Published : 10 Apr 2023 11:40 PM
Last Updated : 10 Apr 2023 11:40 PM

IPL 2023: RCB vs LSG | த்ரில்.. த்ரில்.. கடைசி பந்து வரை த்ரில் - ஆர்சிபியை வீழ்த்தியது லக்னோ

பெங்களூரு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி அதிரடியாக விளையாடி வெற்றிபெற்றுள்ளது. கடைசி பந்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் அந்த அணி வெற்றிபெற்றது.

213 ரன்கள் என்ற இமலாய இலக்கை துரத்திய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு கடந்த போட்டியை போல் இம்முறையும் நல்ல துவக்கம் அமையவில்லை. இன்னிங்ஸின் 3வது பந்திலேயே கைல் மேயர்ஸ் விக்கெட்டை வீழ்த்தி லக்னோ தரப்புக்கு அதிர்ச்சி கொடுத்தார் சிராஜ். ஓப்பனிங் மட்டுமல்ல, டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் யாரும் அந்த அணிக்கு கைகொடுக்கவில்லை.

முதல் இரண்டு போட்டியில் சொதப்பிய, தீபக் ஹூடா இப்போட்டியிலும் பெரிதாக சோபிக்கவில்லை. 9 ரன்களில் இரண்டாவது விக்கெட்டாகவும், க்ர்னால் பாண்டியாவை மூன்றாவது விக்கெட்டாகவும் வழியனுப்பி வைத்தார் வெய்ன் பார்னெல். ஆனால் இவர்களுக்கு அடுத்ததாக இறங்கிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளை சிதறடித்தார்.

ஆர்சிபி பவுலர்களை கதறவிட்ட அவர், இம்பேக்ட் ப்ளேயராக களமிறக்கப்பட்ட கரண் சர்மா ஓவரில் அடுத்தடுத்து சிக்ஸ் மற்றும் பவுண்டரி விளாசி அரைசதம் கடந்தார். ஆனால், அதே கரண் சர்மாவின் அடுத்த ஓவரில் சிக்ஸ் அடிக்க முயன்று கேட்ச் ஆனார். அவர் 30 பந்துகளில் 5 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் எடுத்தார். ஸ்டோய்னிஸ் அவுட் ஆன அடுத்த ஓவரில் அதுவரை பொறுமை காத்த கேஎல் ராகுல், சிராஜ் பந்தை சிக்ஸ் அடிக்க முயன்று விராட் கோலியிடம் கேட்ச் ஆனார். ஓப்பனிங் இறங்கிய ராகுல் 20 பந்துகளில் 18 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதில் ஒரே ஒரு பவுண்டரி அடக்கம்.

இதன்பின்னரே மைதானம் சூடுபிடிக்கத் தொடங்கியது. அடுத்ததாக இறங்கிய நிக்கோலஸ் பூரன் விக்கெட் இழப்பை பற்றி கவலைப்படாமல் மட்டையை சுற்றினார். ஸ்டோய்னிஸ் விட்டுச் சென்ற அதிரடியை அவருக்கு ஒருபடிமேலாக தொடர்ந்தார் பூரன். 15 பந்துகளில் 50 ரன்களை கடந்த அவர், அரைசதம் கடந்த பின்னும் அதிரடியை கைவிடவில்லை.

62 ரன்கள் எடுத்திருந்த இவரையும் சிராஜ் வீழ்த்தினார். ஸ்டோய்னிஸ் மற்றும் பூரனின் அதிரடி ஆட்டத்தால் லக்னோ அணி வெற்றிக்கு நெருக்கமானது. இறுதியில் 9 பந்துகளில் 7 ரன்கள் தேவை என்ற நிலை வந்தபோது, பர்னெல் பந்தை சிக்ஸ் அடித்த ஆயோஷ் பதோனி, எதிர்பாராதவிதமாக ஹிட் அவுட் ஆனார்.

கடைசி ஓவரில் 5 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட ஹர்ஷல் படேல் ஓவரின் முதல் பந்தை உனட்கட் சிங்கிள் எடுத்தார். அடுத்த பந்தில் மார்க் வுட் கிளீன் போல்டாகினார். அடுத்த இரண்டு பந்துகளில் ரவி பிஷ்னோய் முறையே 2 மற்றும் ஒரு ரன்கள் எடுக்க ரன்கள் சமநிலை ஆனது. 5வது பந்தில் ஒரு ரன் எடுத்தால் லக்னோ அணி வெற்றிபெறும். உனட்கட் பந்தை தூக்கி அடிக்க கேட்ச் ஆனது.

இதன்பின் அவேஷ் கான் களம்புகுந்தார். கடைசி பந்தை மன்கட் முறையில் அவுட் ஆக்க முயல கைகூடாமல் போனது. இறுதியாக கடைசி பந்தில் இலக்கை எட்டிய லக்னோ அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

பெங்களூரு தரப்பில் சிராஜ் மற்றும் பர்னெல் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இன்னிங்ஸ்: பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் லக்னோ டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் இணை அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்தது. 44 பந்துகளில் 61 ரன்களை விளாசி அணிக்கு பக்கபலமாக திகழ்ந்த கோலியை அமித் மிஸ்ரா அவுட்டாக்கினார்.

அடுத்து வந்த மேக்ஸ்வெல் ஃபாஃப் டு பிளெசிஸ் கைகோத்தார். இருவரும் லக்னோவின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து 27 பந்துகளில் 50 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். 17 ஓவரில் டு பிளெசிஸ் அடித்த பந்தை குருணால் பாண்டியா மிஸ் செய்தது ஆர்சிபி ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை கொடுத்தது.

தொடர்ந்து 44 பந்துகளில் 100 ரன்கள் என இருவரின் பாட்னர்ஷிப்பையும் பிரிக்க முடியாமல் லக்னோ பவுலர்கள் திணறினர். அடித்து வெளுத்த மேக்ஸ்வெல்லை 19.5 ஓவரில் மார்க் வுட் அவுட்டாக்கினார். 29 பந்துகளில் 59 ரன்களை சேர்த்த மேக்ஸ்வெல், 6 சிக்ஸர்களை விளாசியிருந்தார்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் ஆர்சிபி 2 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்களை குவித்தது. ஃபாப் டு பிளெசிஸ் 79 ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். டாப் 3 பேட்ஸ்மேன்களின் ஆட்டத்தால் ஆர்சிபி அணியின் ஸ்கோர் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. லக்னோ அணி தரப்பில் அமித் மிஸ்ரா, மார்க் வுட் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x