Published : 13 Apr 2023 11:36 PM
Last Updated : 13 Apr 2023 11:36 PM
மொஹாலி: 16வது ஐபிஎல் ஆட்டத்தின் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்ட, குஜராத் டைட்டன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
154 ரன்கள் இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சஹா - கில் இணை வழக்கம் போல அதிரடி துவக்கம் கொடுத்தது. பவர் பிளே ஓவர்களில் புகுந்து விளையாடும் சஹா இம்முறையும் அதே பாணியை பின்பற்றினார். அடுத்தடுத்து ஐந்து பவுண்டரிகள் விளாசி, பவர் பிளே முடியும் முன்பே அவுட் ஆனார். 30 ரன்கள் எடுத்திருந்தார் சஹா.
சாய் சுதர்சன் ஒன் டவுனாக வந்தார். எதிர்பார்ப்பு அவர் மீது அதிகம் இருக்க, இம்முறை பூர்த்தி செய்யவில்லை. 20 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 19 ரன்கள் மட்டுமே எடுத்து நடையைக்கட்டினார். கேப்டன் ஹர்திக் பாண்டியா 8 ரன்களுக்கு பெவிலியன் திரும்பி அதிர்ச்சி அளித்தாலும், ஷுப்மன் கில் குஜராத் அணிக்கு நம்பிக்கை அளித்தார்.
ஓப்பனிங் இறங்கிய அவர் கடைசி ஓவர் வரை நிலைத்து நின்றார். 67 ரன்கள் எடுத்திருந்த கில் கடைசி ஓவரின் இரண்டாவது பந்தில் போல்டாக 4 பந்துகளில் 6 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது.
சாம் கர்ரன் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்க, அதை எளிதாக சமாளித்து ஒரு பந்து மீதமிருக்கையில் ராகுல் தெவட்டியா பவுண்டரி விளாசி அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தார். அவருக்கு பக்கபலமாக இருந்த மில்லர் 17 ரன்கள் சேர்த்து உதவினார்.
இறுதியில் 4 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்த குஜராத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இத்தொடரில் குஜராத் அணி பெறும் 3வது வெற்றி இதுவாகும்.
பஞ்சாப் தரப்பில் அர்ஷதீப் சிங், ரபாடா, சாம் கர்ரன், ஹர்ப்ரீத் ப்ரார் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
பஞ்சாப் கிங்ஸ் இன்னிங்ஸ்: பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் பிந்த்ரா மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. பிரப்சிம்ரன் சிங் இரண்டாவது பந்தே அவுட்டாகி அணிக்கு மோசமான தொடக்கத்தை கொடுத்தார். தொடக்கமே ஏமாற்றமாக அமைந்த பஞ்சாப் ரசிகர்களுக்கு கேப்டன் ஷிகர் தவான் 8 ரன்களுடன் பெவிலியன் பக்கம் திரும்பி ரசிகர்களின் சோகத்தை மேலும் அதிகப்படுத்தினார்.
இவர்களுக்குப்பின் வந்த மேத்தேயூ ஷார்ட் பொறுப்பாக ஆடி 36 ரன்களை சேர்த்துவிட்டு தன்னால் முடிந்ததை செய்துவிட்டு கிளம்பினார். அடுத்து வந்த ஜிதேஷ் சர்மா, பனுகா ராஜபக்சாவுடன் கூட்டணி அமைத்து ஸ்கோரை முன்னேற்றினாலும் அவசரப்பட்டு கேட்ச் கொடுத்து அவுட்டாகி 25 ரன்களில் சுருண்டார். 15 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் 109 ரன்களை சேர்த்திருந்தது.
நிலைத்து ஆடுவார் என எதிர்பார்த்த பனுகா ராஜபக்சா 20 ரன்களிலும், சாம் கர்ரன் 22 ரன்களிலும் விக்கெட்டாக அணியின் ஸ்கோர் தேங்கியது. இறுதியில் ஷாருக்கான் 2 சிக்சர்கள் விளாசி அதே வேகத்தில் நடையைக்கட்டினார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களை சேர்த்தது. ஹர்ப்ரீத் ப்ரார் 8 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
குஜராத் அணி தரப்பில் மோஹித் சர்மா 2 விக்கெட்டுகளையும், ரஷீத் கான், அல்சாரி ஜோசப், முஹம்மத் சமி, ஜோஷூவா லிட்டில் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT