Published : 19 Apr 2023 11:28 AM
Last Updated : 19 Apr 2023 11:28 AM
சூர்யகுமார் யாதவை 360 டிகிரி வீரர் என்று வருணிக்கத் தொடங்கி சில நாட்கள் கூட ஆகவில்லை. இருந்தபோதும் அவரைக் கலாய்க்கும் அளவுக்கு அவரது பேட்டிங்கில் சரிவு ஏற்பட்டுள்ளது. ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் 8 ரன்கள் எடுத்தார். அதன்பிறகு மூன்று டக்குகள் என்று தொடர்ச்சியாக மிகவும் சாதாரணமாக ஆடி வருகின்றார் சூர்யகுமார் யாதவ். எப்படி, எங்கிருந்து இந்தச் சரிவு ஏற்பட்டது என்பதுதான் புரியாத புதிர். அனைத்து கிரிக்கெட்டிலும் சூர்யகுமார் யாதவின் கடைசி 10 போட்டிகளில் எடுத்த ரன்கள் இதோ:
ஆகமொத்தம் அவர் கடைசியாக விளையாடிய 10 போட்டிகளில் எடுத்துள்ள ரன்களின் எண்ணிக்கை 99 மட்டுமே. இதையடுத்து சூர்யகுமார் யாதவை கிண்டல் செய்து ‘வேர்ல்ட் கிரிக்கெட் மீம்ஸ்’ மீம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சூர்யாவை மிஸ்டர் 360 டிகிரி என்று வர்ணித்து 360 டிகிரியிலும் எப்படி எல்லாம் அவுட் ஆகியுள்ளார் என்று கலாய்த்து, படங்களையும் பகிர்ந்துள்ளது. அந்த மீம் இதோ..
நேற்று சூர்யகுமார் யாதவ் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக மார்க்கோ யான்சென் வீசிய அருமையான கட்டர் பந்தை வைட் மிட் ஆஃபில் அடிக்க அதை மார்க்ரம் அருமையாக கேட்ச் பிடிக்க 7 ரன்களில் அவர் வெளியேறினார். 12 ஓவர்களில் மும்பை 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 95 ரன்கள் எடுத்திருந்தது. ஆனால், அதன் பிறகு கேமரூன் கிரீன் (40 பந்துகளில் 64 ரன்கள்), திலக் வர்மா (17 பந்துகளில் 37 ரன்கள்) வெளுத்து வாங்க, கடைசி 6 ஓவர்களில் 83 ரன்களை விளாசி மும்பை இந்தியன்ஸ், பந்து மட்டைக்கு மெதுவாக, நின்று வரும் பிட்சில் 192 ரன்களை குவித்தனர்.
பிறகு இலக்கை விரட்டும்போது சன்ரைசர்ஸ் அணி 178 ரன்களையே எடுக்க முடிந்தது. இதற்குப் பிரதான காரணம் மயங்க் அகர்வால் 41 பந்துகளில் 48 ரன்களை எடுத்து சொதப்பியதால்தான். இல்லையெனில் மார்க்ரம், ஹென்ரிக் கிளாசன், மார்க்கோ யான்சென், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சன்ரைசர்ஸை வெற்றி பெறச் செய்திருப்பார்கள்.
மயங்க் அகர்வால் 41 பந்துகளில் குறைந்தது 60 ரன்களையாவது எடுத்திருந்தால் நிச்சயம் சன்ரைசர்ஸ் வெற்றி பெற்றிருக்கும். ஏதோ ஒருமுனையில் நின்று ஜெயிக்க வைக்கப் போவதாக பாவ்லா காட்டிய இன்னிங்ஸ் ஆகும் இது. சன்ரைசர்ஸ் 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகள் பெற்று 10-ம் இடத்தில் உள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு சற்று மேலே 9-ம் இடத்தில் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT