Published : 26 Apr 2023 10:06 AM
Last Updated : 26 Apr 2023 10:06 AM
நடப்பு ஐபிஎல் சீசனின் 70 லீக் போட்டிகளில் சரிபாதி ஆட்டங்கள் ஆடப்பட்டுள்ளது. 10 அணிகளும் தலா 7 போட்டிகளில் விளையாடி உள்ளன. இந்நிலையில், இந்த சீசனில் பங்கேற்று விளையாடும் பிரதான இந்திய வீரர்களின் பணிச்சுமையை கவனிக்கிறதா பிசிசிஐ? என்பதை பார்ப்போம்.
எதிர்வரும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, ஆசியக் கோப்பை, இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் உலகக் கோப்பை தொடர் என நடப்பு ஐபிஎல் சீசன் முடிந்ததும் இந்த ஆண்டு முழுவதும் இந்திய கிரிக்கெட் அணி பிஸியாக இயங்க வேண்டிய நிர்பந்தம் உள்ளது. அதே நேரத்தில் கடந்த 2021 டி20 உலகக் கோப்பை தொடரில் முதல் சுற்றோடு வெளியேறியது இந்தியா. அப்போது ‘பணிச்சுமை தான் காரணம்’ என இந்திய வீரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 2022 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தக் கதை அப்படியே மாறி காயம் காரணமாக பிரதான வீரர்களான பும்ரா, ஜடேஜா போன்றவர்கள் விளையாடவில்லை.
பிசிசிஐ ரிவ்யூ: இதையெல்லாம் கருத்தில் கொண்டு நடப்பு ஐபிஎல் சீசனின் போது வீரர்களின் உடற்திறன், மன அழுத்தம் மற்றும் பணிச்சுமை போன்றவை கண்காணிக்கப்பட்டு, அதற்கு ஏற்றார் போல திட்டங்கள் இருக்கும் என கடந்த ஜனவரியில் நடைபெற்ற பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்ற ரிவ்யூ கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
பயிற்சியாளர் திராவிட்: “ஐபிஎல் கிரிக்கெட்டை பொறுத்தவரையில் ஃபிரான்சைஸ்களுடன் தேசிய கிரிக்கெட் அகாடமியும், மருத்துவக் குழுவினரும் தொடர்பில் இருப்பார்கள். காயம் குறித்த அச்சுறுத்தல் இல்லாத வரை பிரதான வீரர்கள் ஐபிஎல் விளையாடலாம். காயமோ அல்லது அது குறித்த அச்சுறுத்தலோ பிரதான வீரர்களுக்கு இருந்தால் பிசிசிஐ நடவடிக்கை எடுக்க உரிமை உள்ளது” என அதே ஜனவரியில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட் தெரிவித்திருந்தார்.
யார் அந்த பிரதான இந்திய வீரர்கள்? பிசிசிஐ-யின் ரேடாரில் உள்ள வீரர்கள் என்றால் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, சுப்மன் கில், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, முகமது சிராஜ், அக்சர் படேல், ஹர்திக் பாண்டியா, ஷர்துல் தாக்கூர், கே.எல்.ராகுல், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், அஸ்வின், சஹல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், ரஹானே, உனத்கட் ஆகியோர் இருக்க வாய்ப்புகள் அதிகம். இது தவிர காயத்தில் சிக்கியுள்ள பும்ரா, ஸ்ரேயஸ் ஐயரையும் பிசிசிஐ கூர்ந்து கவனித்து வரும். விபத்தில் சிக்கிய ரிஷப் பந்த் இந்த ஆண்டு முழுவதும் கிரிக்கெட் விளையாட வாய்ப்பு இல்லை என சொல்லப்படுகிறது.
இதுவரை ஐபிஎல் 2023-ல் இந்த வீரர்கள் ஓய்வு எடுத்துக் கொண்டனரா? நாம் இதுவரையிலான லீக் போட்டிகளை கவனித்த வரையில் பவுலர்கள் இம்பாக்ட் பிளேயர் விதியை பயன்படுத்தி பேட் செய்ய மாற்று வீரர்கள் வருகிறார்கள். அதுவே ஆல்-ரவுண்டர்கள் டபுள் டியூட்டி செய்ய வேண்டி உள்ளது. அதில் அக்சர் படேல், அஸ்வின், ஹர்திக் பாண்டியா ஆகியோர் அதை செய்து வருகின்றனர்.
ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் என இருவரும் இம்பாக்ட் பிளேயராக தலா ஒரு போட்டியில் விளையாடி உள்ளனர். சுப்மன் கில், மூன்று முறை இம்பாக்ட் வீரராக விளையாடி உள்ளார். சஹல், மூன்று போட்டிகளில் இம்பாக்ட் பிளேயராக விளையாடி உள்ளார். சிராஜ், 2 முறை இம்பாக்ட் பிளேயராக விளையாடி உள்ளார். ஹர்திக் பாண்டியா ஒரு போட்டியில் விளையாடவில்லை. ஷர்துல் தாக்கூர், கொல்கத்தா கடைசியாக விளையாடிய 2 போட்டிகளில் அணியில் இடம்பெறவில்லை. ஆர்சிபி அணிக்காக விளையாடி வரும் கோலி, டூப்ளசிஸ் இம்பாக்ட் பிளேயராக விளையாடும் காரணத்தால் அணியை கேப்டனாகவும் வழி நடத்துகிறார். அதனால் அவருக்கு பணிச்சுமை கூடியுள்ளது. பஞ்சாப் அணி கேப்டன் ஷிகர் தவான், 3 போட்டிகளாக விளையாடவில்லை. இதை எல்லாம் பிசிசிஐ கவனிக்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT