Published : 09 Apr 2023 07:39 PM
Last Updated : 09 Apr 2023 07:39 PM
மும்பை: குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
16-வது ஐபிஎல் சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் இன்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. அகமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா இன்றைய போட்டியில் களமிறங்காத நிலையில் ரஷீத் கான் அணிக்கு தலைமை தாங்கினார்.
அதன்படி, சஹா மற்றும் ஷுப்மன் கில் இருவரும் சுமாரான துவக்கம் கொடுத்தனர். குஜராத்தின் டாப் ஆர்டரை சுனில் நரைன் சரித்தார். 17 ரன்கள் எடுத்திருந்த சஹாவை முதல் விக்கெட்டாக ஆட்டத்தின் ஐந்தாவது ஓவரிலேயே வீழ்த்தினார். இதன்பின் ஷுப்மன் கில் உடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்ஷன். இருவரும் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
வழக்கத்துக்கு மாறாக பொறுமையாக விளையாடிய கில் ஒருகட்டத்தில் பொறுமை இழந்து நரைன் பந்தை தூக்கி அடிக்க முயல அது நேராக உமேஷ் யாதவ் கைகளில் தஞ்சம் ஆனது. 39 ரன்களுக்கு அவர் அவுட் ஆக, அதிரடியாக தொடங்கிய அபிநவ் மனோகரை அதே அதிரடி பாணியில் போல்டாக்கி 14 ரன்களுக்கு நடையைக்கட்ட வைத்தார் சுயாஷ் சர்மா.
சிறப்பாக விளையாடிய சாய் சுதர்ஷன் 53 ரன்கள் கடந்திருந்த நிலையில் நரைன் பந்துவீச்சில் வீழ்ந்தார். எனினும் மற்றுமொரு முனையில் இருந்த மற்றொரு தமிழக வீரர் விஜய் சங்கர் அவர் விட்டுச்சென்ற அதிரடியை தொடர்ந்தார்.
ஷர்துல் தாகூர் வீசிய இறுதி ஓவரில் மட்டும் ஹாட்ரிக் சிக்ஸ் உட்பட நான்கு சிக்ஸர்களை விளாசிய விஜய் சங்கர் 21 பந்துகளில் அரைசதம் கடந்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் குவித்தது. விஜய் சங்கர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 24 பந்துகளில் 63 ரன்கள் சேர்த்தார். கொல்கத்தா தரப்பில் சுனில் நரைன் 3 விக்கெட்டும், சுயாஷ் சர்மா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு ரஹ்மானுல்லா குர்பாஸ், ஜெகதீசன் இணை தொடக்கம் கொடுத்தது. போன ஆட்டத்தில் அதிரடி காட்டிய ரஹ்மானுல்லா இந்த ஆட்டத்தில் 15 ரன்களில் கிளம்பினார். அடுத்து ஜகதீசன் 6 ரன்களில் நடையைக்கட்டினார். நிதிஷ் ராணா 45 ரன்களில் விக்கெட்டாக 14 ஓவர்களில் கொல்கத்தா 132 ரன்களை சேர்த்தது. மற்றொருபுறம் வெங்கடேஷ் ஐயர் 40 பந்துகளில் 83 ரன்களை வெளுக்க, 17ஆவது ஓவரில் மட்டும் 3 விக்கெட்டுகளை ஹாட்ரிக் முறையில் பறிகொடுத்தது கொல்கத்தா. 19 ஆவது ஓவரில் 176 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்த கொல்கத்தாவை கடைசி ஓவரில் 5 சிக்சர்களை விளாசி ரின்கு சிங் வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். கடைசி ஓவர் சிக்சர் மழையால் 3 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தியது கொல்கத்தா.
குஜராத் அணி தரப்பில் ரஷித் கான் 3 விக்கெட்டுகளையும், அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட்டுகளையும், முஹம்மத் சமி, ஜோசுவா லிட்டில் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT