Published : 27 Apr 2023 08:11 AM
Last Updated : 27 Apr 2023 08:11 AM
புதுடெல்லி: பாஜக எம்பியும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பிரபல மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்சி மாலிக் உள்ளிட்டோர் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினர். இதுதொடர்பாக பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவர்கள் கடந்த ஜனவரி மாதம் சாலையில் அமர்ந்து போராடினர். இதைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில் தலையிட்ட மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் 6 பேர் கொண்ட குழு விசாரணைக்குழுவை அமைத்தது.
இந்த குழு விசாரணை நடத்தி தனது அறிக்கையை கடந்த 5-ம் தேதி விளையாட்டுத்துறை அமைச்சகத்திடம் வழங்கியது. இதன் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. மேலும் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வீராங்கனைகள் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார் தொடர்பாகவும் எந்தவித மேல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் வினேஷ் போகத், சாக்சி மாலிக் உள்ளிட்ட வீராங்கனைகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் போராட்டத்தை தொடங்கினர்.
இந்த போராட்டம் 4-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. இதில் பங்கேற்ற ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனையான சாக்சி மாலிக் கூறியதாவது.
மனதின் குரல் நிகழ்ச்சியில் பெண் குழந்தைகளை காப்பாற்றுங்கள், பெண் குழந்தைகளை படிக்க வையுங்கள் என்று பிரதமர் மோடி பேசி வருகிறார். ஒவ்வொருவரின் மனதில் இருப்பதையும் அவர் கவனித்து வருகிறார். ஆனால் எங்களின் மனதின் குரல் அவருக்குக் கேட்கவில்லையா? நாங்கள் போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கம் வாங்கும் போதெல்லாம் எங்களை அழைத்து பாராட்டுகிறார். தன்னுடைய மகள்கள் என்று மரியாதை கொடுக்கிறார்.
இன்று நாங்கள் எங்கள் மனதின் குரலை கேட்க வேண்டும் என்று அவருக்கு கோரிக்கை விடுக்கிறோம். மத்திய அமைச்சர் ஸ்மிருதி ரானி, ஏன் இப்போது அமைதியாக இருக்கிறார்? என நான் கேட்க விரும்புகிறேன். நான்கு நாட்களாக நாங்கள் கொசுக் கடியைத் தாங்கிக் கொண்டு சாலையில் தூங்குகிறோம். உணவு தயாரிக்கவோ, பயிற்சி செய்யவோ எங்களை டெல்லி காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. நீங்கள் ஏன் அமைதியாக இருக்கிறீர்கள்? நீங்கள் இங்கு வாருங்கள், நாங்கள் சொல்வதைக் கேளுங்கள், எங்களுக்கு ஆதரவு கொடுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற வினேஷ் போகத் கூறும்போது, “இந்த விவகாரம் தொடர்பாக நாங்கள் பேச வேண்டிய நபர்களின் தொலைபேசி எண்கள் எங்களிடம் இல்லை. எனவே நாங்கள் ஊடகங்கள் மூலம் பிரச்சினைகளை எழுப்பி பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். இதன் வாயிலாக ஒருவேளை அவர் எங்களுடைய அழுகையை கேட்கலாம். பிரதமர் அவருடைய மனதின் குரலை நிகழ்ச்சியாக நடத்துகிறார். ஆனால் ஒரு நிமிடம் கூட அவர், எங்களது மனதின் குரலை கேட்க வேண்டும் என சிந்தித்தாரா? இக்கட்டான சூழ்நிலையில் தேசத்தின் மகள்கள் சாலையில் போராடுகிறோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT