Published : 23 Apr 2023 02:18 PM
Last Updated : 23 Apr 2023 02:18 PM
கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது 50வது பிறந்தநாளைக் கொண்டாடவுள்ள நிலையில் தனக்கு பிடித்த உணவு தொடங்கி பிடித்த சினிமா வரை ஒரு கலகலப்பான பேட்டி கொடுத்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் என்றால் எப்போதும் கிரிக்கெட் பற்றிமட்டும் தான் பேச வேண்டுமா என்ற ரகத்தில் அந்தப் பேட்டி சுவாரஸ்யமாக உள்ளது.
அந்தப் பேட்டியிலிருந்து சில கேள்வி பதில்கள்:
பிறந்தநாள் பார்ட்டிகள் உங்கள் பார்வையில்..
என் சிறு வயதில் அப்படியான கொண்டாட்டங்கள் ஏதுமிருந்ததில்லை. ஒரு சின்ன கேக் வெட்டுவோம். கிரிக்கெட்டில் பிஸியான பின்னர் அதுவும் கிடையாது. அதனால் எனக்கு பிறந்தாள் பார்ட்டிகளில் பெரிய ஈடுபாடு இல்லை. கிரிக்கெட் மைதானத்தில் சில நேரங்களில் என் பிறந்தநாளை சகாக்களுடன் வடா பாவ் சாப்பிட்டுக் கொண்டாடியிருக்கிறேன்.
பிறந்தநாள்.. சமூக வலைதளங்கள் வந்த பிறகு எப்படியுள்ளது?
சமூக வலைதளங்கள் வந்த பின்னர் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் எப்படியுள்ளது என்றால் என்னுடைய ரசிகர்கள் அனைவருமே எனக்கு வாழ்த்து சொல்ல ஒரு தளம் இருக்கிறது. அன்பு செய்யப்படுவது அழகானது.
இதுவரை உங்களுக்குக் கிடைத்த பிறந்தநாள் பரிசுகளிலேயே மறக்க முடியாதது..
இதுவரை எனக்குக் கிடைத்த பிறந்தநாள் பரிசுகளிலேயே மறக்க முடியாதது என் சகோதரி சவிதா எனக்கு வாங்கிக் கொடுத்த கிரிக்கெட் மட்டை. அது காஷ்மீர் வில்லோ மரத்தில் செய்யப்பட்டதாகும். அதுதான் எனக்குக் கிடைத்த முதல் முறையான பேட். அடுத்ததாக சைக்கிள். எனது காலனியில் நிறைய பேரிடம் சைக்கிள் இருந்தது. என்னிடம் மட்டுமே சைக்கிள் இல்லை. உடனே சைக்கிள் வாங்கித்தரும் வரை கீழே விளையாடப் போக மாட்டேன் என்றார். அப்போது எனக்கு 6 அல்லது 7 வயது இருக்கும். என் அப்பா வாங்கித் தருவதாக உறுதியளித்தார். ஆனால் அவர் வாங்கித்தரும் வரை வெளியே செல்லவில்லை. என் அப்பாவின் சூழலை அறியாமல் நான் அவரிடம் கேட்டுவிட்டேன். ஆனால் என் அப்பா நான் கேட்ட எதையுமே வாங்கித்தராமல் இருந்ததில்லை.
உங்கள் தந்தையிடமிருந்து நீங்கள் கற்ற பண்புகள் என்ன?
என் தந்தை அமைதியானவர். எல்லாவற்றிற்கும் தீர்வு காண முயற்சிப்பார். குடும்பத்தினர் எல்லோரும் அவரிடம்தாம் ஆலோசனை கேட்பார்கள்.என் தந்தை அடுத்தவர்களின் பிரச்சினைகளை தன் பிரச்சினைகளாகக் கருதி உதவுவார். நாங்கள் இருந்த வீடு நான்காவது மாடியிலிருந்தது. எங்கள் வீட்டுக்கு போஸ்ட்மேன் வந்தால் அவரை உள்ளே அழைத்து அமரவைத்து மின்விசிறி போட்டு தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்துவார். என் தந்தையின் பண்புகளில் 50 சதவீதத்தை மட்டுமே கடைபிடித்தாலும் கூட நான் ஆகச்சிறந்த மனிதனாக இருந்திருப்பேன்.
உங்கள் தாயைப் பற்றிச் சொல்லுங்கள்.
என் தாயார் மன உறுதி கொண்டவர். கடுமையான உழைப்பாளி. அவர் எல்ஐசி அலுவலகத்தில் வேலை செய்தார். ஒருமுறை அவர் பணியிலிருந்து திரும்பும்போது ஒரு திருடன் அவரது பர்ஸை பறித்துச் சென்றார். ஆனால் என் தாயார் துணிச்சலுடன் திருடனை மடக்கிப் பிடித்து அதை மீட்டார். அவரைப் பற்றிய செய்திகள் செய்தித்தாள்களில் வந்தன. அவருக்கு மூட்டுவலி உண்டு. ஆனாலும் அவரே அவருடைய வாழ்க்கைமுறையை பண்படுத்தி அதற்குத் தீர்வு கண்டு கொண்டார். அவர் எப்போதுமே சோர்ந்துபோகமாட்டார். அவர் முகத்தில் எப்போதுமே புன்னகை இருக்கும்.
விளையாட்டுத் துறை தாண்டி உங்களுக்குப் பிடித்த நபர்கள் யார்?
எனக்கு அன்னை தெரசா மீது மிகுந்த மரியாதை உண்டு. என் வாழ்வின் இரண்டாவது பகுதியில் நான் அதை மட்டுமே செய்ய வேண்டும் என்று எப்போதுமே நான் நினைத்ததுண்டு. அவர் செய்த தொண்டில் ஒரு சிறிதளவேனும் செய்திட வேண்டும். அதனால் தான் இப்போது ஒரு தொண்டு நிறுவனம் நடத்துகிறேன். Sachin Tendulkar Foundation என்ற அந்த அமைப்பில் நாங்கள் குழந்தைகளில் கல்வி, விளையாட்டு, ஆரோக்கிய மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். நான் சிறிய வயதிலேயே அன்னை தெரசாவை நிறைய முறை தொலைக்காட்சியில் பார்த்துள்ளேன். வெளிநாட்டில் பிறந்து நம் நாட்டிற்கு வந்து அவர் செய்த தொண்டுகள் ஆச்சரியமளிக்கக் கூடியவை. எத்தனை பேருக்கு அந்த மனசு வரும். அவரைத் தவிர நெல்சன் மண்டேலாவும் எனக்கு மிகவும் பிடிக்கும்.
உங்களை கிச்சன் வீடியோவில் பார்த்துள்ளோம்.. நீங்கள் எந்த உணவை நன்றாக சமைப்பீர்கள்?
பார்பிக்யூ உணவுகளை சிறப்பாகச் செய்வேன். கூடவே பைங்கன் பார்தா, மீன் குழம்பு நன்றாக செய்வேன். மீன் ஃப்ரெஷானதா இல்லையா என்பதை பார்த்தமாத்திரத்தில் கண்டுபிடித்துவிடுவேன். ட்ரெஸ்ஸிங் ரூமில் நிறைய முறை மீன் சாப்பாட்டை முகர்ந்து பார்த்தே அது ஃப்ரெஷ்ஷா இல்லையே என்று சொல்லியிருக்கிறேன்.
உங்களுக்குப் பிடித்த உணவு?
வீட்டில் சமைத்த எல்லா உணவும் எனக்குப் பிடிக்கும். ஜப்பானிய உணவுவகைகள் எனக்கு ரொம்பவே பிடிக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT