Published : 10 Apr 2023 07:55 PM
Last Updated : 10 Apr 2023 07:55 PM

தோனி போல காட்டுப் பாதை - யார் இந்த கொல்கத்தா ‘மேட்ச் வின்னர்’ ரிங்கு சிங்?

ரிங்கு சிங்

ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் தன்னை பற்றி மட்டுமே வைரலாக பேசும் விதமாக மகத்தான இன்னிங்ஸை ஆடி அசத்தியுள்ளார் இளம் வீரர் ரிங்கு சிங். அதன் மூலம் தன் அணிக்கு வெற்றியும் தேடி கொடுத்துள்ளார். பவுலரின் பந்து வீச்சு சரியில்லை. அதனால்தான் ரிங்கு அப்படி ஆடினார் என்றெல்லாம் ஒரு பக்கம் விமர்சனங்கள் வருகின்றன. என்னதான் பவுலிங் சரியில்லை என்றாலும் ஐந்து சிக்ஸர்களை இறுதி ஓவர்களில் அடிக்க அசாத்திய திறன் வேண்டும்.

‘என்னால் முடியும் என நம்பினேன். அதனால் ஒன்றன் பின் ஒன்றாக ஷாட்டை கனெக்ட் செய்தேன். அதைத்தவிர வேறு எதுவும் நான் நினைக்கவில்லை’ என ஐபிஎல் அரங்கில் கிறிஸ் கெயில், ரவீந்திர ஜடேஜா, ராகுல் திவாட்டியா வரிசையில் ஒரே ஓவரில் தனி ஒருவராக 5 சிக்ஸர்களை விளாசிய பின்னர் அது குறித்து எளிய விளக்கம் கொடுத்தார் ரிங்கு. ஐபிஎல் கிரிக்கெட்டில் கடைசி ஓவரில் 5 சிக்ஸர்கள் விளாசி அணியை வெற்றி பெற செய்த முதல் வீரர்.

யார் இவர்? - பொதுவாக இந்தியாவை பொறுத்தவரை கிரிக்கெட் வீரர்களின் உருவாக்கத்தில் சில டெம்ப்ளெட் தான் இருக்கும். சர்வமும் கிரிக்கெட் விளையாட்டுதான் என முடிவு செய்து, தொழில்முறை கிரிக்கெட்டை கரியராக அமைத்துக் கொள்ள விரும்பி, அது சார்ந்து பயிற்சி மேற்கொள்வது ஒரு ரகம். பெரும்பாலும் அதற்கு பெற்றோர்களின் ஆதரவும் அமோகமாக இருக்கும். அதுவே பெற்றோரின் ஆதரவு இல்லாமல் கிரிக்கெட் விளையாட்டு மீது மோகம் கொண்டு தீவிரமாக பயிற்சி செய்து வாய்ப்புக்காக தவமிருப்பது மற்றொரு ரகம். கிட்டத்தட்ட இந்த இரண்டாவது ரகத்தில் மகேந்திர சிங் தோனியை உதாரணமாக சொல்லலாம். இதில் சவால்கள் அதிகம். இந்த ரகத்தை சேர்ந்த வீரர் தான் ரிங்கு. இவர்கள் காட்டுப் பாதையில் கற்களையும், முற்களையும் கடந்து தங்கள் இலக்கு நோக்கி முன்னேற வேண்டி இருக்கும்.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் அலிகர் பகுதியை சேர்ந்தவர் 25 வயதான ரிங்கு. பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து வருவதும் அங்குதான். அவரது அப்பா கான்சந்த் சிங்கிற்கு எல்பிஜி சிலிண்டர் விநியோக நிறுவனம் ஒன்றில் பணி. அம்மா பினா. அவர்கள் வீட்டில் மொத்தம் ஐந்து பிள்ளைகள். அதில் ரிங்கு மூன்றாவது பிள்ளை. மிடில் கிளாஸ் குடும்பம். ஊழியர்களுக்கான குடியிருப்பில் 2 அறைகள் கொண்ட வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரது இறுதி ஓவர் ஆட்டம் அந்த ஏரியாவையே விழாக்கோலமாக மாற்றி உள்ளது. அவரது குடும்பத்தினர் இனிப்புகளை பகிர்ந்து மகிழ்ந்துள்ளனர்.

ஒருகட்டத்தில் குடும்பச் சூழல் காரணமாக கிரிக்கெட் விளையாட்டுக்கு குட்-பை சொல்லும் முடிவிலும் இருந்துள்ளார் ரிங்கு. ஒன்பதாம் வகுப்பில் தோல்வி கண்டவர். கிரிக்கெட்தான் அனைத்தும் என்ற எண்ணத்தில் இருந்தவருக்கு குடும்பத்தினர் வாங்கிய 5 லட்ச ரூபாய் கடனை அடைக்க வேலைக்கு போக வேண்டிய நிர்பந்தம். அவரும் மாஃப் போடுவது, தரையை துடைப்பது என வேலை செய்துள்ளார். இருந்தும் அந்த மாஃப்பும், துடைப்பமும் கையில் பிடித்தவருக்கு கிரிக்கெட்தான் அனைத்தும் என்ற எண்ணம் அங்கு வேலைக்கு போனதும் வந்துள்ளது. அதனால் அந்த வேலையை உதறியுள்ளார். ரிங்குவின் பால்யத்தில் அவர் பேட்டும் கையுமாக இருப்பதை பார்த்தாலே அடித்து துவம்சம் செய்து விடுவாராம் அவரது அப்பா. மகனின் படிப்பு கெட்டுவிடக் கூடாது என எண்ணும் எதார்த்தமான அப்பாவின் ஆதங்கம் அது.

