Published : 15 Apr 2023 08:12 PM
Last Updated : 15 Apr 2023 08:12 PM

பிரையன் லாராவின் மாஸ்டர் ஸ்ட்ரோக் - ஹாரி புரூக்கை ஓப்பனிங் இறக்கிய அபார முடிவு!

நேற்று ஈடன் கார்டன்சில் நடைபெற்ற ஐபிஎல் 2023 டி20 தொடரின் 19-வது போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் கடைசியாக குகையிலிருந்து சிங்கத்தை வெளியே விட்டது. அந்தச் சிங்கம் வேறு யாருமல்ல இங்கிலாந்தின் நடப்பு பேட்டிங் நாயகன் எதிர்கால அனைத்து வடிவ கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் ஹாரி புரூக்தான். ஹாரி புரூக்கை ஓப்பனிங்கில் இறக்கும் முடிவை எடுத்தது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் தலைமை பயிற்சியாளர் பிரையன் லாரா. இது மாஸ்டர் ஸ்ட்ரோக்காக அமைந்தது.

முதல் 3 போட்டிகளில் 13, 3, 13 தான் இவரது ஸ்கோர். இங்கிலாந்திற்கு ஆடும்போது புலி வெளியே எலியா என்ற கேள்வி ரசிகர்களிடம் தோன்றத் தொடங்கிய போது, ஹாரி புரூக் டாப் ஆர்டரில் இறக்கப்பட்டார். இதனையடுத்தே அவரது உண்மையான ஆற்றல் முழுதுமாகப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது. இந்த சீசனின் முதல் சதத்தை விளாசினார் புரூக். இது ஒரு புரூட்டல் இன்னிங்ஸ். 55 பந்துகளில் 12 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் இவர் தன் இரண்டாவது டி20 சதத்தை எடுத்தார்.

முதல் 3 போட்டிகளில் பெரிதாக ஆட முடியாமல் போன இவரை நேற்று கொல்கத்தாவின் 41 டிகிரி செல்சியஸ் வரவேற்றது, கடும் ஈரப்பதம் என்று இங்கிலாந்திலிருந்து வருபவருக்கு எதிரான அனைத்துச் சூழ்நிலையும் இருந்தது. போட்டி நடந்தது கொல்கத்தாவில் என்பதால் ரசிகர்கள் ஆதரவு முழுதும் கொல்கத்தாவுக்குத்தான். மேலும் 13.25 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டதால் உயரிய தொகை வீரர் என்ற நெருக்கடியும் அவரை அழுத்தியது. சோஷியல் மீடியா இவரை ‘ஒன்றுமில்லாதவர்’ என்று கேலி பேசியது, ஹைப் என்றது. சர்வதேச கிரிக்கெட்டில் இவர் வந்தவுடன் செய்த சாதனைகளையே அறியாத இன்றைய ஐபிஎல் திடீர் சோஷியல் மீடியா விசைப்பலகையை சொடுக்குபவர்களுக்கு கிரிக்கெட் தெரியுமோ தெரியாதோ அடுத்தவரை நகைச்சுவை என்ற பெயரில் கொச்சைப்படுத்துவது மட்டும்தான் தெரியும்.

ஆனால் இறங்கியவுடனேயே, முதல் 3 ஓவர்களில் 4 பவுண்டரிகள் 2 சிக்சர்களை விளாசினார். உமேஷ் யாதவ்வும் லாக்கி பெர்கூசனும் ஓடி வந்து மோது மோது என்று மோதியது, பந்துகள் பவுண்டரியில் போய் மோதியதில்தான் முடிந்தது. 31 ரன்களை 10 பந்துகளில் விளாசினார். இதற்கு முன்பாக 93 டி20 போட்டிகளில் புரூக் 3 முறைதான் ஓப்பனிங்கில் இறங்கியுள்ளார். 4ம் நிலை அல்லது 6ம் நிலையில்தான் இறங்குவார். ஸ்ட்ரைக் ரேட் 147 வைத்துள்ளார். இவருக்கு மிடில் ஆர்டரில் ஸ்பின் ஒரு பிரச்சனையாக அமைந்தது. டெஸ்ட் போட்டிகள் என்றால் பிரித்து மேய்ந்து விடுவார். டி20-யில் கொஞ்சம் கடினம்தான். புரூக்கின் 55 பந்து சதத்தில் ஆச்சரியம் என்னவெனில் ஒரு கட்டத்தில் 6வது மற்றும் 14வது ஓவர்களுக்கு இடையில் புரூக் பவுண்டரி அடிக்கவில்லை. எதிர்முனையில் மார்க்ரம் வெளுத்து வாங்கி விட்டார். இவர் 26 பந்துகளில் 5 சிக்சர்களுடன் 50 ரன்களை விளாசித்தள்ளினார்.

சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி 8 ஓவர்களில் 69 ரன்களைக் கொடுத்தனர். இதில் நரைன் டைட், வருண் கொஞ்சம் தாராளம். இவர்கள் ஓவர்கள் முடிந்தவுடன் புரூக் மீண்டும் புரூட் ஆனார். குறிப்பாக நேர் நேரே வந்து மோதும் லாக்கி பெர்கூசனை 15வது ஓவரில் 4 பவுண்டரிகள் ஒரு சிக்சரை விளாசினார். சூயாஷ் சர்மாவும், ஷர்துல் தாக்கூரும் புரூக் தாக்குதலுக்குத் தப்பவில்லை. ஸ்பின்னர்களை அவர் சந்தித்த 29 பந்துகளில் 34 ரன்களை மட்டுமே அவர் எடுத்தார், ஆனால் வேகப்பந்து வீச்சை புரட்டி எடுத்து 26 பந்துகளில் 66 ரன்களை விளாசினார்.

பிரையன் லாராதான் புரூக்கை ஓப்பனிங்கில் இறக்க முடிவெடுத்துள்ளார். இது மாஸ்டர் பேட்டரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்காக அமைந்தது. வரும் போட்டிகளில் பட்லர் எப்படி ஒரு அச்சுறுத்தலாக இருக்கின்றாரோ அதே போல் புரூக் ஒரு அச்சுறுத்தலாகவே இருப்பார். இது சன் ரைசர்ஸ் அணிக்கு ஒரு புதிய புத்துணர்ச்சியை அளிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x