Published : 27 Apr 2023 11:00 AM
Last Updated : 27 Apr 2023 11:00 AM
மும்பை: இலக்கை வெற்றிகரமாக விரட்டி பிடிக்கும் சேஸிங் கலையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி இடமிருந்து பேட்ஸ்மேன்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனின் கடைசி மூன்று லீக் போட்டிகளில் இலக்கை விரட்டிய அணிகள் ஆட்டத்தில் தோல்வியை தழுவியுள்ளன. இந்த சூழலில் பீட்டர்சன் இதனை தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா அணிக்கு எதிராக பெங்களூரு அணியும், குஜராத்துக்கு எதிராக மும்பை அணியும், டெல்லி அணிக்கு எதிராக ஹைதராபாத் அணியும் இலக்கை விரட்டிய போது அதனை வெற்றிகரமாக எட்ட முடியாமல் ஆட்டத்தில் தோல்வியை தழுவின. நேற்று ஆர்சிபி அணியால் 201 ரன்கள் என்ற இலக்கை பெங்களூரு மைதானத்தில் எட்ட முடியவில்லை.
“200+ ரன்களை விரட்டும் போது இன்னிங்ஸின் இறுதிவரை ஆட்டத்தை எடுத்து செல்ல வேண்டும். ஆட்டத்தை 18, 19 மற்றும் 20-வது ஓவர் வரை எடுத்துச் செல்ல வேண்டும். இதை ‘சேஸிங் மன்னன்’ என அறியப்படும் எம்.எஸ்.தோனி பலமுறை சொல்லியுள்ளார். அவரிடமிருந்து பேட்ஸ்மேன்கள் அந்த கலையை அவசியம் கற்றுக் கொள்ள வேண்டும். இப்போதெல்லாம் பேட்ஸ்மேன்கள் இந்த 200+ ரன்களை 12 அல்லது 13-வது ஓவரில் விரட்டி முடிக்க வேண்டும் என நினைக்கிறார்கள். ஆட்டத்தை இறுதி வரை எடுத்து செல்ல வேண்டும்” என பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT