Published : 19 Apr 2023 07:19 AM
Last Updated : 19 Apr 2023 07:19 AM
சென்னை: மாமல்லபுரத்தில் ஆகஸ்ட் 14 முதல் 20-ம் தேதி வரை சர்வதேச அலைச்சறுக்கு போட்டி நடைபெறும் என தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
உலக அலைச்சறுக்கு லீக்கின் ஒரு கட்டமாக சர்வதேச அலைச்சறுக்கு ஓபன் மாமல்லபுரத்தில் வரும் ஆகஸ்ட் 14 முதல் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, தமிழ்நாடு அலைச்சறுக்கு சங்கம், இந்திய அலைச்சறுக்கு கூட்டமைப்பு ஆகியவை இணைந்து இந்த போட்டியை நடத்துகின்றன. சர்வதேச அலைச்சறுக்கு போட்டி இந்தியாவில் நடத்தப்பட உள்ளது இதுவே முதன்முறையாகும்.
இந்த போட்டி தொடர்பான பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறும்போது, “இது விளையாட்டுகளை ஊக்குவிப்பதில் மாநில அரசாங்கத்தின் மற்றொரு முயற்சியாகும். அலைச்சறுக்கு ஒலிம்பிக் விளையாட்டாக இருப்பதால், அது முன்னுரிமையாக மாறியுள்ளது. மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள சர்வதேச போட்டியானது இந்திய அலைச்சறுக்கு வீரர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும், நாட்டுக்கு பெருமை சேர்க்கவும் சிறந்த தளமாக இருக்கும்” என்றார்.
100 வீரர்கள்..
உலக அலைச்சறுக்கு லீக்கின் தகுதி சுற்றுக்கான 3 ஆயிரம் புள்ளிகளை கொண்ட சர்வதேச அலைச்சறுக்கு ஓபன்-தமிழ்நாடு போட்டியில் 12 முதல் 14 நாடுகளைச் சேர்ந்த 80 முதல் 100 வீரர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக இந்தியா மற்றும் தமிழ்நாடு அலைச்சறுக்கு சங்கத்தின் தலைவர் அருண் வாசு தெரிவித்தார்.
நிகழ்ச்சியின் போது போட்டியை நடத்துவதற்காக தமிழக அரசு சார்பில் ரூ.2.67 கோடிக்கான காசோலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அருண் வாசுவிடம் வழங்கினார்.
10 பேருக்கு வைல்டு கார்டு
இந்த போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை சுமார் ரூ.36.90 லட்சம் ஆகும். மேலும் 3 ஆயிரம் புள்ளிகளும் வழங்கப்படும். ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னணி அலைச்சறுக்கு வீரர்கள் இந்த போட்டியில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டியில் இந்திய வீரர்கள் 10 பேருக்கு வைல்டு கார்டு வழங்கப்பட உள்ளது.
இந்த போட்டியையொட்டி தமிழக அலைச்சறுக்கு சங்கம், இந்திய அலைச்சறுக்கு சங்கத்துடன் இணைந்து தேசிய அளவிலான 3 போட்டிகளை நடத்த உள்ளது. தி ஈஸ்ட் கோஸ்ட் சாலஞ்ச் என்ற பெயரில் நடத்தப்படும் இந்த போட்டிகளில் முதல் 10 இடங்களை பிடிப்பவர்களுக்கு சர்வதேச அலைச்சறுக்கு ஓபன்-தமிழ்நாடு தொடரில் பங்கேற்பதற்கான வைல்டு கார்டு வழங்கப்படும் எனவும் போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தி ஈஸ்ட் கோஸ்ட் சாலஞ்ச் போட்டியானது ஜூலை 29, 30-ம் தேதிகளில் புதுச்சேரியிலும், ஆகஸ்ட் 5, 6-ம் தேதிகளில் மாமல்லபுரத்திலும், ஆகஸ்ட் 12, 13-ம் தேதிகளில் கோவளத்திலும் நடைபெறுகிறது.
#YouthWelfare #SportsDevelopment @SportsTN_@Subramanian_ma @regupathymla @Dr_Ezhilan pic.twitter.com/koArgJAT5n
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT