Published : 06 May 2023 07:17 PM
Last Updated : 06 May 2023 07:17 PM

IPL 2023: CSK vs MI | ‘நங்கூர’ கான்வே, ‘ஃபினிஷிங்’ தோனி - மும்பையை வீழ்த்தி 11 ஆண்டு தாகம் தீர்த்த சென்னை!

சென்னை: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வென்றது. இதன்மூலம், மும்பை அணிக்கு எதிராக 11 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை சேப்பாக்கத்தில் வெற்றியை பதிவு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

16வது ஐபிஎல் சீசனின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகின்றன. இந்நிலையில், இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களைச் சேர்த்தது. 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் 2 சிக்சர்களை விளாசி அதிரடி காட்டினார். ஆனால் பியூஸ் சாவ்லா வீசிய 4வது ஓவரில் கேட்ச் கொடுத்து ருதுராஜ் அவுட்டானது ரசிகர்களுக்கு ஏமாற்றம்.

டெவோன் கான்வே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, அவருக்கு கைகொடுக்காமல் அஜிங்க்யா ரஹானே 21 ரன்களில் கிளம்பினார். அம்பதி ராயுடு அவசரமாக வெளியேறினாலும், ஒரு சிக்ஸர் விளாசிய கையுடன் 12 ரன்களை அணிக்கு சேர்த்துகொடுத்தார். டெவோன் கான்வே - சிவம் துபே பெயரின் ரைமிங்கிற்கு ஏற்றார்போல இணைந்து பாட்னர்ஷிப் அமைத்து மும்பை பந்துகளை விளாசினர். அதிலும் சிவம் துபேவின் அந்த 2 சிக்ஸ் ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்தது. இப்படியாக 15 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்களை அடைந்தது சிஎஸ்கே.

21 பந்துகளில் 10 ரன்கள் எடுக்க வேண்டிய சூழலில் கான்வே 44 ரன்களில் அவுட்டாக தோனி களத்திற்கு வந்தது அரங்கை அதிர வைத்தது. தோனி அடிப்பார் என பார்த்தால் துபே சிக்சர்ஸ் அடித்து ட்விஸ்ட் கொடுத்தார். 15 பந்துகளில் 1 ரன் எடுக்க வேண்டிய சூழலில் சிங்கிள் தட்டி வெற்றியை பதிவு செய்தார் தோனி. மும்பை அணி தரப்பில் பியூஸ் சாவ்லா 2 விக்கெட்டுகளையும், ஆகாஷ் மத்வால்,டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதுவரை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை - சென்னைக்கு இடையிலான 7 போட்டிகள் நடந்துள்ளன. இதில் 2008 மற்றும் 2010-ம் ஆண்டுகளில் மட்டுமே சென்னை வெற்றிபெற்றுள்ளது. 2012, 2013, 2015, 2019-ம் ஆண்டு மட்டும் இரண்டு போட்டிகள் நடந்தன; இதில் மும்பையே வென்றிருந்தது. இந்த நிலையில் கிட்டதட்ட 11 ஆண்டுகளுக்குபிறகு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் வெறிறபெற்றுள்ளது சிஎஸ்கே.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x