Published : 21 Apr 2023 12:07 PM
Last Updated : 21 Apr 2023 12:07 PM

‘உங்கள் ரகசியங்கள் என் கையில்; பாக். கிரிக்கெட்டே காலியாயிடும்!’ - உமர் அக்மல் மிரட்டல்

உமர் அக்மல் | கோப்புப்படம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்கள் பலரின் ரகசியம் தன் கையில் இருப்பதாகவும் அத்தனையும் எடுத்து விட்டேன் என்றால் உங்கள் இமேஜ் கிழிந்து விடும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் உமர் அக்மல், மூத்த வீரர்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டன் பாபர் அசாம், அக்மல் சகோதரர்களான கம்ரன், உமர், அத்னன் அக்மலின் நெருங்கிய உறவினர் என்பது ஒருபுறம் இருக்க. கடந்த ஆண்டு, இன்சமாம்-உல்-ஹக் உடனான பாபர் ஆசாமின் நேர்காணல் தற்போதைய பாகிஸ்தான் கிரிக்கெட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது, அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்பக் கட்டத்தில் அவருக்கு ஒரு ஜோடி ஜாகர்களை வழங்க வேண்டும் என தான் கேட்டதாகவும். நெருங்கிய உறவினர்கள், அதாவது கிரிக்கெட் வீரர்கள் மறுத்ததாகவும் குறிப்பிட்டார். அதாவது அக்மல் சகோதரர்கள்தான் அப்படிச் செய்ததாக சூசகமாக தகவல்கள் பரவின.

பாபர் அசாம் அக்மல் சகோதரர்களில் யார் தனக்கு ஜாகர்களை தர மறுத்தது என்று பெயரைக் குறிப்பிடவில்லை. ஆனால், அது உமர் அக்மலாக இருக்கலாம் என்ற யூகங்கள் எழுந்தன.

இந்நிலையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பாபர் அசாம் என் பெயரைக் குறிப்பிடாதவரை நீங்களாகவே கற்பனைக் கதையை அவிழ்த்து விடாதீர்கள் என்று உமர் அக்மல் கூறியிருந்தார்.

இவரது வீடியோக்களில் இவர் கூறும் கருத்துக்கள் முதிர்ச்சியின்மையையும், சிறுபிள்ளைத்தனத்தையும் காட்டுகின்றது என்று கிரிக்கெட் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். இது குறித்த கேள்விக்கு பதில் அளித்த உமர் அக்மல், “என்னுடைய முதிர்ச்சி பற்றியக் கருத்துக்கள் கிரிக்கெட் வீரர்களிடமிருந்துதான் வருகின்றன.

உங்கள் ஷோ மூலம் நான் அவர்களுக்கு தெள்ளத் தெளிவாக சொல்ல விரும்புவது என்னவெனில், நான் அவர்களுடன் ஏராளமாக கிரிக்கெட் ஆடியுள்ளேன். அவர்கள் எனக்கு சீனியர்கள். ஆகவே அவர்கள் வாயை மூடிக்கொண்டு இருப்பதுதான் அவர்களுக்கு நல்லது. ஏனெனில் அவர்களது ரகசியங்கள் அனைத்தையும் நான் அறிவேன்.

அதையெல்லாம் நான் எடுத்து வெளியே விட்டால் அவர்கள் மரியாதை அம்போவாகிவிடும். உங்களிடம் வலுவான ஆதாரம் இல்லாத போது எந்த வீரரைப் பற்றியும் அவதூறு செய்யாதீர்கள்” என்றார்.

உடனே நேர்காணல் செய்பவர் உமர் அக்மலிடம், நீங்கள் யாரைச் சொல்கிறீர்கள் என்று கேட்க, ‘நான் குறிப்பிடாமல் குறிப்பிடுவது அந்த குறிப்பிட்ட நபருக்கு தெரியும், என் மீது அவதூறு செய்தால் என் குடும்பம் பாதிக்கும். அதே போல் நான் அவர்களது ரகசியங்களை வெளியே விட்டால் அவர்கள் குடும்பங்களும் காயமடையும். அந்த ரகசியங்களை நான் வெளியே விட்டால் அருமையான பாகிஸ்தான் ரசிகர்கள் கிரிக்கெட் பார்ப்பதையே விட்டுவிடுவார்கள், அதற்காகத்தான் பார்க்கிறேன். அதை நான் விரும்பவில்லை’ என்று சூசகமாகப் பதில் அளித்தார்.

வடிவேலு ஜோக் ஒன்றில் வருவது போல், ‘யார் கேட்டாலும் சொல்லிடாதீங்க, அடிச்சுக்கூட கேப்பாங்க அப்பவும் சொல்லிடாதீங்க’ என்ற ரீதியில் உமர் அக்மல் பேட்டி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x