Published : 30 Apr 2023 07:14 AM
Last Updated : 30 Apr 2023 07:14 AM
சென்னை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகல் 3.30 மணி அளவில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), ஷிகர் தவண் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது.
இரு அணிகளுமே தங்களது முந்தைய ஆட்டத்தில் தோல்வியை சந்தித்த நிலையில் களமிறங்குகின்றன. சிஎஸ்கே தனது கடைசி ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸிடம் 32 ரன்கள் வித்தியாசத்திலும், பஞ்சாப் கிங்ஸ் 56 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸிடமும் வீழ்ந்திருந்தன. தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் வெற்றி கண்ட நிலையில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான தோல்வியானது சிஎஸ்கேவின் நம்பிக்கையை சற்று அசைத்து பார்த்துள்ளது. எனினும் அந்த அணி வீரர்களின் பார்ம், கடந்த ஆட்டங்களில் அவர்கள் வெளிப்படுத்திய செயல்திறன் எல்லாவற்றுக்கும் மேலாக சுழலுக்கு சாதகமான தனது கோட்டையில் களமிறங்குவது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.
கடந்த ஆட்டத்தில் டேவன் கான்வே சிறப்பாக செயல்படத் தவறினார். அவர் மீண்டும் மட்டையை சுழற்றுவதில் கவனம் செலுத்தக்கூடும். அதேவேளையில் ருதுராஜ் கெய்க்வாட் மீண்டும் பார்முக்கு திரும்பி இருப்பது பலம் சேர்க்கக்கூடும். அஜிங்க்ய ரஹானே, ஷிவம் துபே கூட்டணி நடுஓவர்களில் பஞ்சாப் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கக்கூடும். மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் மட்டையை சுழற்றினால் அணியின் பலம் அதிகரிக்கும்.
ஜடேஜா பந்து வீச்சு, பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், மட்டை வீச்சில் அவரிடம் இருந்து இதுவரை பெரிய அளவிலான செயல்திறன் வெளிப்படவில்லை. வேகப் பந்து வீச்சில் தீபக் சாஹர் இல்லாத நிலையில் துஷார் தேஷ் பாண்டே, ஆகாஷ் சிங், மதீஷா பதிரனா ஆகியோரை நம்பியே சிஎஸ்கே உள்ளது. இதில் துஷார் தேஷ்பாண்டே 14 விக்கெட்களை கைப்பற்றி உள்ள போதிலும் ஓவருக்கு சராசரியாக 12.57 ரன்ளை வாரி வழங்குவது பலவீனமாக உள்ளது. அதேவேளையில் பதிரனா வேகமாக வீசுவதில் காட்டும் ஆக்ரோஷத்தை எதிரணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்துவதில் காட்டாதது குறையாக உள்ளது. ஆறுதல் அளிக்கும் விஷயமாக சுழற்பந்து வீச்சில் தீக்சனா பார்முக்கு திரும்பி உள்ளார்.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கேவின் மற்ற பந்து வீச்சாளர்கள் அதிக ரன்களை தாரை வார்த்த நிலையில் தீக்சனா 4 ஓவர்களில் 24 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்திருந்தார். அவரிடம் இருந்து மீண்டும் ஒரு சிறந்த பந்து வீச்சு வெளிப்படக்கூடும். சிஎஸ்கே பெரும்பாலும் அணியில் மாற்றங்களை மேற்கொள்ளாது. இதனால் இங்கிலாந்து ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் களமிறங்குவது சந்தேகம்தான். இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே வெற்றி பெறும் பட்சத்தில் 12 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை அதிகரித்துக் கொள்ளும்.
பஞ்சாப் அணிக்கு இந்த சீசன் ஏற்ற, இறக்கமாக உள்ளது. 8 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி தலா 4 வெற்றி, 4 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணியின் பந்து வீச்சு கடும் சிதைவுக்கு உள்ளாகி இருந்தது. ராகுல் சாஹரை தவிரமற்ற அனைத்து பந்து வீச்சாளர்களுமே ஓவருக்கு 13 ரன்களுக்கு மேல் தாராளமாக வழங்கினர்.
இந்த மோசமான செயல்திறனில் இருந்து மீண்டு வருவதில் அவர்கள் முனைப்பு காட்டக்கூடும். சுழலுக்கு சாதகமான சேப்பாக்கத்தில் நடு ஓவர்களில் ராகுல் சாஹர், சிஎஸ்கே பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கக்கூடும். பேட்டிங்கை பொறுத்தவரையில் ஷிகர் தவண், பிரப்சிம்ரன் சிங்,அதர்வா தைடே, லியாம் லிவிங்ஸ்டன் பொறுப்புடன் செயல்பட்டு மட்டையை சுழற்றினால் சிஎஸ்கேவுக்கு சவால் அளிக்கலாம்.
சேப்பாக்கத்தில் பஞ்சாப்
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கேவுக்கு எதிராக பஞ்சாப் அணி சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடி உள்ளது. இதில் சிஎஸ்கே 5 ஆட்டங்களிலும், பஞ்சாப் ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT