Published : 27 Apr 2023 11:24 PM
Last Updated : 27 Apr 2023 11:24 PM
ஜெயப்பூர்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மீண்டும் தோல்வி அடைந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
203 ரன்கள் இலக்கை துரத்திய சிஎஸ்கேவுக்கு வழக்கத்துக்கு மாறாக டெவான் கான்வே மெதுவாக ஆடினார். 16 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து அவர் முதல் விக்கெட்டாக வெளியேற, மற்றொரு ஓப்பனிங் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியில் மிரட்டினார். எனினும், 47 ரன்களில் அவர் பெவிலியன் திரும்பினார்.
அடுத்து வந்த ரஹானேவும் இம்முறை சோபிக்க தவறினார். அவர் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். அம்பதி ராயுடு பூஜ்ஜியமெடுக்க, மொயின் அலி தலா இரண்டு பவுண்டரி, இரண்டு சிக்ஸர் மட்டும் விளாசிவிட்டு நடையைக்கட்டினார். மிடில் ஆர்டரில் ஷிவம் துபே மட்டும் சிறப்பாக விளையாடினார். அவர் அரைசதம் கடந்தாலும், சென்னை அணி வெற்றி பெற முடியவில்லை. 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ராஜஸ்தான் தரப்பில் இன்று ஸ்பின்னர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஆடம் ஜம்பா சென்னையின் ஓப்பனிங் வீரர்கள் இருவரையும் அவுட் ஆக்க, அஸ்வின் மிடில் ஆர்டர் வீரர்களை கவனித்துகொண்டார். இதனால் சென்னை அணி சேசிங் செய்ய முடியாமல் போனது. ஆடம் ஜம்பா 3 விக்கெட்டும், அஸ்வின் 2 விக்கெட்டும் அதிகபட்சமாக எடுத்தனர்.
இந்த சீசனில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக சிஎஸ்கே இரண்டாவது முறையாக தோல்வி அடைந்துள்ளது. முன்னதாக, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியிலும் ராஜஸ்தான் சிஎஸ்கேவை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தான் இன்னிங்ஸ்: ஜெயப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.
தொடக்க ஆட்டக்கார்களாக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜாஸ் பட்லர் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 8ஆவது ஓவரில் இவர்களின் பாட்னர்ஷிப்பை ஜடேஜா பிரித்து பட்லரை 27 ரன்களுடன் வெளியேற்றினார். அடுத்து வந்த சஞ்சு சாம்சன் பெரிய அளவில் சோபிக்காமல் 17 ரன்களுடன் நடையைக்கட்டினார். 43 பந்துகளில் 77 ரன்களை குவித்து 4 சிக்சர்களுடன் அதிரடி காட்டிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் துஷார் தேஷ்பாண்டே அவுட்டாக்க, ராஜஸ்தானின் ரன் சேர்க்கும் வேகம் குறைந்தது. ஹெட்மேயர் 10 பந்துகளில் 8 ரன்களை மட்டுமே சேர்த்து பெவிலியன் திரும்பினார்.
தேவ்தட் படிக்கல், துருவ் ஜூரல் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்த போராடினர். துருவ் ஜூரல் 2 சிக்சர்களை அடித்து அதிரடி காட்டினாலும் ரன்அவுட்டாகி ஏமாற்றமளிக்க இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் அணி 202 குவித்தது. 27 ரன்களுடன் தேவ்தட் படிக்கலும், 1 ரன்னுடன் அஸ்வினும் களத்தில் இருந்தனர்.
சிஎஸ்கே அணி தரப்பில் துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா, மஹீஷ் தீக்சனா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT