Published : 03 May 2023 07:39 AM
Last Updated : 03 May 2023 07:39 AM
லக்னோ: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா ஸ்டேடியத்தில் நடைபெறும் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளுமே தலா 9 ஆட்டங்களில் சம அளவிலான புள்ளிகளை (10) பெற்றுள்ளன. இந்த சீசனில் இரு அணிகளும் 2வது முறையாக நேருக்கு நேர் மோதுகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் 3ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது சிஎஸ்கே.
லக்னோ அணியில் கேப்டன் கே.எல்.ராகுல், வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனத்கட் ஆகியோர் காயம் அடைந்துள்ளனர். இதனால் இவர்கள் இருவரும் இன்றைய ஆட்டத்தில் களமிறங்குவது சந்தேகம்தான். லக்னோ அணி தனது சொந்த மண்ணில் பெங்களூரு அணிக்கு எதிராக 127 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக அடைய முடியாமல் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்ட நிலையில் இன்றைய ஆட்டத்தை சந்திக்கிறது. லக்னோவின் செயல்திறன் இந்த சீசனில் ஊசலாடும் விதத்திலேயே உள்ளது.
ஏப்ரல் 28ம் தேதி பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ 257 ரன்கள் குவித்து சாதனை படைத்தது. ஒரு அணி கூட்டாக செயல்பட்டால் எவ்வாறு சாதிக்கலாம் என்பதை அந்த ஆட்டம் நினைவூட்டுவதாக இருந்தது. ஆனால் நேற்று முன்தினம் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 127 ரன்கள் இலக்கை துரத்தும் போது, ஒரு அணி எவ்வளவு மோசமான செயல் திறனை வெளிப்படுத்தி தோல்வி அடையும் என்பதற்கு உதாரணமாக அமைந்தது.
257 ரன்கள் குவிக்கப்பட்ட ஆட்டத்தில் கைல் மேயர்ஸ், ஆயுஷ் பதோனி, ஸ்டாயினிஸ், நிக்கோலஸ் பூரன், நவீன் உல்ஹக், யாஷ் தாக்குர் ஆகியோர் கூட்டாக உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்தி இருந்தனர். ஆனால் இவர்கள் ஒருசேர பெங்களூரு அணிக்கு எதிராக சிறந்த பங்களிப்பை வழங்கவில்லை. இன்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல் களமிறங்குவதற்கான வாய்ப்பு குறைவு என்பதால் லக்னோ அணி கூடுதல் அழுத்தத்தை சந்திக்க நேரிடலாம்.
தோனி தலைமையிலான சிஎஸ்கே தொடர்ச்சியாக இரு தோல்விகளை சந்தித்த நிலையில் களமிறங்குகிறது. தோனியின் புத்திசாலித்தனமான முடிவுகளும், களத்தில் அவர் வீரர்களை கையாளும் விதமும்தான் இந்த சீசனில் சிஎஸ்கேவின் வெற்றிகளில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. அந்த வகையில் கே.எல்.ராகுல் விளையாடாததை தோனி சரியாக பயன்படுத்திக் கொள்ளக்கூடும். சிஎஸ்கேவின் பேட்டிங்கில் டேவன் கான்வே சிறந்த பார்மில் உள்ளார். 414 ரன்கள் வேட்டையாடி உள்ள அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த மட்டை வீச்சு வெளிப்படக்கூடும்.
ருதுராஜ் கெய்க்வாட், ரஹானே, ஷிவம் துபே ஆகியோரும் போட்டியின் தினத்தில் சவால் அளிக்கக் கூடியவர்கள்தான். பந்து வீச்சில் பஞ்சாப் அணிக்கு எதிராக ஜடேஜா, துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் இறுதிக்கட்டத்தில் அதிக ரன்களை தாரை வார்த்து அணியின் தோல்விக்கு வழிவகுத்திருந்தனர். இவர்கள் வலுவாக மீண்டு வருவதில் கவனம் செலுத்தக்கூடும்.
பஞ்சாப் - மும்பை மோதல்: இரவு 7.30 மணிக்கு மொகாலியில் நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் பஞ்சாப் - மும்பை அணிகள் மோதுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT