IPL 2023: KKR vs SRH | ராணா, ரிங்கு சிங் போராட்டம் வீண் - 23 ரன்களில் சன்ரைசர்ஸ் வெற்றி

IPL 2023: KKR vs SRH | ராணா, ரிங்கு சிங் போராட்டம் வீண் - 23 ரன்களில் சன்ரைசர்ஸ் வெற்றி
Updated on
2 min read

கொல்கத்தா: 23 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி, சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி வெற்றிபெற்றுள்ளது.

229 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு முதல் ஓவரே அதிர்ச்சி கொடுத்தார் புவனேஷ்வர் குமார். முதல் ஓவரில் ரஹ்மானுல்லா குர்பாஸின் விக்கெட்டை வீழ்த்தினார். மார்கோ ஜேன்சன் தன் பங்கிற்கு வெங்கடேஷ் ஐயர், சுனில் நரைனை அடுத்தடுத்த இரண்டு பந்துகளில் அவுட் ஆக்க கொல்கத்தா ரசிகர்கள் உறைந்து போயினர்.

ஆனால், மற்றொரு ஓபனிங் வீரர் நாராயண் ஜெகதீசன் உடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்தார் கேப்டன் நிதிஷ் ராணா. ஜெகதீசன் பொறுமை காட்ட, ராணா பொளத்துக் கட்டினார். இத்தருணத்தில் கொல்கத்தா அணி வீரர் மார்கண்டே 36 ரன்கள் எடுத்திருந்த ஜெகதீசனை விக்கெட்டாக, அடுத்தவந்த ரஸ்ஸல் 3 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

ஒருபுறம் விக்கெட் சரிவு இருந்தாலும் ரிங்கு சிங்கு உடன் இணைந்து தனது அதிரடியை தொடர்ந்து கொண்டே இருந்தார் ராணா. இருவரும் 69 ரன்கள் சேர்ந்த நிலையில், நடராஜன் பந்தில் கேட்ச் ஆனார் ராணா. அவர் 75 ரன்கள் எடுத்தார்.

ராணா சென்ற பிறகு அதிரடி காட்டிய ரிங்கு சிங் 27 பந்துகளில் அரைசதம் கடந்தார். எனினும், கடைசி ஓவரில் 32 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட, கொல்கத்தா அணியால் 8 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் மட்டுமே எடுத்து 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது கொல்கத்தா. ரிங்கு சிங் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 58 ரன்கள் சேர்த்தார்.

இதன்மூலம் நடப்பு தொடரில் 2வது வெற்றிபெற்ற சன்ரைசர்ஸ் தரப்பில் மயங்க் மார்கண்டே மற்றும் மார்கோ ஜேன்சன் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர். இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் படுமோசமாக இருந்தது. குறிப்பாக கேட்ச்களை கோட்டைவிட்டனர். ஒரே இன்னிங்சில் அந்த அணி மிஸ் செய்த கேட்ச் எண்ணிக்கை மட்டும் 5.

சன்ரைசர்ஸ் இன்னிங்ஸ்: 16வது ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்ய ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் 9 ரன்னிலும், ஒன் டவுன் வீரர் ராகுல் திரிபாதி 9 ரன்னிலும் நடையைக் கட்டினர்.

எனினும், மற்றொரு ஓபனிங் வீரர் ஹாரி ப்ரூக் சிறப்பாக விளையாடினார். பவர் பிளே ஓவர்களில் கொல்கத்தா பவுலர்களை வெளுத்துவாங்கிய ப்ரூக் 55 பந்துகளில் ஐபிஎல் தொடரில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். நாட் அவுட் பேட்ஸ்மேனாக அவர் எடுத்த சதத்தில் 12 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் இதில் அடக்கம். அவரின் சதம் உதவியுடன் சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 228 ரன்கள் எடுத்தது.

அவருக்கு பக்கபலமாக கேப்டன் மார்க்ரம், அபிஷேக் சர்மா ஆகியோர் அதிரடியில் மிரட்டினார். மார்க்ரம் 26 பந்தில் 5 சிக்சர், 2 பவுண்டரி உள்பட அரை சதமடித்து அவுட்டானார். 3-வது விக்கெட்டுக்கு மார்க்ரம், ப்ரூக் ஜோடி 72 ரன்கள் சேர்த்தது. இதேபோல் அபிஷேக் சர்மா 17 பந்தில் 32 ரன்கள் எடுத்தார்.

இறுதியில், ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 228 ரன்களை குவித்தது. கொல்கத்தா தரப்பில் ரஸ்ஸல் 3 விக்கெட் வீழ்த்தினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in