Published : 10 Apr 2023 07:31 AM
Last Updated : 10 Apr 2023 07:31 AM

கடைசி ஓவரில் 5 சிக்ஸர்களை பறக்கவிட்ட ரிங்கு சிங்: 3 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி!

ரிங்கு சிங்

அகமதாபாத்: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. கடைசி ஓவரில் 29 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 5 சிக்ஸர்களை விளாசி கொல்கத்தா அணியை வெற்றி பெறச் செய்தார் ரிங்கு சிங்.

குஜராத், கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. முதலில் விளையாடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 204 ரன்களைக் குவித்தது.

ரித்திமான் சாஹா 17, ஷுப்மன் கில் 39, அபிநவ் மனோகர் 14 ரன்கள் எடுத்தனர். சாய் சுதர்ஷன் அபாரமாக விளையாடி 53 ரன்களைக் குவித்தார். 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் விஜய் சங்கர் 63 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். டேவிட் மில்லர் 2 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

கொல்கத்தா அணி தரப்பில் சுனில் நரைன் 3, சுயாஷ் சர்மா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

பின்னர் 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி விளையாடியது. தொடக்க வீரர்கள் ரஹமனுல்லா குர்பாஸ் 15, என்.ஜெகதீசன் 6 ரன்கள் எடுத்து வீழ்ந்தனர். ஆனால் 3-வது விக்கெட்டுக்கு ஜோடி
சேர்ந்த வெங்கடேஷ் ஐயரும், கேப்டன் நிதிஷ் ராணாவும் அபாரமாக விளையாடினர். நிதிஷ் ராணா 29 பந்துகளில் 45 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த வெங்கடேஷ் ஐயர் 40 பந்துகளில் 83 ரன்கள் சேர்த்த நிலையில் வீழ்ந்தார்.

15.5 ஓவர்களில் கொல்கத்தா அணி 4 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் என்ற நிலையில் இருந்தது. அப்போது 17-வது ஓவரை வீச வந்த கேப்டன் ரஷித் கான் முதல் 3 பந்துகளில் ஆந்த்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், ஷர்துல் தாக்குர் ஆகியோரது விக்கெட்களைக் கைப்பற்றி ஹாட்ரிக் சாதனை படைத்தார். இதனால் அந்த அணி 155 ரன்களுக்கு 7 விக்கெட்கள் என்ற மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது. ஆனால் 8-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரிங்கு சிங்கும், உமேஷ் யாதவும் அபாரமாக விளையாடினர். கடைசி ஓவரில் அந்த அணி வெற்றி பெற 29 ரன்கள் தேவைப்பட்டன. அந்த ஓவரை யஷ் தயாள் வீசினார். முதல் பந்தில் ஒரு ரன் எடுக்கப்பட்டது. அதன் பின்னர் அடுத்த 5 பந்துகளையும் சிக்ஸருக்கு பறக்கவிட்டார் ரிங்கு சிங். இதனால் அந்த அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ரிங்கு சிங் 48 ரன்களும் (21 பந்துகள்), உமேஷ் யாதவ் 5 ரன்களும் (6 பந்துகள்) எடுத்து களத்தில் இருந்தனர். ஆட்டநாயகனாக ரிங்கு சிங் தேர்வானார். இதையடுத்து 3 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது. அதே நேரத்தில் குஜராத் அணி முதல் தோல்வியைப் பெற்றுள்ளது.

ஷுப்மன் கில் 2,000 ரன்கள்: ஐபிஎல் போட்டிகளில் 2 ஆயிரம் ரன்களை குறைந்த வயதில் எட்டிய 2-வது வீரர் என்ற பெருமையை குஜராத் அணி வீரர் ஷுப்மன் கில் பெற்றுள்ளார். 23 ஆண்டுகள் 214 நாட்களில் ஐபிஎல் போட்டிகளில் 2 ஆயிரம் ரன்களைக் குவித்துள்ளார் கில். ரிஷப் பந்த் 23 ஆண்டுகள் 27 நாட்களில் 2 ஆயிரம் ரன்களைக் குவித்து இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். 3-வது இடத்தில் சஞ்சு சாம்சன் (24 ஆண்டுகள் 140 நாட்கள்), 4-வது இடத்தில் விராட் கோலி (24 ஆண்டுகள் 175 நாட்கள்), 5-வது இடத்தில் சுரேஷ் ரெய்னா (25 ஆண்டுகள் 155 நாட்கள்) உள்ளனர்.

நடப்பு சீசன் ஐபிஎல் போட்டியில் தொடர்ச்சியாக 2 அரை சதங்களை எடுத்துள்ளார் சாய் சுதர்ஷன். நேற்றைய ஆட்டத்தில் 38 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார் அவர். கடந்த 4-ம் தேதி டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் 48 பந்துகளில் 62 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஐபிஎல் போட்டிகளில் தனது 4-வது அரை சதத்தை எடுத்துள்ளார் குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் விஜய் சங்கர். நேற்றைய ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய விஜய் சங்கர், 24 பந்துகளில் 63 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

டி20 போட்டிகளில் 4 முறை ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்தி அதிக முறை ஹாட்ரிக் சாதனை படைத்தவர் என்ற பெருமையை ரஷித் கான் பெற்றுள்ளார். நேற்றைய போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்திய ரஷித் கான், இதற்கு முன்பு சிபிஎல், சர்வதேச டி20, பிபிஎல் போட்டிகளிலும் ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். அவருக்கு அடுத்தபடியாக ஆண்ட்ரூ டை, மொகமது ஷமி, அமித் மிஸ்ரா, ஆந்த்ரே ரஸ்ஸல், இம்ரான் தாஹிர் ஆகியோர் 3 முறை ஹாட்ரிக் விக்கெட்டைச் சாய்த்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x