Published : 17 Apr 2023 05:09 AM
Last Updated : 17 Apr 2023 05:09 AM

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை - தோனி விளையாடுவது உறுதி

பெங்களூரு: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில்இன்று இரவு பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), டூ பிளெஸிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி)அணிகள் பலப்பரீட்சை செய்யவுள்ளன. இந்தப் போட்டியில் சிஎஸ்கே கேப்டன் தோனி விளையாடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடி 2-ல் வெற்றி,2-ல் தோல்விகளைப் பெற்றுள்ளது. தற்போது 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. அதைப் போலவே பெங்களூரு அணியும் 4 போட்டிகளில் விளையாடி 2-ல் வெற்றி, 2-ல் தோல்வி என 4 புள்ளிகளைப் பெற்று பட்டியலில் 7-வது இடத்தைப் பெற்றுள்ளது.

சென்னை அணி பேட்டிங்கில் வலுவாகவே உள்ளது. ருதுராஜ் கெய்க்வாட், டெவன் கான்வே, அஜிங்க்ய ரஹானே, மொயின்அலி, அம்பதி ராயுடு, கேப்டன்தோனி, ரவீந்திர ஜடேஜாஎன அபார பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது.

மீண்டும் ஒரு முறை பேட்டிங்கில் கெய்க்வாட், கான்வே, ரஹானே, மொயின் அலி, ராயுடு, ஜடேஜாஆகியோர் ஜொலிக்கும் பட்சத்தில்சிஎஸ்கே அணிக்கு வெற்றி எளிதாகும்.

பவுலிங்கில் ஆகாஷ் சிங், துஷார் தேஷ்பாண்டே, தீக்சனா, ஜடேஜா, மொயின் அலி ஆகியோரும் தங்களது சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளனர்.

அதே நேரத்தில், கடந்த ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை வீழ்த்திய உற்சாகத்தில்பெங்களூரு அணி களமிறங்குகிறது. விராட் கோலி, கேப்டன் டூ பிளெஸிஸ் ஆகியோர் சிறப்பான ஃபார்மில் உள்ளனர். 3-வது இடத்தில் விளையாடி வரும் கிளென் மேக்ஸ்வெல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

பவுலிங்கில் மொகமது சிராஜ், வேயன் பார்னெல், வனிந்து ஹசரங்கா, ஹர்ஷால்படேல் ஆகியோர்மிரட்டி வருகின்றனர்.

தோனி விளையாடுவார்: முழங்கால் காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி, இந்த ஆட்டத்தில் நிச்சயம் விளையாடுவார் எனத் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து சிஎஸ்கே அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறும்போது, “பெங்களூரு அணிக்கெதிரான இந்த ஆட்டத்தை அவர் தவறவிடுவார் என்று நான் நினைக்கவில்லை. இருப்பினும் நாளை மாலை வரை நாம் காத்திருக்க வேண்டும்" என்றார்.

ஹைதரபாத் - சிஎஸ்கே போட்டி: 18-ம் தேதி முதல் டிக்கெட் விற்பனை

ஐபிஎல் போட்டியில் வரும் 21-ம் தேதி சிஎஸ்கே, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் மோதவுள்ளன. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை வரும் 18-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. போட்டிக்கான டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலமாகவும், மற்றும் சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள கவுன்ட்டர்களில் நேரடியாகவும் பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x