Last Updated : 21 Sep, 2017 09:30 AM

 

Published : 21 Sep 2017 09:30 AM
Last Updated : 21 Sep 2017 09:30 AM

எனது கேப்டன் பதவி மோசமான நிலையில் இல்லை: ஸ்டீவ் ஸ்மித் கருத்து

எனது கேப்டன் பதவி மோசமான நிலையில் இல்லை என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் வங்கதேச டெஸ்ட் தொடரை ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 1-1 என சமன் செய்திருந்தது. மேலும் கடந்த மார்ச் மாதம் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி 1-2 என இழந்திருந்தது. குறுகிய வடிவிலான ஆட்டங்களிலும் ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கம் சமீபகாலமாக தளர்ந்து வருகிறது. இந்தியாவுக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.

இதற்கிடையே ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், “ஸ்மித்தின் கேப்டன் பணிக்கு சவால் ஏற்பட்டுள்ளது. வெற்றி பெறுவதற்கான வழிகளை அவர், வரையறுக்க வேண்டும். கொல்கத்தாவில் நடைபெற உள்ள 2-வது ஒருநாள் போட்டிதான் இந்தத் தொடரின் போக்கைத் தீர்மானிக்கும்” என்று கருத்து தெரிவித்திருந்தார்.

அவரது கருத்து ஆஸ்திரேலிய அணியின் சமீபகால சாதனைகளை சற்று திரும்பி பார்க்க வைத்துள்ளது. 2015-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற பிறகு ஆஸ்திரேலிய அணியிடம் பெரிய அளவிலான திறன்கள் ஒருநாள் போட்டிகளில் வெளிப்படவில்லை. கடந்த ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலிய அணி அரை இறுதிக்குக்கூட தகுதி பெறாமல் வெளியேறியிருந்தது.

இதனால் ஆஸ்திரேலிய அணி ஒருவித நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பதாக கருதப்படுகிறது. இதனால் இந்தியாவுக்கு எதிராக கொல்கத்தாவில் இன்று நடைபெறும் 2-வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று தொடரை 1-1 என சமநிலைப்படுத்த வேண்டும் என்ற முனைப்புடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்குகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற நிருபர்கள் சந்திப்பில் ஸ்டீவ் ஸ்மித் கூறியதாவது:

எனது கேப்டன் பதவி நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பதாக நான் கருதவில்லை. இந்த பதவியில் நான் மோசமான நிலையில் இல்லை. முடிவுகள் நாங்கள் எதிர்பார்த்தது போன்று இல்லை. சிலவற்றை நாங்கள் திருத்திக்கொள்ள முயற்சிக்கிறோம். கொல்கத்தா ஆட்டத்தில் நாங்கள் பதிலடி கொடுப்போம்.

தற்போதுள்ள வீரர்கள் மீது நம்பிக்கை உள்ளது. அவர்கள் அதிக திறன்களை பெற்றுள்ளதாகவே கருதுகிறோம். அடுத்த இரு ஆட்டங்களிலும் இந்தியாவுக்கு சவால் கொடுப்போம் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்கான அணியை நாங்கள் கொண்டுள்ளோம். சுழற்பந்து வீச்சாளராக அறிமுகமான நான் தற்போது பேட்டிங்கில் 3-வது வீரராக களமிறங்குகிறேன். ஆட்டத்தின் வழிமுறைகளை சரியாக அறிந்து கொண்டேன். 100-வது ஆட்டத்தில் விளையாட உள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது.

இவ்வாறு ஸ்டீவ் ஸ்மித் கூறினார்.

ஸ்டீவ் ஸ்மித், 99 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 3,188 ரன்கள் குவித்துள்ளார். இதில் 8 சதங்கள், 17 அரை சதங்கள் அடங்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x