இந்தச் சூழலில் டெல்லியில் நடைபெற்ற கிரிக்கெட் தொடர் ஒன்றில் தொடர் நாயகன் விருதை அவர் வென்றுள்ளார். அதற்காக அவருக்கு ஒரு மோட்டார் பைக் பரிசாக கொடுக்கப்பட்டுள்ளது. அதுதான் அவரது குடும்பத்தினருக்கு ‘இந்த பையனுக்குள்ள ஏதோ இருந்திருக்கு பாரேன்’ என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளது. அதன்பிறகு உத்தரப் பிரதேச அணிக்காக டொமஸ்டிக் கிரிக்கெட்டில் விளையாட தொடங்கியுள்ளார். அண்டர் 16-ல் தொடங்கி சீனியர் அளவுக்கு அது பரிணாமம் அடைந்துள்ளது.

முதல்தர கிரிக்கெட், லிஸ்ட் ஏ கிரிக்கெட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அவர் விளையாடி வருகிறார். அப்படியே 2017 வாக்கில் ஐபிஎல் அரங்கில் பஞ்சாப் கிங்ஸ் (அப்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப்) அணிக்காக வாங்கப்பட்டுள்ளார். இருந்தும் பெஞ்சில் இருந்தபடியே அந்த சீசன் அவருக்கு கடந்துள்ளது. 2018-ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் வங்கப்பட்டார். ஆனாலும் ஆடும் லெவனில் அவரால் நிரந்தர இடம் பிடிக்க முடியவில்லை. மறுபக்கம் 2018-19 ரஞ்சிக் கோப்பையில் உத்தரப் பிரதேச அணி சார்பில் அதிக ரன்களை குவித்த பேட்ஸ்மேன் ஆனார். மொத்தம் 953 ரன்கள். அதே நேரத்தில் ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தா அணியுடன் அவரது பயணம் தொடங்கியது.

2021 சீசனை காயம் காரணமாக மிஸ் செய்தார். 2022 பிப்ரவரியில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் மீண்டும் அவர் கொல்கத்தா அணி வாங்கியது. ஐபிஎல் சீசனில் அவர் விளையாடுவதன் மூலம் அவருக்கு 55 லட்ச ரூபாய் கிடைக்கும் என தெரிகிறது. கடந்த சீசனில் 7 போட்டிகளில் விளையாடி 174 ரன்கள் எடுத்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட்148.72. கடந்த சீசனில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக 23 பந்துகளில் 42 ரன்கள், லக்னோ அணிக்கு எதிராக 15 பந்துகளில் 40 ரன்களையும் எடுத்தார். அதன் மூலம் ஆடும் லெவனில் அவருக்கான இடம் உறுதியானது.

ஐபிஎல் கிரிக்கெட்டில் கிடைக்கும் தொகையை கொண்டு குடும்பத்தின் கடன், சகோதரர் மற்றும் சகோதரியின் திருமணத்தை நடத்தவும். மீதமுள்ள தொகையை சேமிக்கும் திட்டம் இருப்பதாகவும் அவரே சொல்லியுள்ளார். பெரும்பாலான மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு இருக்கும் அதே கனவுதான் ரிங்குவுக்கும். இப்போது நடப்பு சீசனில் 3 போட்டிகளில் விளையாடி மொத்தம் 98 ரன்கள் எடுத்துள்ளார். இதில் குஜராத் அணிக்கு எதிராக அவர் எடுத்த 48* (21 பந்துகள்) ரன்களும் அடங்கும். பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ஷர்துல் தாக்கூர் உடன் இணைந்து அபார கூட்டணி அமைத்தார். அந்தப் போட்டியில் 33 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

‘எல்லோரையும் போல எனக்கும் நம் நாட்டுக்காக சர்வதேச கிரிக்கெட் அரங்கில் விளையாட வேண்டுமென்ற ஆசை உள்ளது. இப்போது ஐபிஎல் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வருகிறேன். கொல்கத்தா அணிக்காக சிறப்பாக விளையாட வேண்டும். சுரேஷ் ரெய்னா தான் எனது ரோல் மாடல். நான் அவரை தீவிரமாக பின்பற்றி வருபவன். அபார பீல்டர் மற்றும் லோயர் ஆர்டரில் பேட் செய்பவர்’ என சொல்கிறார் இடது கை பேட்ஸ்மேனான ரிங்கு. ஆல் ரவுண்டரான இவர் ஆப்-பிரேக் வீசுவார். அவரது கனவு பலிக்கட்டும்..!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x