Published : 14 Apr 2023 01:09 PM
Last Updated : 14 Apr 2023 01:09 PM

கடந்த சீசனில் நெட் பவுலர்; நடப்பு சீசனில் ஆட்ட நாயகன் - 34 வயது பவுலர் மோகித் சர்மா அசத்தல்!

மோகித் சர்மா

கடந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் நெட் பவுலராக இருந்தவர் 34 வயதான மோகித் சர்மா. நடப்பு சீசனில் அதே அணிக்காக தான் விளையாடிய முதல் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை வென்று மாயம் செய்துள்ளார். அவரது கம்பேக் கதையை பார்ப்போம்.

வலது கை மித வேகப்பந்து வீச்சாளரான மோகித் சர்மா, ஹரியாணா மாநிலத்தை சேர்ந்தவர். தன் மாநில அணிக்காக டொமஸ்டிக் கிரிக்கெட் சர்க்யூட்டில் அங்கம் வகித்து வருகிறார். 2012-13 ரஞ்சிக் கோப்பை சீசனில் 7 போட்டிகளில் 37 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். அதன் பலனாக ஐபிஎல் கிரிக்கெட் விளையாடும் வாய்ப்பை பெற்றார். அவரை தொடர்பு கொண்டது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

தனது முதல் ஐபிஎல் சீசனில் (2013) சென்னை அணிக்காக விளையாடிய அவர் 15 போட்டிகளில் 20 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அது அப்படியே இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றுக் கொடுத்தது. 2013 முதல் 2015 வரையில் 26 ஒருநாள் மற்றும் 8 டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடினார். மொத்தம் 37 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.

மறுபக்கம் சென்னை அணியுடனான தனது ஐபிஎல் பயணத்தை 2015 சீசன் வரை தொடர்ந்தார். சென்னை அணிக்காக 48 போட்டிகளில் 58 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 2014 சீசனில் 23 விக்கெட்டுகளை கைப்பற்றி பர்ப்பிள் கேப்பையும் வென்றிருந்தார். தொடர்ந்து 2016 முதல் 2018 வரையில் பஞ்சாப் கிங்ஸ் (அப்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப்) அணிக்காக விளையாடினார். அந்த அணிக்காக 37 போட்டிகள் விளையாடி 33 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். 2019 சீசனில் மீண்டும் சிஎஸ்கே-வில் இணைந்தார். 2020 சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடினார். 2021 சீசனில் அவர் எந்த அணியிலும் இடம் பெறவில்லை.

அதன் பின்னர் ஐபிஎல் அரங்கில் புதிய அணியாக இணைந்த குஜராத் டைட்டன்ஸ் அணியின் நெட் பவுலராக கடந்த சீசனில் (2022) அவர் இணைந்தார். அதற்கு முக்கியக் காரணம் அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் நெஹ்ரா என தெரிகிறது. மோகித் சர்மாவை அணியில் நெட் பவுலராக சேர்த்தது அவரது நகர்வாக இருக்க வாய்ப்புகள் அதிகம். கடந்த சீசன் முழுவதும் நெட் பவுலராக இயங்கினார் மோகித்.

2023 சீசன்: நடப்பு சீசனில் அவரை ஏலத்தில் எடுத்தது குஜராத் அணி. இந்த சீசனின் 18-வது லீக் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக ஆடும் லெவனில் மோகித் சர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. 10 ஓவர்கள் முடிந்த நிலையில் பந்து வீச வந்தார் மோகித். 4 ஓவர்கள் வீசிய அவர் 18 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இந்தப் போட்டியில் குஜராத் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன் மூலம் ஆட்ட நாயகன் விருதையும் அவர் வென்றார்.

“நாம் கடுமையாக பயிற்சி செய்ய வேண்டும். அது நமது 100 சதவீதமாக இருக்க வேண்டும். அடிப்படை விஷயங்களில் கவனம் வைத்தால் போதும். கள சூழலுக்கு பந்து வீச வேண்டும். 10 ஓவர்களுக்கு பிறகு பந்து வீசுவதுதான் எனக்கு கொடுக்கப்பட்ட ரோல். அணியில் ஒவ்வொருவர் பங்கையும் பயிற்சியாளர் தெளிவாக திட்டமிடுகிறார். இந்த பெருமை அவரையே சாரும்” என மோகித் சர்மா ஆட்டத்திற்கு பிறகு தெரிவித்திருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x