Published : 01 May 2023 07:44 PM
Last Updated : 01 May 2023 07:44 PM
காயத்தால் அவதியுற்று வந்த இங்கிலாந்து வீரர் டேவிட் வில்லிக்குப் பதிலாக கேதர் ஜாதவை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்திருக்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.
பேட்டிங் ஆல்-ரவுண்டரான முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் கேதர் ஜாதவ். இவர் 2018 முதல் 2020 ஐபிஎல் சீசன் வரை சிஎஸ்கே அணியில் விளையாடி இருந்தார். சென்னைக்காக அவர் ஆடியபோது மோசமான ஆட்டம் காரணமாக ரசிகர்களால் அவர் பெரிதும் விமர்சனத்திற்கு உள்ளானார். இதனால் சென்னை அணியுமே அவரை 2020 சீசனோடு விடுவித்துவிட்டது. 2021 சீசனில் சன்ரைசர்ஸ் அணி அவரை அவரின் அடிப்படை விலையான 2 கோடி ரூபாய்க்கே வாங்கியது. அங்கே கிடைத்த சில வாய்ப்புகளிலும் அவர் சரியாக பர்ஃபார்ம் செய்யவில்லை. இதனால் அங்கிருந்தும் விடுவிக்கப்பட்டார். 2022-ம் ஆண்டு ஐபிஎல் தொடரிலும் சரி, தற்போது நடைபெற்று வரும் நடப்பு சீசனில் சரி அவரை எந்தவொரு அணியும் ஏலத்தில் வாங்கவில்லை.
இந்நிலையில் ஆர்சிபி அணியில் காயத்தால் அவதியுற்று வந்த இங்கிலாந்து வீரர் டேவிட் வில்லிக்கு பதிலாக கேதர் ஜாதவை மாற்று வீரராக அந்த அணி ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் நீண்ட இடைவெளிக்குப்பிறகு மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் ஆட இருக்கிறார் கேதர் ஜாதவ். மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 38 வயதான கேதார் ஜாதவ், 2014 முதல் 2020 வரை இந்திய அணியில் விளையாடியவர். 2019 உலகக் கோப்பை தொடரிலும் விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT