Published : 19 Apr 2023 09:09 AM
Last Updated : 19 Apr 2023 09:09 AM
சிட்னி: இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸி. அணியை கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. வரும் ஜூன் 7-ம் தேதி இங்கிலாந்தில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் இந்த இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.
இந்தப் போட்டி முடிந்த கையோடு ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்துக்கு எதிராக ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான முதல் இரண்டு போட்டிகளிலும் இதே அணி விளையாடும் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
அணி விவரம்: கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், மார்கஸ் ஹாரிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், நாதன் லயன், மிட்செல் மார்ஷ், டாட் மர்பி, மேத்யூ ரென்ஷா, ஸ்டீவ் ஸ்மித் , மிட்செல் ஸ்டார்க், டேவிட் வார்னர்.
நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள், இரண்டு ஆல் ரவுண்டர்கள், இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் என பலமாக உள்ளது பவுலிங் யூனிட். வார்னர் மற்றும் கவாஜா மட்டுமல்லாது மார்கஸ் ஹாரிஸ் மற்றொரு தொடக்க ஆட்டக்காரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 17 வீரர்கள் அடங்கிய ஆஸி. அணியில் சுமார் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட் அணிக்குள் கம்பேக் கொடுத்துள்ளார் மார்ஷ். இதற்கு அவரது அண்மைய ஃபார்ம் காரணமாக சொல்லப்பட்டுள்ளது. இந்த அணி ஐசிசி பரிந்துரையின் படி 15 வீரர்கள் கொண்ட அணியாக மே மாத இறுதியில் உறுதி செய்யப்படும் எனவும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
அதே போல இங்கிலாந்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்காக மே மாத இறுதியில் ஆஸி. வீரர்கள் முகாமிட உள்ளதாகவும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. இங்கிலாந்து சூழலுக்கு ஏற்ப அணி அறிவிக்கப்பட்டு உள்ளதாகவும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி என்பது இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அணியின் நிலையான செயல்திறன் வெளிப்பாட்டின் உச்சம் எனவும் ஆஸ்திரேலிய தேசிய தேர்வுக் குழு தலைவர் ஜார்ஜ் பெய்லி தெரிவித்துள்ளார்.
Australia have named their squad for the WTC Final and first two Ashes Tests!#WTCFinal #Ashes
— cricket.com.au (@cricketcomau) April 19, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT