Published : 28 Apr 2023 12:13 PM
Last Updated : 28 Apr 2023 12:13 PM
புதுடெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் மீது பிரபல மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி நடத்தி வரும் போராட்டம் குறித்து இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷா கூறிய கருத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.
பாஜக எம்பியும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பிரபல மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்சி மாலிக் உள்ளிட்டோர் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி கடந்த ஜனவரி மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அமைத்தது. இந்தக் குழு விசாரணை நடத்தி தனது அறிக்கையை வழங்கிவிட்டது. எனினும் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதையடுத்து, வினேஷ் போகத், சாக்சி மாலிக் உள்ளிட்ட வீராங்கனைகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டம் 6-வது நாளாக வெள்ளிக்கிழமையும் தொடர்ந்தது. இதற்கிடையே, இந்திய ஒலிம்பிக் சங்கம், இந்திய மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகிக்க முன்னாள் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை சுமா ஷிரூர், இந்திய வுஷூ சங்கத்தின் தலைவர் பூபேந்திர சிங் பஜ்வா மற்றும் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆகியோரை உள்ளடக்கிய குழுவை நியமித்திருந்தது. டெல்லியில் நேற்று இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
பி.டி.உஷா கருத்து: இக்கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பி.டி.உஷா, “மல்யுத்த வீரர்கள் தெருக்களில் போராட்டம் நடத்துவது ஒழுக்கமின்மைக்கு சமம். இது இந்தியாவின் நற்பெயரைக் கெடுக்கும்” என்றார்.
நியாயமான போராட்டம்: பி.டி.உஷாவின் இந்தக் கருத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருவனந்தபுரம் எம்பி சசி தரூர் தனது ட்விட்டர் பதிவில், "மீண்டும் மீண்டும் விரும்பத்தகாத பாலியல் துன்புறுத்தல்களை சந்தித்து வரும் உங்களின் சக வீராங்கனைகளின் நியாயமான போராட்டத்தை இழிவுபடுத்துவது உங்களுக்கு அழகு இல்லை. தங்களின் உரிமைக்காக அவர்கள் நிற்பது தேசத்தின் நற்பெயரைக் கெடுக்காது. அவர்களின் கவலைகளை புறக்கணிக்காமல் அவற்றைக் கேட்டு விசாரித்து நடவடிக்கை எடுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.
ஒன்றிணைந்து குரல் கொடுப்போம்: சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) கட்சி எம்பி பிரியங்கா சதூர்வேதி தனது ட்விட்டர் பதிவில், "பாதிக்கப்பட்டவர்கள் நீதிக்காக போராடும் போது, பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான எம்பிக்கள் சுதந்திரமாக நடமாடுவதால்தான் நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுகிறது. மன்னித்து விடுங்கள் மேம், நமது வீராங்கனைகளுக்காக நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து குரல் கொடுக்க வேண்டும். நற்பெயரைக் காரணம் காட்டி குற்றம் சுமத்தக் கூடாது. அவர்கள் ஒவ்வொருவரும் நாட்டுக்காக பதக்கங்களை வென்று நம்மை பெருமைப்பட வைத்திருக்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
ரோஜாக்களை மணக்க செய்கிறதா? - திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா, "மல்யுத்த வீராங்கனைகள் தெருவில் இறங்கிப் போராட்டம் நடத்துவது நாட்டின் நற்பெயருக்கு களங்கம்விளைவிப்பதாக பி.டி.உஷா கூறுகிறார். ஆனால், ஆளுங்கட்சி எம்.பி, பல ஆண்டுகளாக இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்தவர் மீது துன்புறுத்துதல் மற்றும் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்தது தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்ட பின்னரும் டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்யாதது, இந்தியாவில் ரோஜாக்களை மணக்கச் செய்கிறது. இல்லையா?" என்று கேட்டுள்ளார். மேலும் ஸ்டாப்க்ரவ்லிங் என்று ஹேஷ் டேக் பதிவிட்டுள்ளார்.
மவுனம் காப்பது ஏன்? - தனது மற்றொரு ட்வீட்டில், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், முன்னணி கிரிக்கெட் வீரர்கள், மற்றவர்கள் ஏன் அமைதியாக இருக்கிறீர்கள், நீங்களெல்லாம் பயப்படுகிறீர்களா என்று கேட்டு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்திருக்கும் பேட்டியை பதிவிட்டு, "ஆமாம் வினேஷ் - இதே கேள்வியை தினமும் நான் முன்னணி ஊடகவியலாளர்கள், தொழில்துறையினர், நடிகர்கள், விளையாட்டு வீரர்களிடம் கேட்கிறேன். கோழைத்தனம் நமது தேசத்தை உருவாக்காது. கோழைத்தனம் எதையும் மீட்காது" என்றும் தெரிவித்துள்ளார்.
Dear @PTUshaOfficial, it is does not become you to disparage the justified protests of your fellow sportspersons in the face of repeated & wanton sexual harassment. Their standing up for their rights does not “tarnish the image of the nation”. Ignoring their concerns — instead of…
— Shashi Tharoor (@ShashiTharoor) April 28, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT