Published : 05 May 2023 02:25 PM
Last Updated : 05 May 2023 02:25 PM
நடப்பு ஐபிஎல் சீசனில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி செல்லுமிடமெல்லாம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, ஜெய்ப்பூர், லக்னோ என இந்தப் பட்டியல் நீள்கிறது. அதேவேளையில் சென்னை - சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சிஎஸ்கே விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளுக்கு அதிக டிமாண்ட் இருந்து வருகிறது.
நடப்பு சீசன் தோனி விளையாடும் கடைசி ஐபிஎல் சீசனாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. அதன் காரணமாக அவருக்கு களத்தில் இருந்து பிரியாவிடை கொடுக்கும் நோக்கில் ரசிகர்கள் மைதானத்திற்கு அதிகளவில் திரள்கின்றனர். சேப்பாக்கம் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு போட்டிக்கும் நேரடியாக டிக்கெட் விற்பனை செய்யப்படும்போது சேப்பாக்கம் மைதானத்தை ஒட்டியுள்ள பகுதியே திரளான மக்கள் சூழ அதிர்கிறது. ‘எப்படியாவது டிக்கெட் வாங்கி விட வேண்டும்’ என்ற எண்ணத்தோடு மணிக்கணக்கில் காத்திருக்கும் ரசிகர்களில் பெரும்பாலானவர்களுக்கு ஏமாற்றம் தான் எஞ்சுகிறது. அதோடு போலீஸாரின் லத்தி சார்ஜ் அவர்களுக்கு போனஸாக கிடைக்கிறது.
அதே நேரத்தில் கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. அதை வாங்கி போட்டியை பார்க்கும் ரசிகர்களும் உள்ளனர். இது தொடர்பாக போலீஸார் சிலரை கைது செய்துள்ளனர். ‘தோனி’ எனும் பெயரை மட்டுமே வைத்து இந்த பிராண்டிங் முன்னெடுக்கப்படுகிறதா என்பதை அலசுவோம்.
சேப்பாக்கத்தில் எத்தனை டிக்கெட்?
சென்னை - சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சுமார் 33,500+ இருக்கைகள் உள்ளன. இதில் ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் சிஎஸ்கே நிர்வாகம் சார்பில் வழங்கப்படுகிறது. அதில் 15,000 டிக்கெட்டுகளை மட்டுமே சிஎஸ்கே வசம் உள்ளது. இதில் ஒரு பகுதியை ஸ்பான்சர்கள் உடன் சிஎஸ்கே நிர்வாகம் பகிர்ந்து கொண்டு வருகிறது. அதே போல எஞ்சியிருக்கும் டிக்கெட்டுகள் பிசிசிஐ, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (டிஎன்சிஏ) மற்றும் டிவிஷனல் அளவில் இயங்கும் கிளப்கள் வசம் செல்வதாக சிஸ்கே வட்டாரத்தில் இருந்து உறுதியான தகவல்கள் வந்துள்ளன.
சேப்பாக்கம் ஸ்பாட் விசிட்
சேப்பாக்கத்தில் ஒவ்வொரு முறையும் போட்டிகளுக்கான டிக்கெட் வழங்கப்படும் போது ரசிகர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்பது மாறுபட்டுக் கொண்டே இருக்கிறது. அந்த நேரங்களில் நேரடியாக அங்கு சென்று ரசிகர்களிடம் விசாரித்ததில் ரசிகர்கள் தெரிவித்தது..
கள்ளச் சந்தையில் டிமாண்ட் அதிகம்: சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் கள்ளச் சந்தையில் (பிளாக்) விற்பனை செய்யப்படுகிறது. நேரடியாக மட்டுமில்லாமல் சமூக வலைதளங்கள் வழியே இந்த விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. ஈவெண்ட் ஆர்கனைஸர்கள் இந்த பணியை மிகவும் நேர்த்தியாக செய்கின்றனர். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சம்பந்தப்பட்ட போட்டியை குறிப்பிட்டு ‘டிக்கெட் கிடைக்கும்’ என ஸ்டேட்டஸ் பகிர்கிறார்கள். உதாரணமாக சென்னை மற்றும் மும்பை விளையாடும் போட்டியை குறிப்பிட்டு ஒருவர் ஸ்டேட்டஸ் போட்டிருந்தார். அதில் டிக்கெட் வேண்டும் என நாம் மெசேஜ் செய்தோம். அதற்கு மறுமுனையில் இருந்து ‘டிக்கெட் விலை ரூ.7,000’ என ரிப்ளை வருகிறது. எந்த ஸ்டேண்ட் என்ற எந்த விவரமும் குறிப்பிடப்படவில்லை.
‘என்னிடம் ஒரு டிக்கெட் உள்ளது’ என சொல்லியும் சமூக வலைதளம் வழியே டிக்கெட் விற்பனை நடைபெறுகிறது.
டிக்கெட்டுகளை விழுங்கும் ஸ்பான்சர்கள்: கார்ப்பரேட் ஸ்பான்சர்கள் வசம் மேட்ச் டிக்கெட்டுகள் செல்வது இதற்கு முக்கியக் காரணமாக சொல்லப்படுகிறது. அதாவது கார்ப்பரேட் நிறுவனங்கள், ஸ்பான்சர்கள், பிரபலங்கள், அரசு அதிகாரிகள் மற்றும் நிகழ்வை ஒருங்கிணைப்பவர்கள் வசம் செல்வதாக ரசிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஸ்பான்சர்கள் தங்கள் கைவசம் உள்ள டிக்கெட்டுகளை ரசிகர்களுக்கு இலவசமாக வழங்குகிறோம் என சொல்லி போட்டிகள் நடத்துகின்றன. அதில் டிக்கெட் வென்றவர்களின் வெளிப்படைத்தன்மை என்பது சஸ்பென்ஸாகவே உள்ளது. அதோடு அந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் இதன் மூலம் தங்கள் நிறுவனத்தை சமூக வலைதளங்களில் பெரிய அளவில் செலவே இல்லாமல் பிராண்ட் செய்கின்றன என்பதை மட்டுமே புரிந்து கொள்ள முடிகிறது. ஆக இதற்கு தோனி மட்டுமே காரணம் அல்ல. ஐபிஎல், சிஎஸ்கே போன்றவற்றின் வணிக செயல்பாட்டின் காரணமாகவே டிக்கெட்டுகளுக்கு டிமாண்ட் உள்ளன.
இதை தடுக்க என்ன வழி? போட்டியை நேரில் காண வேண்டும் என விரும்பும் மெய்யான ரசிகர்களின் கைகளுக்கு டிக்கெட் போய் சேர வேண்டுமென்றால் ‘ஆதார் எண்ணை கட்டாயம் என சொல்லலாம். அதை சொன்னால் பல்வேறு வழிகளில் முறைகேடாக விற்பனை செய்யப்படும் டிக்கெட் விற்பனையை தடுக்கலாம்’ என பலமான ஒரு யோசனையை முன் வைக்கிறார் ரசிகர் ஒருவர்.
இன்னும் எத்தனை போட்டிகள்: சேப்பாக்கத்தில் சென்னை அணி மும்பை உடன் விளையாட உள்ள போட்டி நீங்கலாக மேலும் இரண்டு லீக் போட்டிகளில் விளையாட உள்ளது. டெல்லி மாற்று கொல்கத்தா அணிகளுக்கு எதிராக இந்த போட்டிகள் நடைபெறுகிறது. இதற்கான டிக்கெட் விற்பனை நடைபெற உள்ளது.
அதே போல வரும் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் குவாலிபையர் 1 மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் நடைபெற உள்ளன. ஆக, மும்பை போட்டிகள் நீங்கலாக சேப்பாக்கத்தில் மேலும் 4 போட்டிகள் நடைபெற உள்ளது. இப்போதைக்கு அதில் சென்னை 2 போட்டிகளில் விளையாடுவது உறுதி. சென்னை அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறினால் சென்னையில் மேலும் ஒரு போட்டியில் விளையாடும் வாய்ப்பு உள்ளது.
மற்ற மைதானங்களில் எப்படி? இணைய வழியில் மற்ற மைதானங்களில் டிக்கெட் விற்பனை எப்படி என சேர்ச் செய்தோம். அதில் டெல்லி, அகமதாபாத், லக்னோ, ஹைதராபாத் போன்ற மைதானங்களில் அனைத்து விலையிலான டிக்கெட்டுகளும் ரசிகர்களுக்கு விற்பனைக்கு கிடைப்பதாகவே தெரிகிறது. மொத்தத்தில் ரசிகர்களின் கிரிக்கெட் மோகத்தை வைத்து பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் வணிகம் தான் இதற்கு காரணம்.
ஐபிஎல் அணிகளுக்கு கிடைக்கும் வருமானம் எப்படி? ஃப்ரான்சைஸ் அணிகள் வழங்கும் ஏல தொகை மட்டுமே இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (பிசிசிஐ) 100 சதவீதம் கிடைக்கிறது. மற்றபடி விளம்பர வருவாய் (80% அணிகள்), மெர்சன்டைஸ் சேல்ஸ் (80% அணிகள்), டிக்கெட் விற்பனை (80% அணிகள்), டீம் ஸ்பான்சர்ஸ் (100% அணிகள்), ஸ்பான்சர்ஷிப் (50% அணிகள்), மீடியா ரைட்ஸ் (50% அணிகள்), பரிசு தொகை (50% அணியின் உரிமையாளர் மற்றும் 50% அணியின் வீரர்கள்) என ஒவ்வொரு ஐபிஎல் அணிகளும் இந்த வகையில் வருமானம் ஈட்டுகின்றன. இதில் எஞ்சியுள்ள சதவீதத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை பிசிசிஐ பெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...