Published : 03 May 2023 05:38 PM
Last Updated : 03 May 2023 05:38 PM

“ஐபிஎல் ஆட வருகிறோமே தவிர, இவரிடம் வசை வாங்க அல்ல!” - விராட் கோலியை விமர்சித்த ஆப்கன் வீரர்

கிரிக்கெட் உலகின் சமீபத்திய பேச்சு கோலி - கம்பீர் மோதலாகும். இதற்குக் காரணம் விராட் கோலி. அவர் நவீன் உல் ஹக் என்ற ஆப்கான் வீரர் மீது வசைமாரி பொழிய அவரும் ஏதோ சொல்ல கடைசியில் கம்பீர்-கோலி மோதலாக இது பரிணாமம் அடைந்தது.

கோலி களத்தில் செய்யும் கோணங்கித்தனங்களை அனைவரும் அறிவார்கள். பவுலர் விக்கெட் வீழ்த்தும் பந்தை வீசுகிறார், பீல்டர் கேட்சை எடுக்கிறார், பேட்டர் வெளியே செல்கிறார். இதில் கோலியின் பங்கென்ன? இவர் குதிப்பதும் நெஞ்சைக் குத்திக் கொள்வதும் ஆவேசம் காட்டுவதும் ஹிஸ்டீரியா வந்தவர் போல் செயல்படுவதும் ஏன் என்ற கேள்வி அவர் கேப்டனாக இருந்த போதே நாம் பார்த்ததுதான். தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வீரர்களை ஒப்பிடும்போது நிதியாதாரங்களில் வலுவானவர் விராட் கோலி. ஆனால் இவரோ தெம்பா பவுமா போன்ற வீரரை போய் ஸ்லெட்ஜ் செய்வது என்ன நியாயம்? இவர் ஒரு பெரிய ஆளுமை, இளையோருக்கு வழிகாட்டி என்பதையெல்லாம் மறந்து மைதானத்தில் முதிர்ச்சியற்றுச் செயல்படுவது பல முறை கடும் கண்டனத்திற்குள்ளானது.

சரி, சர்வதேச கிரிக்கெட் ஆடப்படும் தீவிரம், அந்நிய மண்ணில் தோற்கக் கூடாது என்ற உறுதி போன்ற நெருக்கடிகளினால் சர்வதேச கிரிக்கெட்டில் ஆக்ரோஷமாக செயல்படுவது போல் காட்டிக்கொள்வதை ஏற்றுக் கொள்ள முடியும். ஐபிஎல் என்பது தனியார் கிரிக்கெட், இதில் முதலாளிகளுக்காக ஆடுகின்றனர். பணத்திற்காகத்தான் அனைவருமே ஆடுகின்றனர். இதில் என்ன பகைமை வேண்டிக்கிடக்கின்றது? அதுவும் ஆப்கானிஸ்தானிலிருந்து வந்து ஆடும் வீரர் நவீன் உல் ஹக். அங்கு விளையாடவே முடியாமல் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் ஆடிக்கொண்டிருக்கின்றனர்.

அப்படிப்பட்ட கதியிலியான ஒரு வீரரைப் போய் உலகின் பெரிய பேட்டிங் ஆளுமையான கோலி போய் வசைபாடுவதும் ஆக்ரோஷ பாடிலாங்குவேஜ் காட்டுவதும் என்ன முதிர்ச்சியில் சேரும்? என்று கோலியின் செய்கையை பல காலமாக பார்த்து வரும் சில விமர்சகர்கள் கேட்கின்றனர். இந்த சண்டை, கம்பீர் நாட்டாமையாக இறங்கித் தட்டிக் கேட்கப்போக கோலி-கம்பீர் சொற்போராக இது மாறியது.

நவீன் உல் ஹக் தகராறை முடித்து வைக்க கே.எல்.ராகுல் முயற்சி செய்தார். நவீனை அழைத்து கோலியிடம் பேசுமாறு வேண்டினார். ஆனால் நவீன் உல் ஹக் அதை நிராகரித்தார். இந்நிலையில் ஏன் சமாதானம் செய்து கொண்டிருக்கலாமே என்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் சக வீரர் ஒருவர் கேட்க, அதற்கு நவீன் உல் ஹக், “நான் ஐபிஎல் கிரிக்கெட் ஆட இங்கு வந்துள்ளேன். யாரிடமும் வசையையும், திட்டையும் வாங்குவதற்கல்ல” என்று கூறியதாக முன்னணி ஆங்கில நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால் கோலி இந்த சம்பவங்களைக் குறிப்பிட்டோ அல்லது நேரடியாகக் குறிப்பிடாமலோ தன் சமூக வலைத்தளப் பக்கத்தில், “நாம் கேட்பது அனைத்தும் வெறும் அபிப்ராயங்களே, உண்மையல்ல” என்று சூசகமாகத் தெரிவித்துள்ளார். அப்படியென்றால் எது உண்மை? கிரிக்கெட்டில், விளையாட்டில் மட்டுமல்ல,அனைத்து துறைகளிலும் post-truth காலக்கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருப்பதற்கான ஓர் எளிய உதாரணமாம் இத்தகைய நிலையே.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x