Published : 08 Apr 2023 06:36 AM
Last Updated : 08 Apr 2023 06:36 AM

முதல்தர கிரிக்கெட்டில் பங்கேற்ற அனுபவம் இல்லாமலேயே ஐபிஎல் தொடரில் பிரகாசித்துள்ள சுயாஷ் சர்மா

புதுடெல்லி: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 205 ரன்கள் இலக்கை துரத்திய பெங்களூரு அணியானது 17.4 ஓவர்களில் 123 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கொல்கத்தா அணியின் வெற்றியில் 19 வயதான அறிமுக சுழற்பந்து வீச்சாளரான சுயாஷ் சர்மாவும் சிறந்த பங்களிப்பை வழங்கினார்.

வெங்கடேஷ் ஐயருக்கு பதிலாக இம்பேக்ட் பிளேயர் விதியின் கீழ் களம் இறங்கிய சுயாஷ் சர்மா தனது லெக் ஸ்பின்னால் தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத், கரண் சர்மா ஆகியோரது விக்கெட்களை கைப்பற்றினார். முஷ்டாக் அலி அல்லது விஜய் ஹசாரே உள்ளிட்ட முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் சுயாஷ் விளையாடியது இல்லை. டெல்லி யு-25 அணியில் விளையாடி வருகிறார். முதல்தர போட்டிகளின் அனுபவம் இல்லாமல் போட்டியை காண வந்த சுமார் 70 ஆயிரம் ரசிகர்களின் முன்னிலையில் எந்தவித அழுத்தமும் இல்லாமல் சுயாஷ் சிறப்பான திறனை வெளிப்படுத்தியது அனைவரது மத்தியிலும் கவனம் பெற்றுள்ளது.

இத்தனைக்கும் ஏலத்தில் சுயாஷை அவரது அடிப்படை விலையான ரூ.20 லட்சத்துக்கு தான் கொல்கத்தா அணி வாங்கி இருந்தது. கிழக்கு டெல்லியின் பஜன்புரா பகுதியைச் சேர்ந்தவர் சுயாஷ் சர்மா. வழக்கமான லெக் ஸ்பின்னில் இருந்து சுயாஷின் பந்து வீச்சு வேறுவிதமாக இருந்தது. அவரது கையின் வேகம், லெக் பிரேக், கூக்ளி ஆகியவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. நீண்ட தலைமுடி, வசீகரிக்கும் உடல் மொழியுடன் இளம் கன்றாக தனது வருகையை உலகம் அறியச் செய்துள்ள சுயாஷின் கிரிக்கெட் பயணம் எளிதானது இல்லை.

கொல்கத்தா, சென்னை அல்லது மும்பையைப் போன்று இல்லாமல், டெல்லி கிளப் கிரிக்கெட் லாபகரமானது அல்ல, ஏனெனில் டெல்லியில் எந்த கிளப்களும் பணம் கொடுப்பது இல்லை மற்றும் முறையான ஒப்பந்தங்கள் எதுவும் இருக்காது. டெல்லி கிரிக்கெட்டில் குறைந்தபட்சம் 10-15 வாக்குகளைக் கட்டுப்படுத்தும் ஒரு கிளப் அல்லது தனிப்பட்ட உறுப்பினர்களிடமிருந்து வலுவான ஆதரவு இல்லையென்றால், மாநில அணிகளில் பல்வேறு வயதுக்குட்பட்ட அணிகளில் வாய்ப்பு பெறுவது கடினம். இதுபோன்ற கிரிக்கெட் அரசியலை தனது திறமையால் வென்றே சுயாஷ் தனக்கான வாய்ப்பை பெற்றுள்ளார்.

இதுகுறித்து டெல்லி பயிற்சியாளர் ரந்திர் சிங் கூறியதாவது: சுயாஷுக்கு இது எளிதான பயணம் அல்ல. அவர் முன்னாள் டெல்லி சுழற்பந்து வீச்சாளர் சுரேஷ் பத்ராவின் மாணவர் ஆவார். அவரது கிளப்பிற்காக சுயாஷ் விளையாடி வந்தார். சுரேஷ் பத்ராவை கரோனா தொற்றில் இழந்தோம். அதன் பிறகு சுயாஷ், பயிற்சி பெற வேண்டும் என என்னிடம் வந்தார். டெல்லி கிரிக்கெட் சங்க லீக்கில் எனது மெட்ராஸ் கிளப்பிற்காகவும், ஓபன் போட்டிகளில் ரன்-ஸ்டார் கிளப்பிற்காகவும் விளையாடும் வாய்ப்பை சுயாஷுக்கு கொடுத்தேன்.

பொருளாதார ரீதியாக நல்ல குடும்பத்தில் இருந்து வராத சுயாஷுக்கு கடந்த ஒரு வருடம் மிகவும் கடினமாக இருந்தது. அவரது தந்தைக்கு புற்று நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கான மருத்துவ செலவுக்கு டெல்லியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரர்களின் திறனை கண்டறியும் குழுவின் மேலாளருமான ராகுல் சங்வி உதவி செய்தார். இதனால் ராகுல் சங்விக்கு சுயாஷ் என்றென்றும் கடமைப்பட்டிருப்பார் என்று நினைக்கிறேன். டெல்லி கிளப் கிரிக்கெட்டில் சுயாஷுக்கு நாங்கள் எப்போதும் பணம் வழங்கியது இல்லை.

