Published : 15 Apr 2023 07:07 AM
Last Updated : 15 Apr 2023 07:07 AM

IPL 2023 | மோஹித் சர்மாவுக்கு ஹர்திக் பாராட்டு!

மோஹித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா | படம்: ஐபிஎல்

மொஹாலி: குஜராத் டைட்டன்ஸ் அணி பந்து வீச்சாளர் மோஹித் சர்மாவுக்கு அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பாராட்டு தெரிவித்துள்ளார்.

மொஹாலி மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியை வென்றது.

முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது. பின்னர் 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணி 19.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.

குஜராத் அணியின் ரித்திமான் சாஹா 30, ஷுப்மன் கில் 67, சாய் சுதர்ஷன் 19, ஹர்திக் பாண்டியா 8 ரன்கள் எடுத்தனர். டேவிட் மில்லர் 18 பந்துகளில் 17 ரன்களும், ராகுல் தெவாட்டியா 2 பந்துகளில் 5 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த ஓவரின் 5-வது பந்தை பவுண்டரிக்கு அனுப்பி வெற்றி தேடித் தந்தார் ராகுல் தெவாட்டியா. மேலும் பவுலிங்கின்போது குஜராத் அணி பந்துவீச்சாளர் மோஹித் சர்மா 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 4 ஓவர்கள் பந்துவீசிய அவர் 18 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து பஞ்சாப் அணியின் ரன்குவிப்பை கட்டுப்படுத்தினார். இதன்மூலம் ஆட்டநாயகன் விருதையும் அவர் தட்டிச் சென்றார்.

ஆட்டம் முடிந்ததும் செய்தியாளர்களிடம் குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியதாவது. மிகவும் நேர்மையாகச் சொல்வதென்றால், இந்த ஆட்டம் இவ்வளவு நெருக்கமாக வந்து முடிந்ததை நான் விரும்பவில்லை. இந்த ஆட்டத்தில் இருந்து நாங்கள் கற்றுக்கொள்வதற்கு நிறைய உள்ளது. அதுதான் இந்த கிரிக்கெட் விளையாட்டின் அழகு.

பஞ்சாப் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினர். ஆனால் அதிர்ஷ்டவசமாக எங்களது பேட்ஸ்மேன்கள் நல்ல ஃபார்மில் உள்ளனர். மிடில் ஓவர்களில் பேட்ஸ்மேன்கள் ரிஸ்க் எடுத்து ஷாட்களை ஆட வேண்டும்.

எங்களது பவுலிங்கின்போது மோஹித் சர்மாவும், அல்சாரியும் சிறப்பாக பந்துவீசினர். குறிப்பாக மோஹித், அருமையாக பந்துவீசி ரன்குவிப்பை கட்டுப்படுத்தினார்.

அவர் அதிக அளவில் பயிற்சிகள் செய்தார். சொல்லப் போனால் அவர் இன்று வலைப்பயிற்சிக்குத்தான் வந்திருந்தார். அதேநேரத்தில் அவருக்கு இன்றைய போட்டியில் விளையாடும் வாய்ப்புக் கிடைத்தது. இன்று அவருடைய நாளாக அமைந்தது.

நான் போட்டிகளை முன்னதாகவே முடிக்க விரும்புகிறேன். ஆட்டத்தை கடைசி ஓவர் வரை எடுத்துச் செல்வதில் எனக்குப் பெரிய ஆர்வம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

பந்து வீச அதிக நேரம்: பாண்டியாவுக்கு அபராதம்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணிக்கெதிரான ஆட்டத்தில் பந்துவீச அதிகம் நேரம் எடுத்துக் கொண்டதால் குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் அணிக்கு எதிராக பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ரூ.12 லட்சத்தை அபராதமாக செலுத்தவேண்டும் என்று பாண்டியாவுக்கு ஐபிஎல் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

ஐபிஎல் விதிகளின் படி குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்து வீசி முடிக்க வேண்டும். அவ்வாறு பந்துவீசி முடிக்காததால், ஹர்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதம் ஹர்திக் பாண்டியாவின் ஊதியத்தில் இருந்து பிடிக்கப்படும் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதைப்போல, கடந்த 3 நாட்களுக்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் பந்துவீச அதிக நேரத்தை எடுத்துக்கொண்டது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இதையடுத்து ஐபிஎல் நடத்தை விதிகளின் கீழ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x