Published : 25 Apr 2023 07:55 AM
Last Updated : 25 Apr 2023 07:55 AM

சிட்னி மைதான வாயிலுக்கு சச்சின் பெயர்!

மைதானத்தின் வாயிலுக்கு சச்சின் மற்றும் லாரா என இருவரது பெயரும் சூட்டப்பட்டுள்ளது

சிட்னி: கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களான இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர் பிரையன் லாராவை கவுரவித்துள்ளது சிட்னி கிரிக்கெட் மைதானம். அவர்களின் நினைவாக மைதானத்தின் வாயிலுக்கு இருவரது பெயரும் சூட்டப்பட்டுள்ளது. அதனை கடந்துதான் ஆடுகளத்துக்குள் வெளிநாட்டு அணியின் வீரர்கள் செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சச்சின் டெண்டுல்கரின் 50-வது பிறந்தநாளான நேற்று அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. சிட்னி மைதானத்தில் சச்சின் டெண்டுல்கர் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3 சதங்களுடன் 785 ரன்கள் சேர்த்துள்ளர். இங்கு அவரது அதிகபட்ச ஸ்கோர் 241* ஆகும். இந்த இரட்டை சதத்தை சச்சின் 2004-ம் ஆண்டு தொடரின் போது விளாசியிருந்தார். அவரது சராசரி சிட்னியில் 157 ஆகும்.

சச்சின் கூறும்போது, “இந்தியாவுக்கு வெளியே சிட்னி கிரிக்கெட் மைதானம் எனக்கு ரொம்பவே பிடித்த ஒன்று. எனது முதல் ஆஸ்திரேலிய (1991-92) பயணத்தில் இருந்து இனிதான நினைவுகளை இந்த மைதானத்துடன் கொண்டுள்ளேன். இந்த மைதானத்தில் வெளிநாட்டு வீரர்கள் மைதானத்தை அணுகக்கூடிய பாதையில் எனது பெயரிலும் எனது சிறந்த நண்பன் பிரையன் லாராவின் பெயரிலும் வாயில் அமைக்கப்பட்டுள்ளது பெருமையாக உள்ளது. இந்த செயலுக்காக சிட்னி கிரிக்கெட் மைதான குழுவுக்கும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

பிரையன் லாரா சிட்னி மைதானத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 277 ரன்கள் விளாசியிருந்தார். இந்தசாதனை நிகழ்வும் தற்போது நினைவுகூரப்பட்டுள்ளது. பிரையன் லாரா-சச்சின் டெண்டுல்கர் என பெயரிடப்பட்ட மைதானத்தின் வாயிலை திறப்பதற்கான நிகழ்ச்சியில் சிட்னி மைதான அதிகாரிகள், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைமைச் செயல் அதிகாரி நிக் ஹாக்லி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சிட்னிக்கு விளையாட வரும் வெளிநாட்டு வீரர்கள் இனிமேல் லாரா-டெண்டுல்கர் பெயர் பொறித்த மைதான வாயிலை கடந்துதான் ஆடுகளத்துக்குள் களமிறங்குவார்கள். ஏனெனில் இந்த வாயில் வெளிநாட்டு வீரர்களின் ஓய்வறைக்கும் நோபிள் பிராட்மேன் கேலரிக்கும் இடையில் அமைந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x