Published : 08 Apr 2023 09:16 PM
Last Updated : 08 Apr 2023 09:16 PM
மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களை சேர்த்தது.
16-வது ஐபிஎல் சீசனின் இன்றைய 12 லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய கேப்டன் ரோஹித் ஷர்மாவை 3வது ஓவரில் போல்டாக்கினார் துஷார் தேஷ்பாண்டே. 21 ரன்களில் ரோஹித் ஷர்மா நடையைக் கட்ட இஷான் கிஷன், கேமரூன் கிரீன் கைகோத்தனர்.
இஷான் கிஷன் 21 பந்துகளில் 32 ரன்கள் என நன்றாக ஆடிக்கொண்டிருந்தாலும் ஜடேஜா வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 1 ரன்களுடன் பெவிலியன் பக்கம் நடையைக்கட்ட 8 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி 73 ரன்களை சேர்த்தது.
கேமரூன் கிரீன் அடித்த பந்து நேராக ஜடேஜாவை நோக்கி வர கண்களை மூடி கையை நெற்றிக்கு நேராக நிறுத்த பந்து கையில் மாட்டிக்கொண்டது. அருகிலிருந்த அம்பயர் சற்று தடுமாறித்தான் போனார். 4ஆவது விக்கெட்டையும் பறிகொடுத்தது மும்பை. அடுத்து அர்ஷத் கானும் 2 ரன்களில் அவுட்டாக மும்பை ஃபேன்ஸ் ஹீட்டாகினர். அடுத்து யாரும் விக்கெட்டாக கூடாது என மும்பை ரசிகர்கள் பிரார்த்திக்கும்போது திலக் வர்மா எல்பிடபள்யூ ஆனார். அம்பயரை நம்பாமல் டிஆர்எஸ் சென்றும் பலனில்லை. அவுட் உறுதியாக 13 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 103 ரன்களில் மும்பை தடுமாறியது.
த்ரிஷ்டன் ஸ்ட டப்ஸ் சென்ற வேகத்தில் கோபமடைந்த டிம் டேவிட் 2 சிக்சர்கள் + 1 ஃபோர் என வெளுத்து வாங்கினார். அதே கோபத்துடன் அடுத்த பந்தையும் தூக்கி அடித்ததில் கேட்சாகி கோவத்தை தணித்துகொண்டு பெவிலியன் திரும்பினார்.
ஹிருத்திக் ஷோக்கீன், பியூஸ் சாவ்லா இணைந்து இறுதியில் போராட நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் மும்பை அணி 8 விக்கெட்டை இழந்து 157 ரன்களைச் சேர்த்தது. ரோகித் தவிர்த்து, இஷான் கிஷன் முதல் அர்ஷத் கான் வரையிலான மும்பையின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை ரவீந்திர ஜடேஜாவும், சான்ட்ரும் சேர்த்து கட்டுப்படுத்தினர்.
சிஎஸ்கே அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், மிட்ஷெல் சாட்னர், துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், சிசண்டா மகளா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT