Published : 06 May 2023 05:32 PM
Last Updated : 06 May 2023 05:32 PM

IPL 2023: CSK vs MI | நம்பிக்கை அளித்த நேஹால் வதேரா; சிஎஸ்கே பவுலர்கள் ஆதிக்கம் - மும்பை 139 ரன்கள் சேர்ப்பு

சென்னை: சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களைச் சேர்த்துள்ளது.

16-வது ஐபிஎல் சீசனின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகின்றன. இந்நிலையில், இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கேமரூன் கிரீன் 2வது ஓவரிலேயே 6 ரன்களுடன் போல்டானார். அவருடன் பாட்னராக களமிறங்கிய இஷான் கிஷன் 7 ரன்களில் அவுட்டாக, அடுத்து களத்திற்கு வந்த கேப்டன் ரோஹித் ஷர்மா வழக்கம் போல ரன் எடுக்காமல் டக்அவுட்டானது அவரது ரசிகர்களுக்கு எந்தவித அதிர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை.

ஐபிஎல் வரலாற்றில், அதிக முறை டக்-அவுட் (16 முறை) ஆன வீரர் என்ற மோசமான சாதனை ரோஹித் ஷர்மா பெற்றிருந்தது தான் அதற்கு காரணம். 3வது ஓவரில் மட்டும் 2 விக்கெட்டுகளை வாரி கொடுத்தது மும்பை.

நேஹால் வதேரா - சூர்யகுமார் யாதவின் கூட்டணி 10 ஓவர் வரை விக்கெட் இழப்பில்லாமல் பார்த்துக்கொண்டது. 11வது ஓவரில் ஜடேஜா வீசிய பந்துகள் சூர்யகுமார் யாதவுக்கு பின்னாலிருந்து ஸ்டெம்புகளை பதம் பார்க்க 26 ரன்களுடன் அவரும் கிளம்பினார். 15 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்த மும்பை வெறும் 93 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது என்பது அந்த அணியின் ரசிகர்களுக்கு நிச்சயம் அவ்வளவு இனிப்பான செய்தியல்ல.

நேஹால் வதேரா ஒரு மீட்பராக செய்லபட்டு சென்னை அணிகளின் பந்துகளை விளாசி மும்பை அணிக்கு ரன்களை சேர்த்துக் கொடுத்தார். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அதற்கு துணை நின்றார். ஆனால் மும்பை ரசிகர்கள் எது நடக்கூடாது என நினைத்தார்களோ அது 17ஆவது ஓவரில் நடந்தது. நேஹால் வதேரா 64 ரன்களில் போல்டானார். கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், நேஹால் வதேரா 3 பேர் இந்த ஆட்டத்தில் போல்டானதை இங்கே குறிப்பிட வேண்டும்.

அடுத்து வந்த டிம் டேவிட் 2 ரன்கள், அர்ஷாத் கான் 1 ரன்கள், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 20 ரன்கள் என கடைசி 2 ஓவர்களில் மட்டும் 3 விக்கெட்டுகளை இழந்த மும்பை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களைச் சேர்த்தது. சிஎஸ்கே அணி தரப்பில் மத்தீஷ பத்திரனா 3 விக்கெட்டுகளையும் தீபக் சஹார், துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x