Published : 25 Apr 2023 09:12 AM
Last Updated : 25 Apr 2023 09:12 AM

பாகிஸ்தான் பந்து வீச்சை அடித்து நொறுக்கி சதம் விளாசிய ஹாங்காங் வீரர்! - டி20 தொடரை சமன் செய்தது நியூஸி.

மார்க் சின்க்ளைர் சாப்மேன்

ராவல்பிண்டியில் நேற்று இரவு நடைபெற்ற 5-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் நியூஸிலாந்து அணி பாகிஸ்தான் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அடித்து நொறுக்கியது. நியூஸிலாந்து அணிக்கு ஆடிவரும் ஹாங்காங்கில் பிறந்தவரான மார்க் சின்க்ளைர் சாப்மேன் என்ற இடது கை வீரர் 57 பந்துகளில் 11 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 104 ரன்களை விளாசி ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் என்ற இரண்டு விருதுகளையும் தட்டிச் சென்றார். இது சாப்மேனுடைய முதல் டி20 சதமாகும்.

டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் டாம் லேதம் முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார். பாகிஸ்தான் அணியில் முகமது ரிஸ்வான் மீண்டும் தான் யார் என்று நிரூபித்து 62 பந்துகளில் 7 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 98 ரன்கள் விளாசி நாட் அவுட்டாகத் திகழ, இப்திகார் (22 பந்து 36 ரன்), இமாத் வாசிம் (14 பந்தில் 31 ரன்) கடைசியில் விளாச பாகிஸ்தான் 20 ஒவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 193 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை எட்டியது. தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து அணி ஷாஹின் ஷா அஃப்ரீடி, இமாத் வாசிம் பந்து வீச்சில் 9.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 73 ரன்கள் என்று முடங்கியது.

ஆனால் அதன் பிறகுதான் மார்க் சாப்மேன் 104 ரன்களை விளாச, ஜேம்ஸ் நீஷம் 25 பந்துகளில் 45 ரன்களை விளாச 19.2 ஓவர்களில் மேற்கொண்டு விக்கெட்டுகளை இழக்காமலேயே 194 ரன்களை எட்டி அபார வெற்றி பெற்று, தொடரை 2-2 என்று சமன் செய்தது. ஷாஹின் அப்ரீடி, ஷதாப் கான், ஃபாஹிம் அஷ்ரப் பந்து வீச்சிற்கு செம சாத்து விழுந்தது. இஹ்சானுல்லா, ஹாரிஸ் ராவுஃப் ஆகியோரும் ரன்களை வாரி வழங்கினர்.

மார்க் சாப்மேன் இந்த டி20 தொடர் முழுவதுமே தனது துல்லிய பெரிய ஹிட்டிங் மூலம் ஒரு பெரிய இன்னிங்ஸ் உண்டு என்பதை நினைவுபடுத்தியபடியேதான் இருந்தார். நேற்று மாட்டி விட்டது, சிக்கினர் பாகிஸ்தானின் சிறந்த டி20 பவுலர்கள். இது நியூஸிலாந்தின் 100வது டி20 வெற்றியாகும். டேரில் மிட்செலை இமாத் வாசிம் வெளியேற்றிய போது நியூஸிலாந்தின் ஸ்கோர் 4 விக்கெட்டுக் இழப்பிற்கு 73 ரன்கள். அடுத்த 10 ஓவர்களில் வெற்றிக்கு தேவை 121 ரன்கள். அப்போதுதான் சாப்மேன் வந்தார். இந்தத் தொடரில் அவர் 290 ரன்களை விளாசினார், ஒருமுறைதான் அவரை வீழ்த்த முடிந்துள்ளது.

இறங்கியவுடன் 11வது ஓவரில் ஃபாஹின் அஷ்ரபை 14 ரன்கள் விளாசினார். அடுத்த 5 ஓவர்களுக்கு பாகிஸ்தான் பவுலர்களுக்கும் சரி, கேப்டனுக்கும் சரி, பீல்டர்களுக்கும் சரி என்ன நடந்தது என்றே தெரியவில்லை. பீல்ட்ர்கள் பவுண்டரி பக்கம் பறந்து கொண்டிருந்தனர். நீஷமும், சாப்மேனும் 5 ஓவர்களில் 71 ரன்களை விளாசித்தள்ளினர். ஆனால் சாப்மேனுக்கும் அதிர்ஷ்டம் இல்லாமல் இல்லை, பாகிஸ்தானின் சொதப்பல் பீல்டிங் கைக்கொடுத்தது. ஷதாப் கான் எளிதான கேட்சை விட, ஷாஹின் அஃப்ரீடி தன் கைக்கு வந்த கேட்சை விட்டார். கேட்ச் விட்டப் பந்தில்தான் சாப்மேன் பீல்டிங் சொதப்பலினால் 2 ரன்கள் ஓடி சதத்தை நிறைவு செய்தார்.

அடித்த அடியில் ஓவருக்கு 12 ரன்களுக்கும் மேல் தேவை என்ற நிலையிலிருந்து மாறி கடைசி 2 ஓவர்களில் 12 ரன்களே தேவை என்ற நிலை ஏற்பட்டது. 4 பந்துகள் மீதமிருக்க நியூஸிலாந்து வெற்றி பெற்றது, அதோடு இந்தத் தொடரில் 0-2 என்று பின் தங்கிய நிலையிலிருந்து தொடரை 2-2 என்று சமன் செய்தது நியூஸிலாந்து.

இந்த வார இறுதியில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் பாகிஸ்தானை, பாகிஸ்தானில் சந்திக்கின்றது நியூஸிலாந்து.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x