Published : 21 Apr 2023 11:20 AM
Last Updated : 21 Apr 2023 11:20 AM
புதுடெல்லி: நடப்பு ஐபிஎல் சீசனின் 28-வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டெல்லி அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வி கண்ட டெல்லி அணி, நடப்பு சீசனில் பதிவு செய்துள்ள முதல் வெற்றி இது.
இந்தச் சூழலில் வெற்றிக்குப் பிறகு டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர், பத்திரிகையாளர்களை சந்தித்தார் அப்போது அவரது ஸ்ட்ரைக் ரேட் குறித்து, அணியின் பேட்டிங் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. இந்தப் போட்டியில் பிரித்வி ஷா மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோர் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சீசன் முழுவதும் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக உள்ள அவர்கள் இருவரும் ரன் சேர்க்க தடுமாறி வருகின்றனர்.
“நாங்கள் அதிகம் விவாதிக்கவில்லை. ஏனெனில், வீரர்கள் அனைவரும் அவரவர் திறனுக்கு ஏற்ப செயல்பட்டால் போதும் என எண்ணினோம். எப்படி பேட் செய்வது என்றெல்லாம் என்னால் சொல்ல முடியாது. மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் பவுலர்கள் பந்து வீசினால் அதை எபபடி எதிர்கொள்வது என்ற டெக்னிக்கை பேட்ஸ்மேன்கள் அறிந்திருக்க வேண்டியது அவசியம். குறிப்பாக ஷார்ட்டாக வீசப்படும் பந்துக்கு இந்த டெக்னிக் அவசியம். இதை வலைப்பயிற்சியில் செய்ய முடியாது. ஆஸ்திரேலியாவில் கூட ஷார்ட் பிட்ச் டெலிவரிக்கு நாங்கள் பயிற்சி செய்ய மாட்டோம். இந்த பார்மெட்டில் பவுலர்கள் ஒரே ஒரு ஷார்ட் பால்தான் ஒரு ஓவரில் வீச முடியும். அதனால் அதை எதிர்கொள்ள பேட்ஸ்மேன்கள் தயாராக இருக்க வேண்டும். இது நிகழ் நேர ரியாக்ஷன் ஸ்கில் சார்ந்தது. போட்டியின்போது மட்டுமே இதை செய்ய முடியும்” என வார்னர் தெரிவித்துள்ளார்.
வார்னரின் பழைய அதிரடி பாணி ஆட்டத்தை பார்க்க முடியவில்லையே என்ற விமர்சனத்திற்கு, “எனது வழக்கமான பேட்டிங் இல்லை என்பது குறித்து விமர்சனங்கள் நிறைய வருகின்றன. இரண்டு ஓவர்கள் இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட் இழந்தால் என்ன செய்ய முடியும். அந்த சமயத்தில் பொறுப்புடன் ஆட வேண்டியது அவசியம்” எனத் தெரிவித்துள்ளார். நடப்பு சீசனில் 6 போட்டிகளில் விளையாடி, 285 ரன்கள் எடுத்துள்ளார் வார்னர். 4 அரை சதங்கள் இதில் அடங்கும். அவரது ஸ்ட்ரைக் ரேட் 120.76 என உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT