Published : 08 Apr 2023 03:53 PM
Last Updated : 08 Apr 2023 03:53 PM
தோனி கேப்டன்சி செய்யும்போது எதிரணியின் பேட்டராக தான் எரிச்சலடைந்துள்ளேன் என்று ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். அதாவது புகழ்வது போல் பழிப்பது வஞ்சப்புகழ்ச்சி என்றால். பழிப்பது போல் புகழ்வது ‘விஞ்சுப் புகழ்ச்சி’ என்று நாம் பெயரிடலாம்.
அதாவது, ஐபிஎல் தொடரில் சிஎஸ்கேவுக்கு எதிராக ஆடும் போது தோனி தனக்கு எதிராக மேற்கொண்ட கள வியூக உத்திகள் தன்னை நிரம்ப எரிச்சலடையச் செய்திருக்கின்றன என்கிறார் ராபின் உத்தப்பா. முதலில் உத்தப்பா ஜியோ சினிமாவுக்கு அளித்த பேட்டியில் சொல்வதை பார்ப்போம்:
“நான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ஆடும்போது மிகவும் எரிச்சலடைந்துள்ளேன். தோனி மீது எரிச்சலாகவே இருக்கும். ஹேசில்வுட் வீசும் போது ஃபைன்லெக் திசையில் யாரையும் நிறுத்த மாட்டார். ஆனால் எனக்குத் தெரியும் ஹேசில்வுட் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசுவார் என்று அப்படி வீசும் போது பாயிண்டில் பவுண்டரி விளாசலாம் என்று அடித்தால் டீப் பாயிண்டில் பீல்டரை நிறுத்தி கேட்ச் கொடுக்குமாறு செய்து விடுவார் தோனி.
அதாவது, நாம் எந்த பீல்ட் நிலையில் அடித்துப் பழக்கமில்லாதவர்களோ அதே இடத்தில் தோனி நம்மை அடிக்க வைத்து வீழ்த்தி விடுவார். பேட்டரின் எண்ணங்களுடன் விளையாடுபவர் தோனி. பேட்டரை வித்தியாசமாக யோசிக்க வைப்பார். அதே போல் பவுலர்க்ளையும் வித்தியாசமாகச் சிந்திக்க வைப்பார்.
அதாவது விக்கெட் எடுக்கும் தெரிவைத் தவிர வேறு எதையும் ஒரு பவுலர் சிந்திக்காத வகையில் உங்களை யோசிக்க வைப்பார் தோனி. ஒரு முறை தேவ்தத் படிக்கல்லை அப்படித்தான் வீழ்த்த உத்தி வகுத்தார். தேவ்தத் படிக்கல் பிக்-அப் ஷாட் நன்றாக ஆடுபவர். தோனி என்ன சொன்னார் தெரியுமா, ஓஹோ பிக் அப் ஷாட்டா? அதை அவர் ஆடுமாறு செய்து விடுவோம் என்றார். பிறகு ஃபைன் லெக் பீல்டரை லெக் கல்லிக்குக் கொண்டு வந்தார். எங்கிருந்து அவருக்கு இப்படியெல்லாம் யோசனை வருகின்றது என்று நான் அசந்து போயிருக்கின்றேன்” என்று கூறியுள்ளார் ராபின் உத்தப்பா.
சரி. இது ஒரு நல்ல கேப்டன்சிக்கான உதாரணம் என்றாலும், இவையெல்லாம் ஏதோ தோனி மட்டுமே செய்வது போலவும் அதற்கு முன்னால் யாரும் செய்யாதது போன்ற தோற்றத்தையும் பிம்பத்தையும் ஏற்படுத்துகின்றது. தோனிக்கு முன்பு எத்தனையோ ஜாம்பவான்கள் எத்தனை விதமான உத்திகளை வகுத்து எத்தனையோ பெரிய பெரிய ஜாம்பவான் பேட்டர்களையெல்லாம் காலி செய்ததில்லையா? ஆனால் அப்போதெல்லாம் எப்போதாவது இப்படி விதந்தோதி பேசுவார்கள். அதாவது அதற்கான சூழ்நிலை வரும்போது இந்த இடத்தில் இந்தக் கேப்டன்சியை பற்றி பேசினால் சரியாக இருக்கும் என்று கருதி பேசுவது. அவசியம் கருதிப் பேசுவது அது. ஆனால் இப்போது வீரர்கள் வெறும் வீரர்கள் மட்டுமல்ல, பெரிய வர்த்தகங்களின் கார்ப்பரேட்களின் விளம்பர ஐகான்களாகி விட்டனரே. அதனால் எல்லாம் புதிது போல் தோன்றும் போலும்!