அவர்மட்டும் அல்ல யாருக்கும் பணம் கிடைக்காது. தொழில்முறை கிரிக்கெட்டில், இந்திய அணிக்காகவும் விளையாடி இருந்தால் மட்டுமே கிளப் போட்டிகளில் வருவாய்
பெறமுடியும். எங்கள் கிளப்பில் இருந்து 5 சுழற்பந்து வீச்சாள்கள் இதுவரை ஐபிஎல் தொடரில் விளையாடி உள்ளனர். பவன் நெகி, பிரதீப் சாஹூ, தேஜஸ் பரோகா,
யுவேந்திர சாஹல் ஆகியோரது வரிசையில் தற்போது சுயாஷும் ஐபிஎல் தொடரில் விளையாடுகிறார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற டெல்லி கிரிக்கெட் சங்க லீக்கில்தான் சுயாஷின் வேகமான கூக்ளிகள் பிரபலமடைந்து அதிக விக்கெட்டுகளை வீழ்த்தினார். டெல்லி கிரிக்கெட் சங்க சாலஞ்சர் டிராபி தொடரில் 7 விக்கெட்கள் வீழ்த்தினார். இதன் மூலம் 25 வயதுக்கு உட்பட்டோருக்கான டெல்லி அணியில் இடம் பிடித்து வெள்ளை பந்து போட்டிகளில் விளையாடினார். ஆனால் வேடிக்கை என்னவென்றால் சிகே நாயுடு டிராபி உள்ளிட்ட (டெஸ்ட் போட்டி) தொடர்களில் அவர், கைவிடப்பட்டார். வாய்ப்பு கொடுக்கவில்லை என்றால் அவருடையை திறன் எப்படி தெரிய வரும்” என்றார்.

25 வயதுக்கு உட்பட்டோருக்கான டெல்லி அணி தேர்வுக்கு பிரதானமாக அமைந்த டெல்லி கிரிக்கெட் சங்க சாலஞ்சர் டிராபியில் சுயாஷ் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தினார். ஆனால் அதுமட்டும் போதுமானதாக இருக்கவில்லை. ஏனெனில் சுயாஷ் ராஜஸ்தானை வசிப்பிடமாக கொண்டவர் என்று வதந்தி பரவி உள்ளது. அந்த மாநி
லத்தை சேர்ந்த ககன் கோடா தேர்வுக்குழு தலைவராகவும், பங்கஜ் சிங் யு-25 தலைமை பயிற்சியாளராகவும் உள்ளதால் அவர் ராஜஸ்தான் என டெல்லி கிரிக்கெட் சங்க வட்டாரத்தில் வதந்திகள் பரவின.

ஆனால் சுயாஷ், டெல்லியில் அனைத்து கிரிக்கெட்டையும் விளையாடியதால் அது பொய்யானது. இதனால் டெல்லி யு-25 அணியின் பயிற்சியாளர் பங்கஜ் சிங், மற்றும் தேர்வுக்குழு தலைவர் ககன் கோடா ஆகியோர் பிசிசிஐ யு-25 போட்டிக்கான வெள்ளை பந்துஅணியில் சுயாஷை சேர்த்தனர்.

இதுகுறித்து பங்கஜ் சிங் கூறும்போது, “என்னைப் பொறுத்தவரை வீரர்கள் தேர்வின் போது நான் அவரிடம் எந்த வகையான திறமையைக் கண்டேன் என்பதுதான் முக்கியம். சுயாஷ் திறமையானவர், இதனாலேயே அவரை யு-25 அணியில் சேர்க்க விரும்பினேன். ஒரு பயிற்சியாளராக, அவரது அடிப்படை திறமையை சரிபார்க்க விரும்பினேன். அவரால் பந்தை மேற்பரப்பில் இருந்து திருப்ப முடியும்.

அவர் மிகவும் உயரமாக இல்லை, ஆனால் பந்து வீசும் நுட்பம் நன்றாக இருந்தது.மேலும் லெக்-பிரேக் மற்றும் கூக்ளியை எந்தவித மாற்றமும் இல்லாமல் வீசுவது என்பது ஒரு சிறப்பு திறமை. அது அவரிடம் இருந்தது. அவரது கூக்ளியின் வேகம் கிட்டத்தட்ட லெக்-பிரேக் கிற்கு சமமாக உள்ளது. மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர்கள் பலர் வீசும் கூக்ளியின் வேகம் குறைவாகவே இருக்கும். இங்குதான் சுயாஷ் தனித்து நிற்கிறார்.

ரஞ்சி டிராபி, விஜய் ஹசாரே டிராபி, சையது முஸ்டாக் அலி தொடர் என எந்தவித முதல்தர கிரிக்கெட்டிலும் பங்கேற்காமல் நேரடியாக ஐபிஎல் தொடரில் பங்கேற்று சிறந்த திறனை வெளிப்படுத்துவது என்பது கடினமே, இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் அதற்கான திறமை அவரிடம் உள்ளது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x