Published : 11 Apr 2023 06:35 AM
Last Updated : 11 Apr 2023 06:35 AM
பெர்லின்: உலக செஸ் ஆர்மகெடோன் ஆசியா ஓசியானியா பிரிவில் இந்திய கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ், முன்னாள் உலக விரைவு செஸ் சாம்பியனான உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த நோடிர்பெக் அப்துசட்டோரோவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடைபெற்ற இந்த தொடரின் இறுதி போட்டியின் முதல் ஆட்டத்தில் நோடிர்பெக் அப்துசட்டோரோவ் 1.5-0.5 என்ற புள்ளி கணக்கில் குகேஷை வீழ்த்தினார். இரட்டை எலிமினேஷன் போட்டி என்பதால் குகேஷுக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைத்தது. இதில் குகேஷ் 1.5-0.5 என்ற புள்ளி கணக்கில் நோடிர்பெக் அப்துசட்டோரோவை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார்.
இந்தத் தொடரில் 16 வயதான குகேஷ், சீனாவைச் சேர்ந்த யாங் யு, ரஷ்யாவின் விளாடிமிர் கிராம்னிக், டேனியல் துபோவ், இந்தியாவைச் சேர்ந்த விதித் குஜராத்தி, கார்த்தி கேயன்முரளி, ஈரானின் பரம் மக்சூட்லூ, நோடிர்பெக் அப்துசட்டோரோவ் ஆகியோரை தோற்கடித்து இறுதிசுற்றில் கால் பதித்திருந்தார். இறுதிப் போட்டியில் வெற்றிபெற்ற குகேஷுக்கு ரூ.16.05 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. ஆசியா ஓசியானியா பிரிவில் இருந்து வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஆர்மகெடோன் உலக அளவிலான இறுதிப் போட்டிக்கு குகேஷுடன், நோடிர்பெக் அப்துசட்டோரோவும் தகுதி பெற்றுள்ளார்.
வெற்றி குறித்து குகேஷ் தனது ட்விட்டர் பதிவில், “விறுவிறுப்பான நிகழ்வான ஆர்மகெடோன் சாம்பியன்ஷிப் தொடர் 2023 ஆசியா-ஓசியானியா பிரிவு இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. விரைவாக நேரத்தைக் கட்டுப்படுத்தும் உயரடுக்கு நிகழ்வில் வெற்றி பெற்றதில் பெரும் நிம்மதி அளிக்கிறது. இந்த தொடரில் விளையாடிய விதத்தில் ஏராளமான புதிய அனுபவங்களை பெற்றேன்” என தெரிவித்துள்ளார்.
உலக செஸ் ஆர்மகெடோன் ஆசியா ஓசியானியா பிரிவில் வெற்றி பெற்ற குகேஷுக்கு முன்னாள் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டரில், “வாழ்த்துகள் குகேஷ். குறிப்பாக வித்தியாசமான நேரக் கட்டுப்பாட்டில் விளையாடி வெற்றி பெற்றது சிறந்த சாதனை. எங்கள் வெஸ்ட்பிரிட்ஜ் ஆனந்த் செஸ் அகாடமியின் வழிகாட்டி எங்களை மீண்டும் பெருமைப்படுத்துவதைக் கண்டு பெருமிதம் கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT