Published : 10 Apr 2023 10:03 PM
Last Updated : 10 Apr 2023 10:03 PM
சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான 13-வது லீக் போட்டியின் இறுதி ஓவரில் ஐந்து சிக்ஸர்களை பறக்கவிட்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வெற்றிபெற செய்தார் ரிங்கு சிங். இந்த சூழலில் அந்த கடைசி ஓவரை வீசிய குஜராத் வீரர் யஷ் தயாள் அதிர்ச்சியில் உறைந்திருந்த நேரத்தில் அவருக்கு குறுஞ்செய்தி மூலம் ரிங்கு ஆறுதல் சொல்லியுள்ளார்.
இந்தப் போட்டியில் 21 பந்துகளில் 48 ரன்களை சேர்த்திருந்தார் ரிங்கு. இதில் 1 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும். 19 ஓவர்கள் முடிவில் 16 பந்துகளுக்கு 18 ரன்கள் மட்டுமே அவர் எடுத்திருந்தார். ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் கடைசி ஓவரில் எட்டப்பட்ட அதிகபட்ச இலக்காகவும் இது அமைந்தது. கடைசி 6 பந்துகளில் கொல்கத்தா வெற்றிக்கு 29 ரன்கள் தேவைப்பட்டது. அந்த அணி 31 ரன்கள் எடுத்தது.
அந்த கடைசி ஓவருக்கு பிறகு கண்களையும், காதுகளையும் மூடிக் கொண்டார் யஷ் தயாள். அவரது அந்த ரியாக்ஷன் சமூக வலைதளத்தில் கவனம் பெற்றது. சிலர் அவரது மோசமான பந்து வீச்சுதான் கொல்கத்தா அணியை வெற்றி பெற செய்தது என சொல்லி இருந்தனர். அவரும் அந்த ஓவரில் 3 பந்துகளை புள்-டாஸாக வீசி இருந்தார். அந்த மூன்றையும் சிக்ஸராக மாற்றி இருந்தார் ரிங்கு. அதைத் தொடர்ந்து வீசப்பட்ட 2 ஷார்ட் லெந்த் டெலிவரியை சிக்ஸராக மாற்றி இருந்தார்.
“போட்டிக்கு பிறகு யாஷுக்கு நான் மெசேஜ் செய்தேன். ‘கிரிக்கெட்டில் இது நடக்கிற ஒன்றுதான்’, ‘கடந்த ஆண்டு நீங்கள் சிறப்பாக விளையாடி இருந்தீர்கள்’ என அதன் மூலம் அவருக்கு ஆறுதல் சொல்லி ஊக்கம் கொடுத்தேன்” என ரிங்கு சிங் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT