Published : 24 Apr 2023 09:34 PM
Last Updated : 24 Apr 2023 09:34 PM

IPL 2023: DC vs SRH | மீண்டும் சொதப்பிய டெல்லி பேட்டிங் யூனிட்  - ஹைதராபாத் அணிக்கு 145 ரன்கள் இலக்கு

ஹைதராபாத்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களை மட்டுமே சேர்த்தது.

16ஆவது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்றைய 34-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்தின. ஹைதாராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி 3-வது பந்திலேயே பிலிப் சால்ட் விக்கெட்டாகி டெல்லி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். அடுத்து வந்த மிட்செல் மார்ஷை நடராஜன் எல்பிடபள்யூ முறையில் வெளியேற்றினார். கடந்த போட்டிகளில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் வார்னர் 21 ரன்களில் கிளம்பினார். சர்ஃபராஸ்கானும், அமன் ஹக்கீம் கானும் அவுட்டாக 7ஆவது ஓவரில் மட்டும் 3 விக்கெட்டுகளை எடுத்தார் வாஷிங்டன் சுந்தர். இதனால் 10 ஓவர் முடிவதற்குள் 5 விக்கெட்டை பறிகொடுத்த டெல்லி அணி 72 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது.

அக்சர் படேல், மணீஷ் பாண்டே நிதானமாக ஆடி விக்கெட் இழப்பை தடுக்க முயற்சித்தாலும் விதி அக்சர் படேலை விடவில்லை. புவனேஷ்குமார் பந்தில் போல்டாகி இந்த ஆட்டத்தில் அணியின் தனிநபர் ஸ்கோர்களில் அதிகபட்ச ஸ்கோரான 34 ரன்களைச் சேர்த்துவிட்டு கிளம்பினார். அதே ஸ்கோருடன் ரன்அவுட்டாகி மனீஷ் பாண்டேவும் கிளம்ப நண்பனின் பிரிவை ஏற்காத ‘நட்புக்காக’ படம் போல களம் மாறியது. ரிபால் படேல், அன்ரிச் நார்ட்ஜே அடுத்தடுத்து ரன்அவுட்டாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி 144 ரன்களை மட்டுமே சேர்த்தது.

ஹைதராபாத் அணி தரப்பில் வாஷிங்கடன் சுந்தர் 3 விக்கெட்டுகளையும், புவேனஷ்குமார் 2 விக்கெட்டுகளையும், நடராஜன் 1 விக்கட்டையும் வீழ்த்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x