ஆனால் இது மின்னணு ஊடகவியல் காலம். எனவே ஒரு வீரரோ, கேப்டனோ, கோச்சோ சாதாரணமாகச் செய்வதையெல்லாம் ஏதோ பெரிய விஷயம் போலவும் முன்பின் நடந்திராது போலவும் ஒரு தோற்றத்தை மின்னணு ஊடகங்கள் கிளப்புகின்றன. கோலி கேப்டன்சியைக் கையில் எடுத்த போதும் இப்படித்தான், மற்ற கேப்டன்கள் செய்யாத உத்தியை அவர் செய்து விட்டது போல் ஒரு வெடியைக் கொளுத்திப் போடுவார்கள்.
ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாஹ், ஒரு முறை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் ஒன்றில் தென் ஆப்பிரிக்கா கேப்டன் ஹான்சி குரோனியேயை எப்படி வீசியும் எடுக்க முடியாமல் கடைசியில் அவரை ரன் அவுட் செய்ய உத்தி வகுத்தார். இது உண்மையில் புதிதான ஒரு உத்தி. அன்று ஹான்சி குரோனியே ரிச்சர்ட்ஸ் பாணியில் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தார்.
ஒன்றும் செய்ய முடியவில்லை. என்ன செய்தார் ஸ்டீவ் வாஹ், தானே பவுலிங் போட வந்தார். ஸ்கொயர் லெக்கில் ரிக்கி பாண்டிங்கை கொஞ்சம் தள்ளி நிறுத்தி குரோனியேவின் கால்களுக்கு வீச அவர் பிளிக் செய்து சிங்கிளாக எடுத்துக் கொண்டிருந்தார். ஸ்டீவ் வாஹ் அப்படியாக அவரை அந்த பிளிக் ஷாட்டிற்கு ஒர்க் அவுட் செய்து விட்டார் என்று பலருக்கும் தெரியாது.
இரண்டு ஓவர்கள் சென்ற பிறகு மீண்டும் ஸ்டீவ் வாஹ் ஸ்கொயர் லெக்கில் இருந்த ரிக்கி பாண்டிங்கை அங்கிருந்து அகற்றி மிட் விக்கெட்டில் கொஞ்சம் வலது புறச் சாய்வாக நிறுத்தி வீசத் தொடங்கினார். அந்த இடத்தில் அடித்து விட்டு சிங்கிள் ஓடிப்பழக்கம் பெற்ற குரோனியே இப்போது அந்த இடம் காலியாக இருந்ததால் லேசாகத் தட்டி விட்டு சிங்கிள் எடுக்க ஸ்டார்ட் செய்தார். ஆனால் ரிக்கி பாண்டிங் மின்னல் வேகத்தில் அங்கு வந்து பந்தை எடுத்து ரன்னர் முனைக்கு அடித்து குரோனியேவை ரன் அவுட் செய்தார்.
எந்த கேப்டனும் இதுவரை ஒரு வீரரை ரன் அவுட் செய்வதற்காக ஒரு சிறப்பு உத்தியைக் கையாண்டுப் பார்த்ததில்லை. குரோனியேவே இந்தப் பொறியில் சிக்கியதை அறிந்திருக்கவில்லை. பிற்பாடு ஸ்டீவ் வாஹின் இந்த உத்தி வேறு ஒரு சந்தர்ப்பத்தில்தான் வெளி உலகிற்கு பேட்டி மூலம் தெரியவந்தது. மைக்கேல் கிளார்க் உண்மையில் எவ்வளவு பெரிய கேப்டன், ஸ்டீவ் வாஹ், ரிக்கி பாண்டிங்கை விட பெரிய கேப்டன் என்பது பலரும் அறியாததே. அதை இயன் சாப்பல் சொல்லித்தான் கேட்க வேண்டும்.
ஆகவே, கேப்டன்கள் வேலை உத்தி வகுப்பது. இதில், சில உத்திகள் உண்மையில் வித்தியாசமாக இருக்கும். மற்றபடி சாதாரண கேப்டன்சி உத்திகள் கிரிக்கெட் ஆரம்பித்த காலக்கட்டத்திலிருந்தே இருந்து வந்துள்ளன. இந்த சாதாரணங்களை ஒரு கேப்டனின் சாதுரியமாக விதந்தோத வேண்டியதில்லை என்றே தோன்றுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT