Published : 22 Apr 2023 07:43 AM
Last Updated : 22 Apr 2023 07:43 AM
சென்னை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி. சிஎஸ்கேவுக்கு இது 4-வது வெற்றியாக அமைந்தது.
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி பீல்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடக்க வீரரான ஹாரி புரூக் 13 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 18 ரன்கள் எடுத்த நிலையில் ஆகாஷ் சிங் பந்தில் ருதுராஜ் கெய்க்வாட்டிடம் பிடிகொடுத்து நடையை கட்டினார். மற்றொரு தொடக்க வீரரான அபிஷேக் சர்மா26 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார்.
சீராக விளையாடிய ராகுல் திரிபாதி 21 பந்துகளில், தலா ஒரு சிக்ஸர், பவுண்டரியுடன் 21 ரன்களில் ஜடேஜா பந்தில் நடையை கட்டினார். கேப்டன் எய்டன் மார்க்ரம் 12 பந்துகளில் 12 ரன்கள் எடுத்த நிலையில்தீக்சனாவிடம் வீழ்ந்தார். ஹெய்ன்ரிச்கிளாசென் 17, மயங்க் அகர்வால் 2, வாஷிங்டன் சுந்தர் 9 ரன்களில் நடையை கட்டினர். மார்கோ யான்சன் 22 பந்துகளில் 17 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.சிஎஸ்கே தரப்பில் ஜடேஜா 4 ஓவர்களை வீசி 22 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார். ஆகாஷ் சிங், தீக்சனா, பதிரனா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
ஹைதராபாத் அணி முதல் 10 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 76 ரன்கள் எடுத்தது. ஆனால்கடைசி 10 ஓவர்களில் அந்த அணியால் மேற்கொண்டு 58 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்தகாலக்கட்டத்தில் 5 விக்கெட்களையும் தாரை வார்த்தது. சிஎஸ்கே சுழற்பந்து வீச்சாளர்கள் ஆடுகளத்தின் தன்மையை சரியாக பயன்படுத்திக் கொண்டு ஹைதராபாத்தின் ரன் குவிப்பை வெகுவாக கட்டுப்படுத்தினர். சிஎஸ்கே பந்து வீச்சாளர்கள் கூட்டாக 10 ஓவர்களை வீசி 62 ரன்களை வழங்கி 4 விக்கெட்களை சாய்த்தனர். அதேவேளையில் வேகப்பந்து வீச்சில் பதிரனா அதிக வேறுபாடுகளை தனது பந்து வீச்சில் காண்பித்து அழுத்தம் கொடுத்தார்.
135 ரன்கள் இலக்குடன் பேட் செய்த சிஎஸ்கே அணி18.4 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு138 ரன்கள் எடுத்து 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. கான்வே 52 பந்துகளில், 12 பவுண்டரிகள், ஒருசிக்ஸருடன் 77 ரன்கள் விளாசிஆட்டமிழக்காமல் இருந்தார். மொயின் அலி 2 ரன்கள் சேர்த்தார்.
முன்னதாக ருதுராஜ் கெய்க்வாட் 30 பந்துகளில், 2 பவுண்டரிகள், 35 ரன்கள் எடுத்த நிலையில்ரன் அவுட் ஆனார். முதல் விக்கெட்டுக்கு டேவன் கான்வேயுடன் இணைந்து 11 ஓவர்களில் 87 ரன்கள் சேர்த்தார் ருதுராஜ் கெய்க்வாட். அஜிங்க்யரஹானே 9, அம்பதி ராயுடு 9 ரன்கள் எடுத்தனர்.
சிஎஸ்கேவுக்கு இது 4-வது வெற்றியாக அமைந்தது. இதன் மூலம் 8 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்தில் தொடர்கிறது. ராஜஸ்தான், லக்னோ அணிகள் தலா 8 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் முதல் இரு இடங்களில் உள்ளன. ஹைதராபாத் அணிக்கு இது 4-வது தோல்வியாக அமைந்தது.
6 ஆட்டங்களில் விளையாடிய அந்த அணி 2 வெற்றியுடன் 4 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தில் தொடர்கிறது.
‘பிடி மன்னன் தோனி’
ஆடவருக்கான டி 20 கிரிக்கெட்டில் அதிக கேட்ச்கள் செய்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்துள்ளார் சிஎஸ்கே அணி கேப்டன் தோனி. நேற்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் தீக்சனா பந்தில் மார்க்ரம் அடித்த பந்தை தோனி கேட்ச் செய்து இந்த சாதனையை எட்டினார். தோனி இதுவரை 208 கேட்ச்கள் செய்துள்ளார். இந்த வகை சாதனையில் குயிண்டன் டி காக் (207), தினேஷ் கார்த்திக் (205) அடுத்த இடங்களில் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT