில் லக்னோவுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் 56 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது. இதனால் ப்ளே ஆப் வாய்ப்பை குஜராத் அணி உறுதி செய்துள்ளது.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் லக்னோ - குஜராத் அணிகள் இன்று மோதிய முதலில் டாஸ் வென்று குஜராத்தை பேட்டிங் செய்ய பணித்தது லக்னோ அணி.
இதனைத் தொடந்து குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக விருத்திமான் சாஹா, கில் களம் இறங்கினர். ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடிய இந்த இணை லக்னோ பந்துவீச்சை சிக்ஸர், பவுண்டரிகளாக விளாசினர்.
இதில் 43 பந்துகளில் சாஹா 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, கில் 51 பந்துகளில் 94 ரன்கள் எடுத்தார். இவர்களை தொடர்ந்து வந்த ஹர்திக் பாண்டியா 25 ரன்களும், மில்லர் 21 ரன்களும் சேர்க்க 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 2 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்தது.
இதனைத் தொடர்ந்து 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டி காக் - கைல் மேயர் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். இதனால் ஆட்டம் லக்னோவின் பக்கம் சென்றது. மேயர்ஸ் 48 ரன்னிலும், டி காக் 70 ரன்னிலும் ஆட்டமிழக்க, மெல்ல மெல்ல குஜராத் பவுலர்கள் லக்னோவின் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை கைப்பற்றி ரன்களை கட்டுப்படுத்தினர்.
முடிவில் லக்னோ அணி 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. குஜராத் 56 ரன்கள் வித்தியசத்தில் வெற்றி பெற்றது.
குஜராத் அணியில் வழக்கம்போல் மோகித் சர்மா சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 29 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
லக்னோவுக்கு எதிரான இப்போட்டியில் வெற்றி பெற்றிருப்பதன் மூலம் குஜராத் அணி ப்ளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை உறுதி செய்துள்ளது. மேலும் தொடர்ந்து ஐபிஎல் அட்டவணையில் முதல் இடத்தை குஜராத் தக்க வைத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT