Published : 08 Apr 2023 07:39 PM
Last Updated : 08 Apr 2023 07:39 PM
கவுஹாத்தி: டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
16-வது ஐபிஎல் சீசனின் 11ஆவது இன்றைய லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். 8 ஓவர் வரை விக்கெட்டை பறிகொடுக்காமல் இருவரும் அணிக்க நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக்கொடுத்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 60 ரன்களில் முகேஷ் குமார் வீசிய பந்தில் அவுட்டானார்.
அவருக்கு அடுத்து வந்த சஞ்சு சாம்சன் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். ரியான் பராக் 7 ரன்களில் கிளம்ப மறுபுறும் பட்லர் நிலைத்து நின்று ஆடி ரன்களை சேர்த்துகொண்டிருந்தார். அதனால் ராஜஸ்தான் அணி 16 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்களைச் சேர்த்திருந்தது. பட்லருக்கு உறுதுணையாக நின்று ஹெட்மேயர் சிக்ஸர்களை பறக்கவிட்டுக்கொண்டிருந்தார். டெல்லி அணிக்கு தண்ணி காட்டிய பட்லரை முகேஷ்குமார் 79 ரன்களில் பெவிலியனுக்கு அனுப்பினார்.
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் அணி 199 ரன்களைச் சேர்த்தது. ஹெட்மேயர் 21 பந்துகளில் 39 ரன்களுடனும், துருவ் ஜூரல் 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். டெல்லி அணி தரப்பில் முகேஷ்குமார் 2 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ், ரோவ்மேன் பவல் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா இரண்டாவது பந்திலேயே ரன் எடுக்காமல் அவுட்டானார். அடுத்த 2 பந்துகளில் மனிஷ் பாண்டே கிளம்பினார். முதல் ஓவரில் ரன் எதுவுமின்றி 2 விக்கெட்டுகளை பறிகொடுத்த சோகத்திலிருந்த டெல்லிக்கு 14 ரன்களில் விக்கெட்டாக்கி வேதனையை அதிகப்படுத்தினார் ரிலீ ரோசோ.
அணியின் வீரர்களை நம்பாமல் தனித்த ஆளாக நின்று களமாடினார் டேவிட் வார்னர். சொல்லப்போனால் அணியின் ஸ்கோர் உயர அவர் முக்கியமான காரணமாக திகழ்ந்தார். வார்னருக்கு தோள் கொடுத்த லலித் யாதவ் 38 ரன்கள் வரை போராடி சேர்த்துவிட்டு சென்றாலும், அடுத்தடுத்து வந்த அக்சர் படேலும், ரோவ்மேன் பவலும் சொல்லி வைத்தார் போல 2 ரன்களில் பெவிலியன் திரும்பி பொறுப்பற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் 16 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 118 ரன்களுடன் தடுமாறியது டெல்லி.
அபிஷேக் போரல் 7 ரன்களில் வந்த வேகத்தில் திரும்ப, 55 பந்துகளில் 65 ரன்களை சேர்த்து நிலைத்து ஆடிய வார்னரும் எல்பிடபிள்யூ முறையில் அவுட்டாக 57 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை தோற்கடித்தது ராஜஸ்தான்.
ராஜஸ்தான் அணி தரப்பில் யுவேந்திர சாஹல், ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், அஸ்வின் 2 விக்கெட்டுகளையும், சந்தீப் ஷர்மா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT