Published : 29 Apr 2023 04:19 PM
Last Updated : 29 Apr 2023 04:19 PM
வரும் ஜூன் மாதம் 7-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்தில் நடைபெறும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் அஜிங்கிய ரஹானே தேர்வு செய்யப்பட்டதை ரவி சாஸ்திரி வரவேற்றுள்ளார். மேலும், சிஎஸ்கே அணிக்காக தற்போது ஐபிஎல் 2023 தொடரில் அட்டகாசமாக அவர் ஆடுவது மட்டுமே ரஹானே இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டதற்குக் காரணமல்ல, சிலர் இப்படி எண்ணுவது இடையில் ரஹானே என்ன செய்து கொண்டிருந்தார் என்பதை அறியாதவர்கள் என்று சாடியுள்ளார்.
ரஹானே மும்பை ரஞ்சி அணிக்கு 2022-23 சீசனில் கேப்டனாக செயல்பட்டார். அங்கு நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறும் அளவுக்கு நெருக்கமாக வந்தது மும்பை அணி. நடந்து முடிந்த இந்த ரஞ்சி சீசனில் ரஹானே 11 இன்னிங்ஸ்களில் 634 ரன்களை 57.64 என்ற சராசரியில் எடுத்துள்ளார்.
ஆனால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கான அணியை அறிவிப்பதற்கு முதல் நாள் இரவில்தான் ரஹானே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 29 பந்துகளில் 71 ரன்களைக் குவித்து ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றார். டி20-யில் இவரது இந்த திடீர் அதிரடி எழுச்சியினால்தான் ரஹானே இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்றும் டெஸ்ட் அணி தேர்வில் ஐபிஎல் தொடரை கருத்தில் கொண்டு செலக்ட் செய்யலாமா என்றும் பலர் கேள்வி எழுப்பினர்.
ஆனால் ரவி சாஸ்திரி என்ன கூறுகிறார் என்றால், “ரஹானே இந்திய அணியில் மீண்டும் இடம் பிடித்திருப்பது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கின்றது. ஐபிஎல் தொடரில் இந்த 2-3 இன்னிங்ஸ்களில் அவர் அட்டகாசமாக ஆடினார். நல்ல ‘டச்’ சில் இருக்கின்றார். அவரது டெஸ்ட் போட்டி அனுபவத்தையும் நாம் மறக்கலாகாது. ஷ்ரேயஸ் அய்யர் காயமடைந்தார் என்றால் ரஹானேவை நோக்கிச் சென்றதுதான் சரியான முடிவு.
மூன்றே மூன்று ஐபிஎல் போட்டிகளில்தான் ரஹானே ஆடியுள்ளார். அவரை அதற்குள் தேர்வு செய்யலாமா என்று பலரும் நினைக்கின்றனர். ரஹானே இதற்கு முன் 6 மாதங்கள் முதல் தர கிரிக்கெட் ஆடிய போது அவர்கள் லீவில் சென்று விட்டார்கள். இன்று ரஹானே தேர்வை விமர்சிப்பவர்கள் ரஹானே விளையாடிய 6 மாத கால கிரிக்கெட்டின் போது வெளி உலகுடன் தொடர்பில்லாத காட்டிற்கு சென்று விட்டார்கள் போலும். 6 மாத காலம் விடுப்பில் சென்று விட்டால், ரஹானே எடுத்த 600 ரன்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி என்பது ஒரே போட்டி கொண்ட மிகப்பெரிய நிகழ்வு. இதற்கு அனுபவசாலியான ரஹானே போன்ற ஒருவர் தேவை. விராட் கோலி விடுப்பில் சென்ற ஆஸ்திரேலிய தொடரில் ரஹானே கேப்டன்சியில் நாம் தொடரைக் கைப்பற்றியதை யாரும் மறந்து விட வேண்டாம்.
மெல்போர்னில் ரஹானே அப்போது எடுத்த சதத்தை மக்கள் மறந்து விட்டனர். அவர் எப்படி ஆடினார் என்பதையும் மறந்து விட்டனர். புஜாராவும் அதே போல்தான் உள்நாட்டு கிரிக்கெட், இங்கிலாந்து கவுண்ட்டி என்று ஆடிக்கொண்டே தான் இருந்தார், இப்படியாக மக்களுக்குத் தெரியாமல் கிரிக்கெட்டில் இவர்கள் ஆடிக்கொண்டு ரன்களை எடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
இப்போது ரஹானேவின் ஸ்ட்ரை ரேட்டையும் பார்க்க வேண்டியுள்ளது. இதுவும் அவரை அணியில் எடுக்கக் காரணம், உள்நாட்டு கிரிக்கெட்டில் அவர் ஆடிய விதத்தை பலரும் அறிந்திருக்கவில்லை. ரஹானேவின் டைமிங் அருமையாக உள்ளது, தன்னம்பிக்கையுடன் ஆடுகிறார். கால் நகர்த்தல்களும் அபாரமாக உள்ளது” என்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT