Published : 20 Apr 2023 07:35 AM
Last Updated : 20 Apr 2023 07:35 AM

மொகாலியில் இன்று பலப்பரீட்சை: பெங்களூருவின் அதிரடி ஆட்டம் பஞ்சாபிடம் எடுபடுமா?

பெங்களூரு அணி வீரர்கள்

மொகாலி: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகல் 3.30 மணி அளவில் மொகாலியில் நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

பஞ்சாப் அணி 5 ஆட்டத்தில் 3 வெற்றி, 2 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. அதேவேளையில் பெங்களூரு அணி 5 ஆட்டத்தில் விளையாடி 2 வெற்றி, 3 தோல்விகளுடன் பட்டியலில் 8-வது இடம் வகிக்கிறது. பஞ்சாப் அணியில் கேப்டன் ஷிகர் தவண் தோள்பட்டை காயம் காரணமாக லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்கவில்லை. இந்த ஆட்டத்தில் சாம் கரண் தலைமையில் களமிறங்கிய பஞ்சாப் அணி 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

அணியின் வெற்றியில் 36 வயதான ஆல்ரவுண்டர் சிகந்தர் ராசாவுடன் பிரபலம் இல்லாத மேத்யூ ஷார்ட், ஹர்பிரீத் சிங், ஷாருக் கான் ஆகியோரும் முக்கிய பங்குவகித்தனர். எனினும் லக்னோ அணியைவிட பெங்களூரு அணி கூடுதல் பலம் வாய்ந்தது என்பதால் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணி அனைத்து துறையிலும் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே வெற்றியை வசப்படுத்த முடியும்.

ஆல்ர வுண்டரான சாம் கரண் இந்த சீசனில் மட்டை வீச்சில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. லக்னோ அணிக்கு எதிராக 3 முக்கிய விக்கெட்களை சாம் கரண் வீழ்த்திய போதும் பேட்டிங்கில் 6 ரன்கள் மட்டுமே சேர்த்தார். காயம் அடைந்துள்ள ஷிகர் தவண், இன்றைய ஆட்டத்தில் களமிறங்குவது சந்தேகம்தான். அவர் விளையாடாத பட்சத்தில் சாம் கரண் மட்டை வீச்சிலும் கைகொடுத்தால் அணியின் பலம் அதிகரிக்கும்.

லக்னோ அணிக்கு எதிராக தொடக்க வீரர்களான பிரப்சிம்ரன் சிங் (4), அதர்வா தைடே (0) ஆகியோர் எளிதாக ஆட்டமிழந்தனர். இன்றைய ஆட்டத்தில் இவர்கள் பொறுப்புடன் செயல்படுவதில் கவனம் செலுத்தக்கூடும். பந்து வீச்சில் சாம் கரணுடன் இணைந்து அர்ஷ்தீப் சிங், காகிசோ ரபாடா ஆகியோர் பெங்களூரு அணியின் பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் கொடுக்க ஆயத்தமாக உள்ளனர்.

பெங்களூரு அணி தனது கடைசி ஆட்டத்தில் சிஎஸ்கேவிடம் 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது. 226 ரன்கள் இலக்கு துரத்தப்பட்ட அந்த ஆட்டத்தில் விராட் கோலி (6), மஹிபால் லாம்ரோர் (0) விரைவாக ஆட்டம் இழந்ததால் டு பிளெஸ்ஸிஸ், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் மீதுபொறுப்பு விழுந்தது. இந்த ஜோடி வெற்றியை எட்டிப்பிடிக்கும் அளவுக்கு அணியை கொண்டுசென்ற நிலையில் ஆட்டம் இழந்து வெளியேறியது.

இதன் பின்னர் தினேஷ் கார்த்திக், ஷாபாஷ் அகமது, சுயாஷ் பிரபுதேசாய் ஆகியோர் உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்தி வெற்றியை வசப்படுத்தத் தவறினர். வெற்றிக்கு மிக நெருக்கமாக சென்று தோல்வியை சந்தித்தது அந்த அணிக்கு புள்ளிகள் பட்டியலில் பின்னடைவை கொடுத்தது. பந்து வீச்சை பொறுத்தவரையில் பஞ்சாப் அணியுடன் ஒப்பிடுகையில் பெங்களூரு அணி சற்று பலம் குறைந்தே காணப்படுகிறது. எனினும் மொகமது சிராஜ், ஹர்ஷால் படேல், வெய்ன் பார்னல், விஜயகுமார் வைசாக் ஆகியோர் போட்டியின் தினத்தில் பலம் சேர்க்கக் கூடியவர்களாகவே திகழ்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x