Published : 12 Apr 2023 01:33 PM
Last Updated : 12 Apr 2023 01:33 PM

IPL 2023 | ஹர்ஷல் படேலின் மன்கட் முயற்சி: அஸ்வின் மகிழ்ச்சி!

கோப்புப்படம்

சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனின் 15-வது லீக் போட்டியில் பெங்களூரு மற்றும் லக்னோ அணிகள் விளையாடின. இந்த போட்டியின் கடைசி பந்தில் நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் இருந்த எதிரணி வீரரான ரவி பிஷ்னோயை ‘மன்கட்’ முறையில் அவுட் செய்ய முயற்சி செய்திருப்பார் ஆர்சிபி பவுலர் ஹர்ஷல் படேல். அவரது அந்த தைரியம் தனக்கு மகிழ்ச்சி கொடுப்பதாக அஸ்வின் தெரிவித்துள்ளார்.

லக்னோ அணியின் வெற்றிக்கு ஒரே ஒரு ரன் மட்டுமே தேவைப்பட்ட ஆட்டத்தின் இக்கட்டான கட்டத்தில். அதுவும் கடைசிப் பந்தில் இதை ஹர்ஷல் செய்திருந்தார். இது ஒவ்வொரு பவுலரும் அவசியம் செய்யவேண்டுமென அஸ்வின் ஊக்குவிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.

“வெற்றிக்கு ஒரு ரன் மட்டுமே தேவை. ஒரு பந்து தான் எஞ்சி உள்ளது. நான்-ஸ்ட்ரைக்கர் எப்படியும் ரன் எடுக்கவே முயற்சிப்பார். அந்த சூழலில் எப்போதுமே நான் பேட்ஸ்மேனை ரன் அவுட் செய்யவே முயற்சிப்பேன். அதன் விளைவுகள் என்ன என்பது குறித்தெல்லாம் யோசிக்க மாட்டேன். நான் அந்தப் போட்டியை பார்த்த போது. அவர் பேட்ஸ்மேனை ரன் அவுட் செய்ய வேண்டும் என என் மனைவியிடம் சொன்னேன். பவுலரும் அதை செய்தார். அவரது அந்த தைரியத்தை கண்டு நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். இது போல மேலும் பல பவுலர்கள் செய்ய வேண்டுமென விரும்புகிறேன். இது விதிகளுக்கு உட்பட்ட ஒன்றுதான்” என அஸ்வின் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019 ஐபிஎல் சீசனில் பஞ்சாப் அணிக்காக அஸ்வின் விளையாடிய போது இதே முறையில் ராஜஸ்தான் வீரர் பட்லரை அவுட் செய்திருந்தார். அது கிரிக்கெட் உலகில் விவாதமானது.

மன்கட் அவுட்: இந்த முறை அவுட் அதிகாரப்பூர்வ ரன் அவுட் ஆக கருதப்படும் என எம்சிசி கடந்த ஆண்டு உறுதிப்படுத்தியது. நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் இருக்கும் பேட்ஸ்மேன் பவுலர்கள் பந்து வீசும்போது கிரீஸை விட்டு வெளியே செல்லக்கூடாது. அப்படிச் சென்றால் 'மன்கட் அவுட்' செய்யலாம். இந்த விதி ஏற்கெனவே கிரிக்கெட்டில் இருந்தாலும், இது சரியான நடைமுறையாக இருக்காது என்று கிரிக்கெட் பிரபலங்கள் பலர் இந்த முறையில் அவுட் செய்யாமல் இருந்தனர். ஆனாலும் இதனை அதிகாரப்பூர்வ ரன் அவுட் ஆக அங்கீகரித்துள்ளது எம்சிசி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
     
    x
    News Hub
    Icon