Published : 05 May 2023 02:58 PM
Last Updated : 05 May 2023 02:58 PM
சென்னை: எதிர்வரும் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நேருக்கு நேர் பலப்பரீட்சை செய்ய வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ‘உலகின் பெரிய கிரிக்கெட் மைதானத்தில் உலகக் கோப்பை தொடரின் மிகப் பெரிய மோதல்’ என இந்தப் போட்டி குறித்து கேப்ஷன் கொடுக்கப்பட்டு வருகிறது.
வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் 2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. 10 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்று விளையாட உள்ளன. குரூப் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளோடு விளையாட வேண்டும். புள்ளிப் பட்டியலில் டாப் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இந்தத் தொடரின் இறுதிப் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.
ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா, நியூஸிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் இந்தத் தொடருக்கு தகுதி பெற்றுள்ளன.
இந்தச் சூழலில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் குரூப் சுற்றில் விளையாட உள்ள போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
அதற்கு முன்னதாக ஆசியக் கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், பாகிஸ்தானுக்கு இந்திய அணி சென்று விளையாடுவது இயலாத காரியமாக உள்ளது. அதனால், இந்தத் தொடர் வேறு இடத்தில் நடத்தப்படலாம் என சொல்லப்படுகிறது. இந்தச் சூழலில் உலகக் கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இரு அணிகளும் ஐசிசி நடத்தும் தொடர்கள் மற்றும் ஆசியக் கோப்பை தவிர நேரடி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT