Published : 30 Apr 2023 07:39 PM
Last Updated : 30 Apr 2023 07:39 PM
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நடப்பு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 41வது லீக் சுற்று ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இதில் முதலில் பேட் செய்த சிஎஸ்கே 4 விக்கெட் இழப்புக்கு 200 ரன்களை குவித்தது. 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் ஷிகர் தவான் 28 ரன்களுடன் வெளியேறியது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. பிரப்சிம்ரன் சிங் தொடக்கத்தில் நம்பிக்கை கொடுத்தாலும் 42 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து அதர்வா தைடேவும் கிளம்ப அணியின் நிலை மோசமானது.
அடுத்து வந்த லியாம் லிவிங்ஸ்டோன் - சாம் கரன் இணை அடித்து ஆடினர். ஸ்கோரை உயர்த்திய இந்த இணையை துஷார் தேஷ்பாண்டே பிரிக்க 4 சிக்சர்கள் விளாசி அதிரடி காட்டிய லியாம் 40 ரன்களுடன் நடையைக்கட்டினார். சாம் கரன் தன் பங்குக்கு 29 ரன்களைச் சேர்க்க 18 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்த பஞ்சாப் 179 ரன்களைச் சேர்த்தது. 11 பந்துகளில் 18 ரன்கள் தேவை என்ற சூழலில் களத்தில் ஜிதேஷ் ஷர்மா - ஷாருக்கான் இருந்தனர். ஜிதேஷ் ஷர்மாவின் ஃபோர் பஞ்சாப் ரசிகர்களுக்கு ஆசுவாசம் கொடுத்தது. ஆனால், அதே வேகத்தில் அடுத்து அவர் அடித்த சிக்ஸை ஷேக் ரஷீத் லாவகமாக பிடிக்க ஆட்டத்தின் போக்கு மாறியது.
அடுத்து வந்த சிக்கந்தர் ராசா ஃபோர் அடித்தது அந்த நேரத்தில் அவர் அணிக்கு பெரும் பலம். 19 ஓவர் முடிவில் 6 பந்துகளில் 9 ரன்களை எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தது பஞ்சாப். 19ஆவது ஓவரை வீசிய பதிரானா ரன்களை கட்டுப்படுத்த முயற்சித்தார். பஞ்சாப் பேட்ஸ்மேன்களும் விடாமல் அடிக்க பார்வையாளர்களுக்கு ‘திக் திக்’ மனநிலை. 2 பந்துகளில் 5 ரன்கள் எடுக்க வேண்டிய சூழலில் சிக்கந்தர் ராசா 2 ரன்களை ஓடி எடுத்தார்.
1 பந்தில் 3 ரன்கள் என்ற இறுதிக்கட்டம் அட்ரீனலின் சுரப்பை அதிகப்படுத்தியது. ஸ்ட்ரைக்கில் இருந்த சிக்கந்தர் ராசா தூக்கி அடிக்க அது ஃபோரை நோக்கி சென்றது. போர் லைனை பந்து எட்டவில்லை என சிஎஸ்கே ரசிகர்கள் பெருமூச்சு விட 3 ரன்களை ஓடியே எடுத்து பஞ்சாப் அணி வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே வென்றது பஞ்சாப். சிஎஸ்கே தரப்பில் துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டுகளையும், பதிரானா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT